Wednesday, 8 June 2011

இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்

பொதுவாக காலையில் எழுந்தவுடன் தினமும் “தட்ஸ்தமிழ்” செய்திகள் படிப்பது வழக்கம். அலுவலகம் சென்றவுடன் படித்த செய்திகள் கணநேரத்தில் மறந்துவிடும். ஆனால், இன்று படித்த ஒரு செய்தி, இன்னும் என் நெஞ்சைப் பிடித்து உலுக்குகிறது. மனதை ஏதோ செய்கிறது. எதிலும் லயிக்கமுடியாமல் இழுத்துப்பிடிக்கிறது. அந்த செய்தி

“சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் விபத்துக்குள்ளாகி 23 பேர் மரணம்”

ஒருநிமிடம் இதை படித்துவிட்டு உச்சுக்கொட்டிவிட்டு அடுத்தநிமிடம் வேலையைப் பார்க்கப்போய் விடுகிறோம். எத்தனை கனவுகள், எத்தனை நினைவுகள், எத்தனை லட்சியங்கள், எத்தனை அனுபவங்கள்..அனைத்தும் ஒரு நொடியில், ஒரே நொடியில் பொசுங்கிப் போய்விட்டதே, அழுகைக்கூட அவகாசம் தராமல். அந்த பேருந்தின் எத்தனை இதயங்கள் காலை வீடு சென்று தன் குழந்தையை கொஞ்ச நினைத்திருக்கும், எத்தனை இதயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் கண்டிருக்கும். எத்தனை இதயங்கள், வீட்டில் காத்திருக்கும் தாயைப் பார்க்க சென்றிருக்கும். அத்தனையும் ஒரு நொடியில்…

எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், ஒழுங்கின்மை. ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளை பற்றி எழுதினால் ஒரு புத்தகமே போடலாம்.. கொள்ளை அடித்தால் கூட, அட பணம் போய்விட்டது என்று அலட்சியப்படுத்தலாம், ஆனால், விலைமதிக்கமுடியாத உயிர்கள் போனால். அப்படி என்ன ஒரு வேகம் வேண்டி கிடக்கிறது. அந்த சாலையில் போகவேண்டிய வேகத்தில் போயிருந்தால், இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை. சாதாரண பஸ் பயணம் 8 மணிநேரம் என்றால், நாங்கள் ஆம்னி பஸ் 5 மணிநேரத்தில் சென்றுவிடுவோம் என்ற ஒழுங்கின்மையே இத்தனைக்கும் காரணம். எந்த போக்குவரத்து காவலராவது வழிமறைத்தால், இருக்கவே இருக்கு 50 ருபாய் லஞ்சம்..போய்கிட்டே இருப்போம்..சே..என்ன கொடுமை இது..

ஒருமுறை டிரைவர் பக்கத்தில் சென்று அமர்ந்து பாருங்கள், நான் சொல்லும் வார்த்தைகளின் விபரீதம் புரியும். சத்தியமாக சொல்லுகிறேன்..அடுத்தமுறை அருகில் அமரவே மாட்டீர்கள். அவ்வளவு வேகம்..ஒழுங்கின்மை..அப்படி 2 மணிநேரம் முன்பாக போய் அப்படி என்னதான்…..சத்தியமாக..கோபத்தில் கெட்டவார்த்தை வருகிறது..

ஒவ்வொரு சாலையிலும், இவ்வளவு வேகம்தான் செல்லவேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையும் உண்டு. ஆனால் ஒருமுறையாவது, எந்த பேருந்தையாவது நிறுத்தி, அபராதம் வாங்கியதாக வரலாற்றில் கேள்விப்பட்டதில்லை. அப்படியே நிறுத்தினாலும் இருக்கவே இருக்கிறது, சைடில் 50 ரூபாய்..அப்படியே பழகிவிட்டோம்..வாங்கியும் கொடுத்தும்..இதுபோன்று மொத்தமாக பறிகொடுக்கும்போதும், அந்த வலி தெரியும்.

வழக்கம்போல தமிழக அரசு இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் என்று அறிவித்திருக்கிறது. உயிரின் மதிப்பும் அவ்வளவுதான் போலிருக்கிறது. இந்த ஒரு வாரத்திற்கு பாருங்கள் எங்கு பார்த்தாலும் செக்கிங்காக இருக்கும். எல்லா டிரைவர்களும் ஒழுங்காக செல்லுவார்கள். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த வாரமே, திரும்பவும் ஆரம்பித்துவிடும்..அதே வேகம்..அதே ஒழுங்கின்மை..அதே கையூட்டு…அப்புறம் மொத்தமாக இப்படி வாரிக்கொடுத்தல்..

இவர்களைப் பார்க்கும்போது, சட்டையைப் பிடித்து ஒரு கேள்வி கேட்க ஆசை..”இன்னும் எத்தனை உயிர் பலிகொடுக்கவேண்டும், இவையெல்லாம் நடக்காமல் இருக்க…”

8 comments:

FREIND-நண்பன் said...
This comment has been removed by the author.
FREIND-நண்பன் said...

எந்த ஆம்னி பஸ்-ன்னு சொல்லலையா ?
பண்டிகை காலத்துல இவங்க வைக்கிற டிக்கெட்-ரேட் பத்தி யாருமே கண்டுக்குறது இல்லை...

http://rsksudhakar.blogspot.com/

அமுதா கிருஷ்ணா said...

நேற்று இரவு டிவியில் செய்தி பார்க்க,கேட்க ரொம்ப பயமாய் இருந்தது. இந்த பஸ் விபத்து,சென்னையில் ஒரு வீட்டில் ஏசி வெடித்து மூவர் பலி,ஒரு டாக்டர் பெண்ணின் கணவனை அந்த பெண்ணின் பெற்றோரே கொன்ற பயங்கரம்,மைசூரில் யானைகள் இரண்டு கடைவீதியில் செய்த அட்டகாசம்..தேதியினை பார்த்தால் 8..

பாலா said...

இன்னும் இதயம் கனத்துக் கொண்டுதான் இருக்கிறது. கொடூரம்.

அவிய்ங்க ராசா said...

வருகைக்கு நன்றி நண்பன், அமுதா, பாலா...

டக்கால்டி said...

எல்லாம் சரிதாண்ணே...ஆனா மெதுவா போனா பயணிகளே ஓட்டுனர்களை வேகமாக போகச் சொல்லி கூச்சல் போடுவதை கவனித்து இருக்கிறீர்களா? தப்பு பயணிகள் மேலும் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது...

bandhu said...

உண்மையிலேயே இந்த பஸ்களில் பயணம் செய்வது உயிரை பணயம் வைப்பது போல! இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஒழுங்கின்மையிலேயே உழன்று கொண்டு இருக்கப்போகிறோம்?

Jackiesekar said...

next..... Vera Vera Vera .... Aduthu....

Post a Comment