
சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்..பொதுவாக சன்னல் வழியே பார்ப்பது எனக்குப் பிடிக்கும்..வெளியில் சென்று அகலப் பார்ப்பதைவிட, சன்னலைத் திறந்து, கம்பிகளுக்கு இடையில் சிறிய இடைவெளியில் ஒரு முறை உலகத்தைப் பாருங்கள்..வித்தியாசமாக இருக்கும்..அது என்னவோ தெரியவில்லை..என் சன்னலில் மட்டும் எனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன்..ஓருமுறை ஒரு பிச்சைக்காரரைப் பார்த்து, அவருடன் கிடைத்த அனுபவங்களை “பிச்சைக்காரப் பய” என்று எழுதியிருந்தேன்..காலை நேரம் எழுந்தவுடனே, நேராக பல் விளக்க கூட செல்ல மாட்டேன்..சன்னல் அருகில் சென்று மெதுவாக கதவைத் திறப்பேன்..அதுவரை என் படுக்கை அறையில் அடைந்து கிடைந்த என் எண்ணங்களுக்கு சிறகு முளைத்து வெளியே பறப்பது போல் இருக்கும்..வெளியில் இருந்து புதிய எண்ணம் ஒன்று தென்றல் காற்றுடன் வந்து அப்படியே மூளைக்குள் ஏறும் பாருங்கள்..அன்றே புதிதாய் பிறந்தது போல் தோன்றும்..நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்..நீங்கள் அடுக்குமாடி நிறைந்திருந்த சென்னையில் வசித்தாலும் சரி..காலையில் எழுந்து சன்னல் கதவைத் திறந்து வெளியே பாருங்கள்..சூரியன் கூட நமக்காகவே உதித்தது போல இருக்கும்..அந்த நாள் பொழுது நமக்காகவே புலர்ந்தது போல் இருக்கும்..
இன்றும் கூட அதுபோலத்தான் சன்னலைத் திறந்தேன்.. என்றும் என்னைப் பார்த்து காலை வணக்கம் சொல்லும் சூரியனுக்கு அப்படி என்ன வெட்கம் என்று தெரியவில்லை..மேகத்தினிடையே மறைந்து கிடந்தது………பக்கத்து வீட்டில் கட்டாயத்திற்காக போடப்பட்ட சுப்ரபாதம் என் காதுகளில் வழக்கம் போல்..புற்களும் அன்றைக்கு மழையை எதிர்பார்த்திருந்தனவோ என்னவோ, இரவு பெய்த மழையில் நனைந்து தலை துவட்ட மறந்திருந்தன..அவைகள் ஏதோ செருக்குடன் தண்ணீர் தொப்பி அணிந்திருந்தது போலவே இருந்தது..
அப்போதுதான் கவனித்தேன்..இராணுவ வீரர்கள் போக வரிசையாக வாத்துக் கூட்டம் சாலையைக் கடந்து கொண்டிருந்தது..என் வீட்டிற்கு அருகில் ஒரு குளத்தை நோக்கியே நடந்து கொண்டிருந்தது..ஒருவேளை காலைக்குளியலுக்காக செல்கிறதோ..எந்த அவசரமும் இல்லை அந்த வாத்துக்களுக்கு..யாருக்கும் பயமில்லை..எந்த பிராஜெக்டும் இல்லை..எந்த டெட்லைனும் இல்லை….ஒன்றாம் தேதி இல்லை சம்பளம் வாங்குவதற்கு..அளவுகோளை வைத்து கோடு கிழித்தது போல இருந்தது….எத்தனை முறை ஒழுங்கை மீறியிருக்கிறேன்….ரிசர்வசனுக்காக ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும்போது நான் ஒரு நாளாவது ஒழுங்கை கடைபிடித்ததில்லை..….நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் குச்சியுடன் காவலர்..இந்த வாத்துக்களுக்கு இருக்கும் ஒழுங்குகூட எனக்கு இல்லையே..
எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..சத்தம் கூட போடாமல் ஒரு கார் ரோட்டில் வந்து கொண்டிருந்தது..அந்த ஓட்டுநர் வாத்துக் கூட்டம் சாலை வழியே நடந்து கொண்டுருந்ததை கவனித்து காரை நிறுத்தி விட்டார்..அவர் முகத்தில் துளியளவும் எரிச்சல் இல்லை..கார் சத்தம் வாத்து கூட்டத்தை கலைத்து விடுமோ என்ற பயத்தில் கார் இஞ்சினைக்கூட நிறுத்தி விட்டார்..அவர்தான் எனக்கு அன்னைத் தெரசாவாகத் தெரிந்தார்..நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது இந்த மனிதாபிமானம்..மனிதாபிமானம் என்று ஏன் சொல்ல வேண்டும்..மனம் என்று சொல்வோம்..மனிதாபிமானம் இருந்தால்தானே மனது..அதற்கு ஏன் “மனிதாபிமானம்” என்று அலங்கார வார்த்தை..
துணியை வைத்து கண்ணைக் கட்டி ஒரு மனிதனை பின்தலையில் சுடும் ஒரு படத்தைப் பார்த்தபோது எங்கே இருக்கிறது இந்த மனிதாபிமானம் என்றே கேட்கத் தோன்றியது..நான் ஷாருக்கான் பற்றிய எழுதிய பதிவிற்கு “அவர்களுக்கு வேண்டும்..அவர்கள் இனத்தாரிடம் போய் அறிவுரை சொல்லச் சொல்..அதுவரை குஜராத் கலவரங்கள் தொடரும்” என்ற ஒரு கமெண்ட்டைப் படித்தபோது கேட்கத் தோன்றியது “எங்கே இருக்கிறது மனிதாபிமானம்..” தினசரி நடந்து செல்லும் இந்த வாத்துக்களிடம் காட்டாத மனிதாபிமானமா ஊனோடும் உயிரோடும் இருக்கும் மனிதனிடம் காட்டப் போகிறோம்..
வாத்துக்கள் அழகாக நடந்து சென்று குளக்கரையை அடைந்தன..அப்போதுதான் கவனித்தேன்..ஒரு வாத்தினால் சரியாக நடக்க முடியவில்லை…கொஞ்சம் வயதாகி இருந்தது..அதனால் அதற்கு மேலும் நடக்க முடியாமல் அப்படியே கீழே விழுந்தது..வாத்துக்களுக்கு ஏது முதியோர் இல்லம்..ஒரு வாத்து அவசரமாக குளத்தில் சென்று சிறிது தண்ணீரை அலகால் எடுத்து வந்து அந்த வயதான வாத்திற்கு ஊட்டியது…..துணியால் கட்டி ஒரு மனிதனை பின்னால் சுட்டவனிடம் இல்லாத மனதை இந்த வாத்திடம் கண்டேன்….அந்த நிகழ்ச்சியைக் கலைத்தாற் போல் போன் மணி ஒலித்தது..போய் சென்று எடுத்தேன்..
“அம்மா எப்படிம்மா இருக்கீங்க..”
“இருக்கேன்டா ராசா..நீ எப்படி இருக்கே..”
“நல்லா இருக்கேன்..ஏன் ஏதோ குரல் ஒரு மாதிரி இருக்கு..”
“ஒன்னும் இல்லப்பா..நேற்று திடிர்ன்னு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு..அப்பாதான் என்னைக் கைத்தாங்கலா கூட்டிட்டு போனாரு..நானும் அப்பாவும் தனியாத்தான இருக்கோம்..அந்த ராத்திரியில ஒரு டாக்டரும் கதவைத் திறக்க மாட்டீங்கிறாயிங்கப்பா..எவ்வளவோ சத்தம் கொடுத்துப் பார்த்தோம்..கடைசியில கஷ்டப்பட்டு நடந்து வந்து மாத்திரையைப் போட்டு தூங்கிட்டேன்பா..தம்பி ராசா..எப்பப்பா உன் பிராஜெக்ட் முடியுது..எப்ப வீட்டுக்கு வருவ..”