சிலநேரங்களில், நாம் எழுதியவற்றை நாமே திரும்பி பார்க்கும் சந்தர்ப்பம் வரும். அப்படி எழுதிய சில பதிவுகளைப் படிக்கும்போது, நாமே நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம். அப்படி நான் எழுதிய கடந்த பதிவு “பொன்னர் சங்கர் – சரித்திர நகைச்சுவை”. இதை படித்து சுயவிமர்சனம் செய்தபோது என்னை நானே காரி முகத்தில் உமிழ்ந்து கொண்டது மாதிரி இருந்தது.
ஒரு விமர்சனம் பொதுவாக , இரண்டு பக்கங்களையும் நியாயமாக அலசவேண்டும். தவறுகளை, எந்த எல்லைக்கும் சென்று கிண்டல் செய்யும் அதே நேரத்தில், அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் சுட்டி காட்டுவதே, ஒரு நியாயமான விமர்சனத்திற்கு அழகு. ஆனால் என்னுடைய விமர்சனம், அந்த படத்தைப் பற்றிய கிண்டல் செய்த வேளையில், அந்த படத்தில் தென்பட்ட நல்ல விஷயங்களை சுட்டிகாட்ட தவறிவிட்டதாகவே நினைக்கிறேன்.
அந்த படத்தில் எனக்கு தென்பட்ட நல்ல விஷயங்கள்..
1) துணை நடிகர்களின் உழைப்பு : ஆயிரக்கணக்கான, துணை நடிகர்களின் உழைப்பு கண்முன்பு தெரிகிறது. போர்க்காட்சி, மற்றும் நடனங்களில் இவ்வளவு பேரை வைத்து வேலை வாங்குவது சுலபமான காரியம் இல்லை. அதை டைரக்டர் இந்த படத்தில் சரியாக செய்துள்ளார் என்பது கருத்து
2) ஆர்ட் டைரக்சன் மற்றும் கேமிரா கோணங்கள் : சரித்திர படத்தில் ஆர்ட் டைரக்சன் சரியில்லை என்றால், படம் கேலிக்கூத்தாக மாறிவிடும். இந்த படத்தில் பல கோடி ரூபாயில் போடப்பட்டுள்ள, செட்கள், படத்தின் பிரமாண்டத்திற்கு உதவுதோடு, ஆர்ட் டைரக்டரின் உழைப்பைக் காட்டுகிறது. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்
மற்றபடி நான் பிந்தைய விமர்சனத்தில் சொல்லிய கருத்துக்களில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை(மேலே உள்ள விஷயங்களை சொல்லத் தவறியது தவிர). தெளிவில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களின் தவறான தெரிவு(முக்கியமாக ராஜ்கிரண், மீசையைத் தடவியபடி “ஷங்கர்” என்று சொல்லுவது – நன்றி கேபிள் அண்ணா..),, பிரசாந்தை, கதாபாத்திரத்தோடு, ஒன்ற விடாமல், ஹீரோயிசம் காட்டவைத்தது, என டைரக்டர் சறுக்கியது அப்பட்டமாக தெரிகிறது.
பலபேரின் உழைப்பை, ஒரு நிமிடத்தில் விமர்சனம் செய்து கிண்டல் பண்ணுவது மிகவும் சுலபமான காரியம், நான் முந்தைய பதிவில் செய்தது போல. ஆனால், அந்த கிண்டலுக்கும் மதிப்பு, அந்த படத்தில் உள்ள நல்லவிஷயங்களையும் சொல்லும்போது தான். அதுதான் குறைந்தபட்ச நேர்மையும், மனிதத்தன்மையும் கூட. கடந்த பதிவில் நான் இழந்த குறைந்த பட்ச நேர்மையை புதுப்பிப்பதின் முயற்சியே, இந்தப் பதிவின் நோக்கம் என்று சொல்லுவதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை.
2 comments:
மப்பு தெளிந்தவுடன் இந்த பதிவையும் ஒரு தபா திரும்பி பார்த்து இதற்கும் ஒரு திருத்தப்பட்ட விமர்சனம் எழுதுவீர்கள் என்ற தணியாத எதிர்பார்ப்புடன்,
பொன்னர் ஷங்கர் கொலைவெறி படை
அண்டார்டிகா கிளை
R u threaten by dmk?
Post a Comment