Saturday 10 August, 2013

தலைவா - முழுமையான விமர்சனம்



இரண்டு நாட்களாக கொலைப்பசியாக இருக்கிறீர்கள். அப்படிபட்ட நேரத்தில், ஒரு ஹோட்டலுக்கு செல்கிறீர்கள்..ஏற்கனவே அருமையான சாப்பாடு போட்ட இடம். கண்டிப்பாக நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நினைப்பில் செல்கிறீர்கள்..இலைமேல் வகை, வகையான பதார்த்தம் வைக்கிறார்கள்...பொரியலை எடுத்து சாப்பிடால், ஒரே உப்பு..சரி கூட்டு எடுத்து சாப்பிடால், ஒரே புளிப்பு..ஆனால், ரசம், தயிர் மற்றும் சூப்பர்..சோறும் வைக்கவில்லை..எப்படி இருக்கும் உங்களுக்கு..

அப்படிப்பட மனநிலைதான் தலைவா படம் பார்த்து முடித்து வந்தது. நண்பன், துப்பாக்கி என்று விஜய் நம்பிக்கையளித்து கொண்டிருந்த நேரத்தில், தலைவா என்ற தலைப்பே, பல எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருந்தது. மற்றபடி,இயக்குநர் விஜய்யும், கிரீடம், மதராசபட்டினம், தெய்வதிருமகள் என்று மிகுந்த நம்பிக்கை அளித்திருந்தார்..அப்படிபட்ட் மனநிலையில் படத்திற்கு சென்று ஏமாற்ற மனநிலையில் வெளிவந்ததன் விளைவே, நான் முன்பு எழுதிய "குருவி, சுறாவை மிஞ்சிய விமர்சனம்.." அதை விமர்சனம் என்று சொல்வதை விட ஒரு ஏமாற்ற மனநிலை என்றே சொல்லலாம்..படத்தில், நன்றாக இருந்த சில விஷயங்களை, அந்த ஏமாற்ற மனநிலையில் எழுத தவறவிட்டுவிட்டேன்..இதோ முழுமையான விமர்சனம்..

மும்பையில் ஒரு பெரிய டான் இறந்துவிட்டார், இனிமேல் எனக்குதாண்டா மும்பை என்று வில்லன் கர்ஜித்ததோடு ஆரம்பித்தது..அப்படிப்பட்ட கலவரத்தில், நாசர் குழந்தையை காப்பாற்றும் சத்யராஜ், சந்தர்ப்ப சூழ்நிலையால், தன்னுடைய குழந்தையான விஜய்யையும், நாசரோடு அனுப்பி விட்டு, அம்மக்கள் கூட்டத்துக்கு தலைவராகிறார்..

நாசரோடு ஆஸ்திரேலியாவில் வளரும் விஜய் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியும், "தமிழ்பசங்க" என்று ஒரு டான்ஸ் குரூப்பும் வைத்திருக்கிறார். அமலாபாலை எதேச்சையாக சந்தித்து காதல் வசப்பட்டு, அமலாபாலின் அப்பா கேட்டு கொண்டதால், சத்யராஜை பார்க்க சொல்லாமல் கொள்ளாமல், மும்பை வருகிறார்கள். வந்த இடத்தில் சத்யராஜ், ஒரு டான் என்று தெரிந்து அதிரும் நேரத்தில், வில்லன்கள் சதியால் கொல்லப்பட, விஜய் அந்த கூட்டத்துக்கு தலைவராவதுதான் கதை..

ஆஸ்திரேலியாவில் சந்தானம், விஜய் செய்யும் லூட்டிகள் கண்டிப்பாக சிரிக்கவைக்கிறது. அதுவும் சந்தானம் அடிக்கும் பஞ்ச்சுக்கள் செம..அவரும், விஜய்யும், சேர்ந்து "ப்ரோ.." என்று கலாய்க்கும் இடங்கள், "அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுதபூஜை போட நினைக்ககூடாது ப்ரோ" போன்ற டயலாக்குகள் அருமை..சந்தானம், முதல் பாதிவரை கலகலப்பாக கொண்டு செல்கிறார். போதாதுக்கு, சாம் ஆண்டர்சன் வந்து டான்ஸ் ஆடி கலகலக்க வைக்கிறார்..

முதல்பாதியில், விஜய்-அமலாபால் சம்பந்தமான காதல் காட்சிகள் கொஞ்சம் போரடித்தாலும், அமலா பால் இந்த படத்துக்கு பொருத்தமான காஸ்டிங்கா என்று யோசிக்க வைக்கிறது. 

இடைவேளை வரை அருமையாக சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாவது பாதியில் அப்படியே யூடர்ன் அடிக்கிறது. இயக்குநர் விஜய் ஏதாவது புதிதாக ஏன் இரண்டாவது பாகத்தை எடுக்காமல், ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்தும், புளித்தும்போன, தேவர்மகன், தளபதி போன்ற படங்களில் பார்த்த அதே சீன்களை எடுத்திருக்கிறார் என்ற கோபம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. ஒவ்வொரு காட்சியையும் எளிதாக யூகிக்க முடிவது பலவீனம். அதுவும், கூட்டத்தில் இவர்தான் துரோகியாக இருப்பார் என்று குழந்தை கூட சொல்லிவிடும்.

விஜய் முடிந்தவரைக்கும் நன்றாக செய்திருக்கிறார். முதல் பாதியில் சந்தானத்தோடு சேர்ந்து கலாய்க்கும் இடங்களாகட்டும், தலைவராக மாறியபின் காட்டும் அழுத்தமாகட்டும், முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார். ஆனால், இடைவேளைக்கு அப்புறம் திரைக்கதை சொதப்பியதால்..ப்ச்..அனைத்தும் விழலுக்கு இழைத்த நீர்...

நான் பார்த்தவரையில் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை. பில்டப் காட்சிகள் வேண்டுமானல் நிறைய இருக்கிறது. குறிப்பாக "அய்யா, நீங்கதான் இதுக்கு நியாயம் சொல்லணும்..." வகையான காட்சிகள்...

இடைவேளை அப்புறம் உள்ள போர்சன்களை புதிதாக எடுத்திருந்தால், விஜய்க்கு இன்னொரு வெற்றியாக இருந்திருக்கும். "வாங்கண்ணா, வணக்கங்கண்ணா"  பாட்டு தவிர, ஜி.வி பிரகாஷ் எந்த பாடல்களிலும் ஜொலிக்க முடியாதது துரதிருஷ்டம்..ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூட கைகொடுக்காதது சோகம். குறிப்பாக, விஜய் முதல் முதலில் கத்தியை பிடிக்கும் இடம் எப்படி இருந்திருக்கவேண்டும். இதுபோன்ற படங்களில் ஆக்சன் பிளாக்குகளில், ஒரு ஸ்டைலிஸ் இருக்கவேண்டும்..ஆனால், இந்த படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங்க்..

முடிவாக தலைவா - இடைவேளை வரை டாப்பு..இடைவேளைக்கு அப்புறம் ஆப்பு..

4 comments:

Unknown said...

இடைவேளை வரை டாப்பு..இடைவேளைக்கு அப்புறம் ஆப்பு..
\\\\\\\\\\\\\\

சூப்பர்

Unknown said...

அப்ப நூறு நாள் ஓடாது... 50 நாள் ஓடும்... கரெக்டா ... பாதி படம் நல்ல இருக்குன்னு நீங்க தானே சொன்னிங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

இடைவேளைக்கு பிறகு தியேட்டரில் யாரும் இருக்க மாட்டாங்க//

Unknown said...

Apo 1st off la santhanam than hero

Post a Comment