Monday 8 July, 2019

சலூன்

சலூன்




சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன்.

பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால் இந்த சலூன் இருக்கிறதே. உள்ளே போய்விட்டு வெளியே போவதற்குள் ஹிட்லரின் வதைக்கூடத்திற்கு சென்று தலையை கொடுப்பது போன்று ஒரு உணர்வு.
இதற்காகவே முக்கு கடையில் இருக்கும் அந்த சலூன் ஆசாமியை எனக்கு பிடிக்காது.

எங்கப்பாவிற்கு, என் தலையில் முடி இருப்பதே பிடிக்க்காது..”என்னடா, இது பன்னிக்குட்டி மாதிரி…முக்கு கடையில சொல்லியிருக்கேன்..போயிட்டு ஒட்ட வெட்டிட்டு வந்துரு..” ம்பார்.

கடுப்பாக இருக்கும். கூடுதலாக கடுப்பேத்துவதற்கே வரும் அண்ணன்மார்கள்,
“அண்ணாச்சி..கின்னி வெட்டு வெட்டிருங்க” ம்ப்யாங்க..அதாவது தலையில் ஒரு கின்னத்தை வைத்து, சைடுல புல்லா வெட்டிவிடுவது..காட்டில் வாழும் குரங்குக்கு ப்ரண்ட் மாதிரி இருக்கும்.
.
ஊரில் இருப்பதே ரெண்டு சலூன் கடைதான். அதுவும் முக்குகடை ஆசாமி, ரொம்ப லொல்லு புடிச்சவர்..

“தம்பி…என் கிட்ட விட்டுருங்க..காதை மட்டும் விட்டுட்டு அம்புட்டையும் வெட்டிருவேன்” ம்பார்..அழுகை, அழுகையாய் வரும்.

மனசாட்சி இல்லாமல், கத்திரிக்கோலை வைத்து என் தலையில் சிற்பி மாதிரி செதுக்குவார். ஒரு நாள் தவறுதலாகவோ, அல்லது வீட்டுல ஏதாவது பிரச்சனையோ, அல்லது பரிச்சார்தத முயற்சியோ தெரியவில்லை, என்னுடைய ரெண்டு கிர்தாவையும் தூக்கிட்டார்..

“ஏண்ணே, இங்கிட்டு ரெண்டு பக்கமும் சைடுல இருக்குமே..காணோம்” ன்னேன்.

“அது எதுக்கு தம்பி, அசிங்கமா…அதுதான் எடுத்துட்டேன்..” னு வடிவேல் மாதிரி சொன்னவுடன் குலை நடுங்கி போனென்..

“ஏன்னே..பேச்சு வாக்குல, கண் இமையையும் எடுத்துறாதிங்கண்ணே..”ன்னேன்.

“போங்க தம்பி..எப்போதும் விளையாட்டுதான்..” ன்னார்..

அந்த ஒரு வாரம் முழுவதும் சைடுல கிர்தாவை மறைத்து கொண்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி, ஸ்கூலில் அமர்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது..
சலூன் போவதென்றாலே, எட்டிக்காய் போல கசக்கும் அந்த வயதில்.

காலம் செல்ல செல்ல, இப்போதெல்லாம் சலூன் “ஸ்பா” ஆகிவிட்டது.. சென்னையில் எங்கு பார்த்தாலும் “ஸ்பா” தான்.

சலூன் முழுவதும் “ஏ.சி”. உள்ளே சென்றால், பேஷண்டை வரவேற்கும் டாக்டர் போல

“எஸ்..வாட் கேன் ஐ டூ பார் யூ..” ங்கிறாய்ங்க..ஏண்டா சலூன்ல வந்துட்டு சரவணபவன் மீல்ஸா ஆர்டர் பண்ணமுடியும்..வெட்டிங விடுங்கடா” ன்னு மனசில் சொல்லி கொள்வேன்

இப்போதெல்லாம், நம்பர் கேட்க ஆரபிக்கிறார்கள்..

“சார்..விச் நம்பர்..”

அதாவது, முடியின் அளவு 1 லிருந்து 10 நம்பராம்..நம்பர் சொன்னால் அதற்கேற்ற மாதிரி வெட்டுவாய்ங்களாம்.

இது தெரியாம நம்ப ராசி நம்பரத்தான் கேக்குறாய்ங்க போலன்னு, “4” ன்னேன்..

வெளியே வரும்போது, “எங்கே செல்லும் இந்த பாதை” சேது விக்ரம் மாதிரி ஆக்கிவிட்டார்கள்.

நைட்டு வூட்டுல தூங்குறீங்களோ இல்லையோ, முக்கியம் கிடையாது.

சலூனில் மட்டும் மறந்தும் தூங்கிர கூடாது. சற்று கண்ணசர்ந்தால் “ஞானப் பழத்தை பிழிந்து” ஏறக்குறைய மொட்டை போட்டுவிடுவார்கள்.

முக்கியமான விஷயம் பேச்சுவார்த்தை.. பல பிசினசுகள் முடி வெட்டும்போதுதான் நடக்கும்..

“என்ன சார்..முகம் முழுவதும், எண்ணை பிசுக்கா இருக்கு..ஒரு ப்ளீச்சிங்க் பண்ணினீங்கன்னா பளிச்சுன்னு இருப்பீங்கள்ள”

நம்மளும் “அப்படியா” ங்க.

“ஜஸ்ட் 400 ருபீஸ்தான் சார்..பண்ணி பாருங்க” ம்ப்யாங்க..

அதுவும் என்னிடம் மனசாட்சியே இல்லாமல் ஒருத்தர்

“லைட்டாதான் சார் கருப்பா இருக்கு..எல்லாம் ஸ்கின் பிக்மெண்ட் தான் சார்..ஒரு ஆர்கானிக் பேசியல் பண்ணினா, எல்லா கருப்பும் போயிடும், விஜயகாந்த் மாதிரி ஆகிடுவிங்க” ன்னு ஆசை காட்ட
சரி பண்ணி விடுங்கன்னு உக்கார்ந்ததுதான் குற்றம்..பத்து நாளாக விளக்காத அடிபிடிச்ச பாத்திரத்தை கழுவுற மாதிரி புகுந்து விளையாடினார்..சரி, இதுக்கு மேல இந்த மூஞ்சிய பண்ணுறதுக்கு எதுவும் இல்லைங்கிற முடிவுக்கு வந்து “இப்ப வீட்டுக்கு போய் பாருங்க சார்” ன்னார்.

வீட்டிற்கு போறேன்..பக்கத்து விட்டுக்காரர்

“தம்பி யாரு நீங்க..எதுக்கு கதவை தட்டுறீங்க..” ங்க

ஆறு வயதான மகன்

“மம்மி.சம்படி இஸ் வெயிட்டிங்க் அவுட் சைடு” ங்க..

அந்த வாரம் முழுவதும் நாசமா போச்சு..

அதனால சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றேன்னா, மசிரு தானேன்னு அலட்சியாம இருந்துறாதீங்க..

2 comments:

Anonymous said...

How are you? Been a while, since 3 years nothing written?

Anonymous said...

சிரிப்பா இருந்தது . இந்த அளவுக்கு எழுதுவது கூட ஒரு கொடுப்பினை தான்

Post a Comment