சென்னையில், வேலை தேடும்போது, திருவல்லிக்கேணி மேன்சன் தான் நமக்கெல்லாம் சொர்க்கம். கையில் ஒரு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு சாப்ட்வர் கம்பெனியாக ஏறி இறங்கி, “சார்..ஐ.ஆம் கம்ப்யூட்டர் க்ராஜூவேட்..தி இஸ் மை ரெஸ்யூம்” என்று கம்பெனி செக்யூரிட்டிகளிடம் ஓட்டை ஆங்கிலத்தில் கெஞ்சி, சற்று இறங்கி வந்தால், பக்கத்து டீ கடையில் ஒரு காபியும், சிகரெட்டும் வாங்கி கொடுத்து “சார்..ஹெச். ஆர் வந்தா அப்படியே,, இந்த ரெஸ்யூமையும் தள்ளிவிடுங்க சார்” என்று கெஞ்சல் பார்வை பார்த்த காலங்கள் எல்லாம், இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
புதன் காலை “ஹிந்து” பேப்பர் “ஆப்பர்சூனிட்டிஸ்” பக்கத்தை பார்த்தவுடன் கண்கள் ஆட்டோமேட்டிக்காக தேடுவது “ப்ரசர்ஸ் வாண்டட்” வகையறாக்களைத்தான். சலிக்காமல், மே மாதத்தின் புழுக்கத்திலும் ஒரு டையையும், அயர்ன் பண்ணிய சட்டையையும் போட்டுக்கொண்டு, ஒரு 20 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு, எம்.எல்.ஏ ஹாஸ்டல் விடுதியில் பஸ்நிறுத்தத்தில் நிற்கும்போது, அந்தப்பக்கம் செல்லும் சாப்ட்வேர் கம்பெனிகளின் சொகுசு பேருந்துகளில் சன்னலோரம் ஒய்யாராமாக தூங்கிக்கொண்டு செல்லும் பசங்களையும், பெண்களையும் பார்க்கும்போது, ஒரு வெறிவருமே, அந்த வெறியில் மதிய சாப்பாடே மறந்துவிடும். “எப்படியாவது இந்த பஸ்ஸில் ஒரு தடவையாவது ஏறிரணும்டா” என்ற தீர்க்கமான எண்ணத்துடன் என் கைகள் அந்த ரெஸ்யூமை இறுகப் பற்றிருக்கும்.
கையில் இருக்கும் 20ரூபாயில் சரவணபவனிலா சாப்பிடமுடியும். தேவி தியேட்டர் பின்பக்கம் “சாய் மெஸ் என்ற சிற்றுண்டி உணவகம் தான் நமக்கு சரவணபவன். நாங்கள் அடையாளத்துக்காக கூப்பிடுவது “பாபா” ஹோட்டல். 15 ரூபாய் கொடுத்தால், கொஞ்சம் புளியோதரை, கொஞ்சம் தயிர்சாதம் கிடைக்கும். காலையில் குடித்த உணவான தண்ணீரும், இரவு சாப்பிடப்போகும் உணவான பர்பியும், சொற்பநிமிடத்தில் மறந்து போகும். அவ்வளவு ருசி…வெளியில் உக்கார்ந்து, ஒரு தட்டில் வைத்துதான் சாப்பிடவேண்டும்.
அந்த சிற்றுண்டியின் ஓனர்தான் நாங்கள் செல்லமாக அழைக்கும் “சாய் மாமா”. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அவரை பார்த்தாலே, அன்றைய பொழுது நன்றாக போகும் என்ற நம்பிக்கை. மூச்சுக்கு மூன்று தடவை, அவர் “சாய்..சாய்” என்று கூப்பிடும்போது, அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வரும்..”வாங்க சாய்..எப்படி சாய் இருக்கீங்க சாய்..தோசை வேணுமா சாய்” என்பார்..
“அது ஏன் மாமா எப்ப பார்த்தாலும் சாய்..சாய்..”சாய்” ன்னா குடிக்கிற சாய் யா” என்று கிண்டல் செய்தாலும் அதற்கு கோபப்படமாட்டார்
“எங்க கடவுள் சாய்..அந்த சாய்பாபா தான் எங்களுக்கு எல்லாம்…” என்பார்..எப்போதெல்லாம் சென்னையில் சாய் பஜனை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருடைய கடை கண்டிப்பாக லீவு.. வருமானம் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. சாய்பஜனையை ஒருமுறை கூட மிஸ் பண்ணியதில்லை. அதனை சொல்லும்போது, அவர் கண்களில் பெருமிதம் மிளிருவதை நான் கவனிக்க தவறுதில்லை.
ஆனால் எனக்கென்னமோ சாய்பாபாவை பிடிப்பதில்லை, சாய்பாபா மட்டுமல்ல எனக்கு எந்த சாமியாரையும் பிடிக்காமல் இருந்தது. அதென்ன கடவுளுக்கும் நமக்கும் நடுவில்..அதுவும் குறிப்பாக அவர் செய்யும் மாயாஜாலங்கள், கையிலிருந்து அவர் எடுக்கும் விபூதி,தங்க செயின், லிங்கம் என்று அவர் செய்யும் மாயாஜாலங்களைப் பார்த்தபோது, கடுப்பாக இருந்தது. அதை உண்மை என்று நம்பி, அவர் காலில் விழுந்த ஜனங்களைப் பார்த்தபோது, பற்றிக்கொண்டு வந்தது…ஏன் இப்படி என்று கேள்வியும், அப்போது இருந்த பசியில் அடங்கிப்போனது. அவர் சாய்பாபாவின் மகிமைகளை பற்றிப் பேசும்போது, “நிறுத்துங்க மாமா” என்று ஓபனாக சொல்லிவிடுவேன்..
அப்படி ஒருநாளில், போன இண்டர்வியூக்கள் எல்லாம் பல்பு வாங்கியிருந்தேன். மிகவும் எரிச்சாலானேன்..யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. அதே எரிச்சலுடன் “சாய் மெஸ்” வந்தேன். பட்டினி வேறு, ஒருபக்கம் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது..
“மாமா..புளிச்சாதம் கொடுங்க”
“இல்ல சாய்..தீர்ந்து போச்சு,,”
“சரி..தயிர்சாதம்..”
“இப்ப சாய்..இப்பதான் ஆச்சு..”
எனக்கு கோபம் இரட்டிப்பானது..
“சரி..என்னதான் இருக்கு..”
“காலையில் வைச்ச கிச்சடி தான் இருக்கு..”
“கொடுங்க” என்று வாங்கினேன் அதே எரிச்சலுடன்..
ஒரு வாய்தான் வைத்திருப்பேன்..ஆரம்பித்தார்..
“சாய்.நேத்து சாய் பஜனை போயிருந்தேன்..எப்படி இருந்தது தெரியுமா சாய்..அப்படியே அந்த பகவானே நேரில் வந்த மாதிரி..”
“மாமா…கொஞ்சம் நிறுத்திருங்களா..எனக்கு அவரை பிடிக்காது..”
“சாய்..அவரை ஒரு நிமிசம் நேருல பார்த்தீங்கன்னா அப்படி சொல்லமாட்டீங்க..அவர் கடவுளோட அவதாரம்..அவருக்கு இறப்பே இல்லை..”
“மாமா..ரொம்ப ஓவரா பேசாதீங்க..அவரும் நம்மளை மாதிரியே ஒரு ஆளுதான்..என்ன கொஞ்சம் மேஜிக் தெரிஞ்சிருக்கு..அதை வைச்சு, உங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம் ஏமாத்துறாரு..நீங்களும் நம்புரீங்க..மாறுங்க மாமா.. ”
“இல்ல சாய்..உங்களுக்கெல்லாம் அது புரியாது..அதுக்கெல்லாம் ஒரு தீட்சை வேண்டும்….அவரோட கடைக்கண் பார்வைக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க தெரியுமா..”
“மாமா.அவரோட கடைக்கண் பார்வைக்காக காத்து நிற்கிற நேரத்துல , ரேஷன் கடையில நின்னீங்கன்னா, அரிசி, மண்ணெண்ணய்யாவது கிடைக்கும்” என்று குத்தினேன்..
அவ்வளவுதான்..அவருடைய முகம் மாறிவிட்டது..முதல் முதலாக அவருடைய முகத்தில் அவ்வளவு கோபத்தை அப்போதுதான் பார்க்கிறேன்..
“நீங்க கிளம்புங்க சாய்..இனிமேல் என் கடையில் சாப்பிட வராதீங்க சாய்..”
“மாமா…இதுக்கெல்லாம் போய் கோவிச்சுக்கிட்டீங்க..நீங்களும் பேசுனீங்க..நானும் பேசுனேன்..முடிஞ்சிருச்சு..இதுக்குப்போயி..”
“இல்ல சாய்..பாபா மகிமைய இப்ப உங்களுக்கு தெரியாது….அவருக்கு இறப்பே கிடையாது..அப்படியே இருந்தாலும், இன்னொரு அவதாரம் எடுப்பார்..இதெல்லாம் உங்க அறிவுக்கு எட்டாது..இனிமேல் என் கடைக்கு வராதீங்க” என்று திரும்பி கொண்டார்..
எனக்கு மனம் கஷ்டமாக போய்விட்டது. எரிச்சலில் அவருடைய மனதை சங்கடப்படுத்திவிட்டோமே என்று, எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றேன்..அதற்கப்புறம் அவருடைய கடைக்கு செல்வதில்லை. தெருவில் நடக்கும்போது பார்த்தாலும், பார்க்காத மாதிரி முகத்தை திருப்பிக் கொள்வார்…
இதோ, திருவல்லிக்கேணியை விட்டு விட்டு வந்து 10 வருடங்களாகின்றன். அடுத்தமுறை சென்னை வரும்போது, கண்டிப்பாக திருவல்லிக்கேணி செல்லலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக “சாய் மாமாவை” பார்த்து ஒரு கேள்வி கேக்கலாம் என்று..
“சொல்லுங்க மாமா..1.5 லட்சம் கோடி சொத்து சொந்தக்காரரான, சாய்பாபாவின் அடுத்த அவதாராமாக யாரை வணங்க ரெடியாக இருக்கிறீர்கள்..”
27 comments:
வெளிநாட்டுக்காரர்களும் எவ்ளோ பணம் தராங்க அந்த ஆசிரமத்திற்கு.
இடுகையின் முதல் இரண்டு பத்திகள்: இங்கேயும் சேம் பீலிங்க்ஸ் அண்ணே...
அப்புறம், நீங்க இப்போ அந்த சாய் மாமாவை பார்த்து நறுக்கென்று நாலு கேள்வி கேட்டாலும் வெட்கமே இல்லாமல் வேறு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார் பாருங்கள்...
-
அந்தப்பக்கம் செல்லும் சாப்ட்வேர் கம்பெனிகளின் சொகுசு பேருந்துகளில் சன்னலோரம் ஒய்யாராமாக தூங்கிக்கொண்டு செல்லும் பசங்களையும், பெண்களையும் பார்க்கும்போது, ஒரு வெறிவருமே, அந்த வெறியில் மதிய சாப்பாடே மறந்துவிடும். “எப்படியாவது இந்த பஸ்ஸில் ஒரு தடவையாவது ஏறிரணும்டா” என்ற தீர்க்கமான எண்ணத்துடன் என் கைகள் அந்த ரெஸ்யூமை இறுகப் பற்றிருக்கும்.
-
இந்த சொகுசு பஸ்களெல்லாம் வெளி நாட்டு கம்பனிகளோடதா இருக்கும், இல்ல வெளி நாட்டு கம்பெனிகளுக்கு சாஃப்ட்வேர் எழுதுற இந்திய கம்பெனிகளோடதா இருக்கும். ஆக, நீங்க எப்படி இருந்திருக்கீங்கன்னா, ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு எப்படியாவது சாஃப்ட்வேர் எழுதி கொடுத்துறனும்னு வெறியா இருந்திருக்கீங்க. இந்த நோக்கிலேய உங்களை பொறுத்த வரையிலும் ஒரு அர்த்தம் இருக்குன்னா, வெறும் ஒரு சாதாரண மெஸ் வைச்சு மாறாத புன்னகையுடன் வாழும் ஒரு மனிதரிடமும், அதை உபதேசிக்கும் சாயி (know your inner peace) யிடமும் ஒரு அர்த்தம் இருக்கும்.
அற்று நம்பிக்கை, நமக்கு பிடிப்பு தருது. அது ஆண்டவனோ, இல்லே ஐ.டி. பஸ்ஸோ (உங்க கதை).
ஆமா, எவ்வளவு பேருக்கு நீங்க அந்த திருவல்லிக்கேணி இடத்தில் இருந்து வேலை வாங்கி தந்தீங்க? அப்படி சிலருக்கு நம்பிக்கை (தனம்பிக்கை விட) கொடுத்திருந்தால் நீங்களும் சாயாத பாபா தான்.
நீங்க எங்கே (வேலை இடம்) தான் வேலை பார்க்குறீங்க? (வெளிநாடுன்னு தெரியுது)
நம்ம பதிவர்களுக்கு ரொம்பவும் பிடித்த முகமூடி என்ன தெரியுமா? பகுத்தறிவு முகமூடி. ஒருவர் இறந்த பிறகும், அவரையும் அவர் சார்ந்தவர்களையும் திட்டும் "இங்கிதம்" தமிழனுக்கும் மட்டும் தான் இருக்கிறது.
////////////////////////////
அமுதா கிருஷ்ணா said...
வெளிநாட்டுக்காரர்களும் எவ்ளோ பணம் தராங்க அந்த ஆசிரமத்திற்கு.
26 April 2011 12:53 AM
//////////////////////////////
நிஜம்தான் அமுதா..((
///////////////////////////
Philosophy Prabhakaran said...
இடுகையின் முதல் இரண்டு பத்திகள்: இங்கேயும் சேம் பீலிங்க்ஸ் அண்ணே...
26 April 2011 1:14 AM
Philosophy Prabhakaran said...
அப்புறம், நீங்க இப்போ அந்த சாய் மாமாவை பார்த்து நறுக்கென்று நாலு கேள்வி கேட்டாலும் வெட்கமே இல்லாமல் வேறு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார் பாருங்கள்...
/////////////////////////
நன்றி பிரபா..
///////////////////////////////
அ சகன் said...
-
அந்தப்பக்கம் செல்லும் சாப்ட்வேர் கம்பெனிகளின் சொகுசு பேருந்துகளில் சன்னலோரம் ஒய்யாராமாக தூங்கிக்கொண்டு செல்லும் பசங்களையும், பெண்களையும் பார்க்கும்போது, ஒரு வெறிவருமே, அந்த வெறியில் மதிய சாப்பாடே மறந்துவிடும். “எப்படியாவது இந்த பஸ்ஸில் ஒரு தடவையாவது ஏறிரணும்டா” என்ற தீர்க்கமான எண்ணத்துடன் என் கைகள் அந்த ரெஸ்யூமை இறுகப் பற்றிருக்கும்.
-
இந்த சொகுசு பஸ்களெல்லாம் வெளி நாட்டு கம்பனிகளோடதா இருக்கும், இல்ல வெளி நாட்டு கம்பெனிகளுக்கு சாஃப்ட்வேர் எழுதுற இந்திய கம்பெனிகளோடதா இருக்கும். ஆக, நீங்க எப்படி இருந்திருக்கீங்கன்னா, ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு எப்படியாவது சாஃப்ட்வேர் எழுதி கொடுத்துறனும்னு வெறியா இருந்திருக்கீங்க. இந்த நோக்கிலேய உங்களை பொறுத்த வரையிலும் ஒரு அர்த்தம் இருக்குன்னா, வெறும் ஒரு சாதாரண மெஸ் வைச்சு மாறாத புன்னகையுடன் வாழும் ஒரு மனிதரிடமும், அதை உபதேசிக்கும் சாயி (know your inner peace) யிடமும் ஒரு அர்த்தம் இருக்கும்.
26 April 2011 5:51 AM
////////////////////////////
சகன்..என்ன சொல்ல வருகிறீர்கள். நான் சாப்ட்வர் கம்பெனியில் வேலை பார்ப்பதற்கு ஊரை என்ன ஏமாற்றுகிறேன்.நான் கஷ்டப்படுகிறேன்..வேலை பார்க்கிறேன்.. சாய்பாபா போல மாறாத புன்னகையுடன் ஒருத்தர் இருப்பதால், ஒருவர் ஏமாற்றுவதையோ, ஏமாற்றப்படுவதையோ, ஏற்றுக் கொள்கிறீர்களா..
///////////////////////
Savitha said...
அற்று நம்பிக்கை, நமக்கு பிடிப்பு தருது. அது ஆண்டவனோ, இல்லே ஐ.டி. பஸ்ஸோ (உங்க கதை).
ஆமா, எவ்வளவு பேருக்கு நீங்க அந்த திருவல்லிக்கேணி இடத்தில் இருந்து வேலை வாங்கி தந்தீங்க? அப்படி சிலருக்கு நம்பிக்கை (தனம்பிக்கை விட) கொடுத்திருந்தால் நீங்களும் சாயாத பாபா தான்.
நீங்க எங்கே (வேலை இடம்) தான் வேலை பார்க்குறீங்க? (வெளிநாடுன்னு தெரியுது)
26 April 2011 5:51 AM
////////////////////////////
சவீதா..சாய்பாபா ஒன்றும் குறீயீடு அல்ல, நல்லது பண்ணினால் சாய்பாப என்று சொல்வதற்கு..கண்முன்னால் மாயஜாலம் காட்டி ஏமாற்றினாலும் பரவாயில்லை, என்று நம் கண்களை, நாமே கட்டிக்கொண்டுவிட்டோமே என்பதுதான் என் ஆதங்கம். மற்றபடி, நான் யாருக்கு வேலை வாங்கி தருகிறோனோ இல்லயோ, யாரையும் ஏமாற்றமால் இருக்கிறேன்..நாலு பேருக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு நாற்பது பேரை ஏமாற்றினால் ஒத்துக்கொள்வீர்களா..
///////////////////////////
Prasanna Rajan said...
நம்ம பதிவர்களுக்கு ரொம்பவும் பிடித்த முகமூடி என்ன தெரியுமா? பகுத்தறிவு முகமூடி. ஒருவர் இறந்த பிறகும், அவரையும் அவர் சார்ந்தவர்களையும் திட்டும் "இங்கிதம்" தமிழனுக்கும் மட்டும் தான் இருக்கிறது.
///////////////////////////
அணிந்துவிட்டுதான் போகட்டுமே..அணிந்து கொண்டு, ஒன்றும் கெடுதல் சொல்லவில்லையே..நல்லதுதானே சொல்லுகிறார்கள். இறந்துவிட்டால், ஒருவர் செய்த ஏமாற்றுவேலையை யாரும் கண்டுக்க கூடாது என்பது, இங்கிதம் என்றால், அந்த இங்கிதம் எனக்கு தேவையில்லை.
சாயி பாபா யாரை ஏமாற்றினார்? நீங்களாகவே அவர் மற்றவர்களை ஏமாற்றினார் என்று எதற்கு வருத்தப்படுகிறீர்கள்? அவர் செய்த சித்து விளையாட்டுகள் மூலம் வந்த நன்கொடையை என்ன செய்தார்? சமூகத்துக்கு தானே கொடுத்தார்? சிலபேர் கொடுத்த நன்கொடையை பலரிடமும் சேரும்படி சமூக சேவைகள் செய்தார். யாரையும் அவர் வெறுக்க சொல்லவில்லை.
அவர் செய்த நல்ல பல செயல்கள் அவர் கடவுள்தான் என்று பலமாக சொல்கின்றன.
மற்றபடி, ஏன் இறந்தார், ஏன் 96 வயது வரை வாழவில்லை, விபூதி என்பதெல்லாம் வெறும் மேஜிக் போன்றவை என்னை பொறுத்தவரை அர்த்தமற்ற பிதற்றல்களே!
@ bandhu

உங்களுடைய பாக்கெட்டில் இருந்து ஒருவன் நூறு ரூபாயை ஆட்டையைப் போட்டு அதில் உங்களுக்கு ஒரே ஒரு பிஸ்கோத்து வாங்கிக்கொடுத்தால் அவனை திருடன் என்பீர்களா அல்லது மிகப்பெரிய சமூகசேவகர் எனக்கு பிஸ்கோத்து வாங்கித் தந்தார் என்று உளருவீர்களா...???
@ bandhu
மற்றபடி, ஏன் இறந்தார், ஏன் 96 வயது வரை வாழவில்லை, விபூதி என்பதெல்லாம் வெறும் மேஜிக் போன்றவை என்னை பொறுத்தவரை அர்த்தமற்ற பிதற்றல்களே!
சப்பைக்கட்டு... விபூதி மேஜிக் பற்றி வீடியோ பூட்டேஜ் எல்லாம் கூட இருக்கின்றன... ஊரை ஏமாற்றியது போதும்...
@ Prasanna Rajan
// ஒருவர் இறந்த பிறகும், அவரையும் அவர் சார்ந்தவர்களையும் திட்டும் "இங்கிதம்" தமிழனுக்கும் மட்டும் தான் இருக்கிறது //
இதே சிந்தனை எனக்கும் தோன்றியது... ஆம்... ஒருவர் இறந்தபிறகு அவரைத் திட்டுவது தவறுதான்... ஆனால் இப்போது இந்த மனிதரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தாமால் விட்டால் எதிர்காலத்தில், சாமியாராக வளம் வந்த இந்த ஆசாமியை சாமி ஆக்கிவிடுவார்கள்... அந்த வரலாற்றுப்பிழை நிகழ வேண்டுமா...???
// ஒருவர் இறந்த பிறகும், அவரையும் அவர் சார்ந்தவர்களையும் திட்டும் "இங்கிதம்" தமிழனுக்கும் மட்டும் தான் இருக்கிறது //
இவரு தான் சாதாரண மனிதரே இல்லையே, சாதரண மனிதர்கள் இறந்தால் அப்படிப் பேசக்கூடாது. இவர் ஏற்படுத்தி இருக்கும் வட்டம் பெரியது. இவர் செத்த உடனே வட்டம் மறைந்துவிடாது அதனால் இங்கிதத்திற்கு இங்கு வேலை இல்லை என்றே நினைக்கிறேன். பல நூறு ஆண்டுகளுக்குப் பின் செத்த நரகாசுரனை நினைத்து இன்னும் மகிழ்ச்சி பொங்க தீபாவளி கொண்டாடுபவர்கள் நாம் சார்.
:)
//உங்களுடைய பாக்கெட்டில் இருந்து ஒருவன் நூறு ரூபாயை ஆட்டையைப் போட்டு அதில் உங்களுக்கு ஒரே ஒரு பிஸ்கோத்து வாங்கிக்கொடுத்தால் அவனை திருடன் என்பீர்களா அல்லது மிகப்பெரிய சமூகசேவகர் எனக்கு பிஸ்கோத்து வாங்கித் தந்தார் என்று உளருவீர்களா//
நான் தானமாக அளித்த நூறு ரூபாயை அவர் நூறு பேர்க்கு கொடுப்பதால் மகிழ்ச்சி அடைவேன்.
// நான் தானமாக அளித்த நூறு ரூபாயை அவர் நூறு பேர்க்கு கொடுப்பதால் மகிழ்ச்சி அடைவேன். //
ம்ம்ம் சரி... தானமாகவே இருக்கட்டும்... நீங்கள் கொடுத்த நூறு ரூபாயில் அவர் ஒரு ரூபாய்க்கு மட்டும் சமூக சேவை செய்துவிட்டு மீதி 99 ரூபாயை அவரது பாக்கெட்டில் போட்டுக்கொண்டால்...?
சரியாக சொன்னீங்க தலீவா !
//நீங்கள் கொடுத்த நூறு ரூபாயில் அவர் ஒரு ரூபாய்க்கு மட்டும் சமூக சேவை செய்துவிட்டு மீதி 99 ரூபாயை அவரது பாக்கெட்டில் போட்டுக்கொண்டால்...//
அப்படி நடந்திருந்தால் தவறு.
ஆனால், நான் அப்படி நடக்கவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் நடந்தது என்று நம்புகிறீர்கள் என நினைக்கிறேன்..
//மற்றபடி, ஏன் இறந்தார், ஏன் 96 வயது வரை வாழவில்லை, விபூதி என்பதெல்லாம் வெறும் மேஜிக் போன்றவை என்னை பொறுத்தவரை அர்த்தமற்ற பிதற்றல்களே!
சப்பைக்கட்டு... விபூதி மேஜிக் பற்றி வீடியோ பூட்டேஜ் எல்லாம் கூட இருக்கின்றன... ஊரை ஏமாற்றியது போதும்..//
I meant, these are irrelevant to me, whether true or false! நான் அவரை கடவுளாக வணங்குவதை இந்த செயல்கள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது!
அண்ணே அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...அதை அப்படியே விடுவது தான் நல்லது...மீண்டும் அவரைப் பார்த்தாலும்,அவர்(கடைக்காரர்) மேலுள்ள மரியாதைக்காகவது ஏடாகூட கேள்விகள் கேட்காமல் இருப்பது நல்லது...எனக்கும் சாய்பாபாவைப் பிடிக்காது
@ bandhu
// ஆனால், நான் அப்படி நடக்கவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் நடந்தது என்று நம்புகிறீர்கள் என நினைக்கிறேன்.. //
// I meant, these are irrelevant to me, whether true or false! நான் அவரை கடவுளாக வணங்குவதை இந்த செயல்கள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது! //
ஹி... ஹி... ஹி... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
டக்கால்ட்டியின் பதிலுள்ள முதல் வரியை காப்பி பேஸ்ட் செய்கிறேன்: அண்ணே அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...அதை அப்படியே விடுவது தான் நல்லது...
சிலருக்கு பாட்டு கேட்டால் மனஅமைதி கிடைக்கும், சிலருக்கு புத்தகம் படித்தால் மனஅமைதி கிடைக்கும், அதுபோல உங்களுக்கு சாய்பாபாவின் மீது பக்திகொள்வது மன அமைதியை தரும் என்றால் அது நல்லவிஷயம் தான்...
நல்ல விவாதத்திற்கு நன்றி கோவி, பிரபா, பந்து..
நன்றி அனானிமஸ் நண்பர்
நன்றி டகாட்ல்டி..
voted. +ve.
நல்ல விவாதம்... சாய்பாபா விசயத்துல உங்க கூட நானும் கூட்டணி ஹிஹி :த
Post a Comment