Monday 21 July, 2014

ஏய்..எருமை மாடு


“ஏய்..எருமை மாடு” என்று உங்களிடம் யாராவது சொன்னால், அடித்து விடுவீர்கள் தானே..ஆனால், அந்த ஒரு வார்த்தைதான் இன்று என் உயிரை காப்பாற்றியது என்று சொன்னால் நம்பமுடிகிறதா..

இல்லை என்றால், ஓ.எம்.ஆர் என்று அழைக்கப்படும், சென்னை பழைய மகாபலிபுரம் ரோட்டில் இன்னும் நீங்கள் வண்டி ஓட்டியதில்லை போலும்..
இங்கு ரோட்டில் நடந்து செல்லும் மனிதர்களைவிட, அமைதியாக நடுரோட்டில் அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டிருக்கும் மாடுகளே அதிகம்..அதுவும், கடந்து செல்லும், வண்டிகளைப் பார்த்து அவைகள் விடும் லுக்கு இருக்கிறதே...

“போங்கடா.போய் புள்ள குட்டிகளை படிக்கவைங்கடா’ என்பதுபோல் இருக்கும்..

அப்படித்தான் இன்றும், அலுவலகம் முடிந்து, என்னுடைய பைக்கில் வீடு நோக்கி பயணித்தேன்..

வழக்கம்போல இரக்கமே இல்லாமல், எதிரில் வரும் வாகனங்கள் அடிக்கு ஹைபீம் வெளிச்சத்தில், என்னுடைய முகம் “எம்ஜி.ஆர்” மாதிரி மினுமினுப்பதுண்டு..”ஒருநாள் இல்லைன்னா, ஒருநாளைக்கு, என் மேல லைட் அடிக்குதா இல்லையா பாருங்கள்” என்று அண்ணாமலை கணக்காய், என் அப்பாவிடம் விட்ட சபதம், இப்படியாவது நிறைவேறுகிறதே என்று சந்தோசப்படுவதுண்டு...

அப்படி ஒரு கனவான், என்னை இன்னும் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடித்த ஹைபீம் லைட்டால், ரொம்ப உயரத்திற்கு போய்விடுவோமோ என்று பயந்து வண்டியை கொஞ்சம் ஓரமாக ஒடிக்க, அப்போதுதான் காற்றை கிழித்து கொண்டு வந்த அந்த குரலைக் கேட்டேன்..

“ஏய்..எருமை மாடு...”

“டாய்..யாரைப்பார்த்துடா எருமை மாடுன்னு சொன்ன” என்று நினைத்து வண்டியை மெதுவாக்கலாம் என்று நினைக்கையில் எதிர்த்த மாதிரி, ஈவினிங்க் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுகொண்டிருப்பது, ஒரு எருமையார் என்று தெரிய “எருமை” குரலின் அருமை தெரிந்த்து

அந்த குரல் மட்டும் என்னை எச்சரிக்காவிடில், எருமை மேல் ஏறி, சிரம்மே இல்லாமால், மிஸ்டர் எருமையார் அவருடைய வாகனத்தில் என்னை மேலோகத்திற்கு அனுப்பியிருப்பார்..ஜஸ்ட் மிஸ்..

அப்படியே வண்டியை லெப்டில் ஒடிக்க, எருமையை விட அருமையாய் ஒரு லாரிக்காரன் அல்லது லாரிக்கார்ர், “கஸ்மாலம்...” என்று அழகுதமிழில் என்னை புகழ, புல்லரிக்க கூட நேரமில்லாமல், அப்படியே ரைட்டில் ஒடித்தேன்..

ரைட்டில் ஒடிக்க இன்னும் அருமை..எருமைக்கு துணைவியார் மிஸ், பசுமாடு அவர்கள், நைட் டின்னர் சாப்பிட்டுவிட்டு ரோட்டுக்கு நடுவில் அமர்ந்து ரெஸ்ட் எடுக்கும்போது, டிஸ்டர்ப் செய்தால் கோபம் வரும்தானே..

அவர் ஒரு சைடாக முறைக்க, நான் வண்டியே லெப்டும், ரைட்டுமாக ஒடிக்க வண்டி ஒரு குழப்பத்துடன் அருகில் உள்ள மணல் மேட்டில் விழ, நான் அணிந்திருந்த ஹெல்மெட்டோடு, விழ, ஒரு துளி காயம் இல்லாமல் பிழைத்தேன்..

சுடிதார் அணிந்திருந்தால், நாலு பயபுள்ளைக ஓடி வந்து காப்பாற்றிருப்பார்கள்..ஆனால் நான் அணிந்திருந்த்தோ “பேண்ட் சட்டை” தானே.. நானே கையை ஊன்றி எழ முயற்சிக்க, அந்த பக்கம் சென்று கொண்டிருந்த நண்பர், “இன்னா சார்..டாஸ்மார்க்கா” என்று சிரித்து கொண்டார்...

திரும்பவும் கஷ்டப்பட்டு வண்டியை தூக்க, மிஸ்டர் எருமையாரும், மிஸ் பசுமாடும் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தன..

வழக்கம்போல ஹைபீம் வெளிச்சதில், நான் எம்.ஜி.ஆர் மாதிரி மிணுமிணுக்க, இந்த முறை எதிரில் வந்த்து மணல் லாரி..

எருமையாருக்கும், பசு மாடுக்கும், ஒரு வேண்டுகோள்..

“ஈவினிங்க் ஸ்னாக்ஸ், நைட் டின்னர் சாப்பிடுங்க..அது உங்க உரிமை..ஏன்னு கேட்க மாட்டேன்..ஆனால், கொஞ்சம், ரோட்டை தாண்டி சாப்பிடலாமே.....”

எருமை, பசு ஓனர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

“அண்ணே..உங்க கையை கால நினைச்சு கேட்குறேன்...பீக் ஹவருல..அதுவும், ஓ.எம்.ஆர்-கேளம்பாக்கம் ரோட்டுல மாடுங்களை இப்படி விடுறது ரிஸ்க்குண்ணே..ஏதாவது விபத்து நடந்தாதான் திருந்துவோம்னு பொதுவிதியிலேயே நிக்காதிங்கண்ணே..”

வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு வேண்டுகோள்..


“நாட்டுக்கு, ஒரு எம்.ஜி.ஆர் போதும்ணே..ஹைபீம் அடிச்சு, எல்லாத்தையும், எம்,ஜி.ஆரா மாத்தி, உசரத்துக்கு அனுப்பிச்சுடாதீங்கண்ணே..”

2 comments:

இரா. கண்ணன் said...

உங்கள் பதிவை படிக்கும்போது..நிறைய இடங்களில் சிரிப்பிற்கு பஞ்சமில்லை.. ரசித்தேன்.. அதே நேரத்தில் விழிப்புணர்வாகவும் அமைந்தது.

லெமூரியன்... said...

nanba...i exped the same...! oru second la car uh turn pannen...illaina maadu poyirukkum...maadu mela yeri en carum kavunthirukkum..!

Post a Comment