
சென்னையில், வேலை தேடும்போது, திருவல்லிக்கேணி மேன்சன் தான் நமக்கெல்லாம் சொர்க்கம். கையில் ஒரு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு சாப்ட்வர் கம்பெனியாக ஏறி இறங்கி, “சார்..ஐ.ஆம் கம்ப்யூட்டர் க்ராஜூவேட்..தி இஸ் மை ரெஸ்யூம்” என்று கம்பெனி செக்யூரிட்டிகளிடம் ஓட்டை ஆங்கிலத்தில் கெஞ்சி, சற்று இறங்கி வந்தால், பக்கத்து டீ கடையில் ஒரு காபியும், சிகரெட்டும் வாங்கி கொடுத்து “சார்..ஹெச். ஆர் வந்தா அப்படியே,, இந்த ரெஸ்யூமையும் தள்ளிவிடுங்க சார்” என்று கெஞ்சல் பார்வை பார்த்த காலங்கள் எல்லாம், இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
புதன் காலை “ஹிந்து” பேப்பர் “ஆப்பர்சூனிட்டிஸ்” பக்கத்தை பார்த்தவுடன் கண்கள் ஆட்டோமேட்டிக்காக தேடுவது “ப்ரசர்ஸ் வாண்டட்” வகையறாக்களைத்தான். சலிக்காமல், மே மாதத்தின் புழுக்கத்திலும் ஒரு டையையும், அயர்ன் பண்ணிய சட்டையையும் போட்டுக்கொண்டு, ஒரு 20 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு, எம்.எல்.ஏ ஹாஸ்டல் விடுதியில் பஸ்நிறுத்தத்தில் நிற்கும்போது, அந்தப்பக்கம் செல்லும் சாப்ட்வேர் கம்பெனிகளின் சொகுசு பேருந்துகளில் சன்னலோரம் ஒய்யாராமாக தூங்கிக்கொண்டு செல்லும் பசங்களையும், பெண்களையும் பார்க்கும்போது, ஒரு வெறிவருமே, அந்த வெறியில் மதிய சாப்பாடே மறந்துவிடும். “எப்படியாவது இந்த பஸ்ஸில் ஒரு தடவையாவது ஏறிரணும்டா” என்ற தீர்க்கமான எண்ணத்துடன் என் கைகள் அந்த ரெஸ்யூமை இறுகப் பற்றிருக்கும்.
கையில் இருக்கும் 20ரூபாயில் சரவணபவனிலா சாப்பிடமுடியும். தேவி தியேட்டர் பின்பக்கம் “சாய் மெஸ் என்ற சிற்றுண்டி உணவகம் தான் நமக்கு சரவணபவன். நாங்கள் அடையாளத்துக்காக கூப்பிடுவது “பாபா” ஹோட்டல். 15 ரூபாய் கொடுத்தால், கொஞ்சம் புளியோதரை, கொஞ்சம் தயிர்சாதம் கிடைக்கும். காலையில் குடித்த உணவான தண்ணீரும், இரவு சாப்பிடப்போகும் உணவான பர்பியும், சொற்பநிமிடத்தில் மறந்து போகும். அவ்வளவு ருசி…வெளியில் உக்கார்ந்து, ஒரு தட்டில் வைத்துதான் சாப்பிடவேண்டும்.
அந்த சிற்றுண்டியின் ஓனர்தான் நாங்கள் செல்லமாக அழைக்கும் “சாய் மாமா”. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அவரை பார்த்தாலே, அன்றைய பொழுது நன்றாக போகும் என்ற நம்பிக்கை. மூச்சுக்கு மூன்று தடவை, அவர் “சாய்..சாய்” என்று கூப்பிடும்போது, அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வரும்..”வாங்க சாய்..எப்படி சாய் இருக்கீங்க சாய்..தோசை வேணுமா சாய்” என்பார்..
“அது ஏன் மாமா எப்ப பார்த்தாலும் சாய்..சாய்..”சாய்” ன்னா குடிக்கிற சாய் யா” என்று கிண்டல் செய்தாலும் அதற்கு கோபப்படமாட்டார்
“எங்க கடவுள் சாய்..அந்த சாய்பாபா தான் எங்களுக்கு எல்லாம்…” என்பார்..எப்போதெல்லாம் சென்னையில் சாய் பஜனை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருடைய கடை கண்டிப்பாக லீவு.. வருமானம் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. சாய்பஜனையை ஒருமுறை கூட மிஸ் பண்ணியதில்லை. அதனை சொல்லும்போது, அவர் கண்களில் பெருமிதம் மிளிருவதை நான் கவனிக்க தவறுதில்லை.
ஆனால் எனக்கென்னமோ சாய்பாபாவை பிடிப்பதில்லை, சாய்பாபா மட்டுமல்ல எனக்கு எந்த சாமியாரையும் பிடிக்காமல் இருந்தது. அதென்ன கடவுளுக்கும் நமக்கும் நடுவில்..அதுவும் குறிப்பாக அவர் செய்யும் மாயாஜாலங்கள், கையிலிருந்து அவர் எடுக்கும் விபூதி,தங்க செயின், லிங்கம் என்று அவர் செய்யும் மாயாஜாலங்களைப் பார்த்தபோது, கடுப்பாக இருந்தது. அதை உண்மை என்று நம்பி, அவர் காலில் விழுந்த ஜனங்களைப் பார்த்தபோது, பற்றிக்கொண்டு வந்தது…ஏன் இப்படி என்று கேள்வியும், அப்போது இருந்த பசியில் அடங்கிப்போனது. அவர் சாய்பாபாவின் மகிமைகளை பற்றிப் பேசும்போது, “நிறுத்துங்க மாமா” என்று ஓபனாக சொல்லிவிடுவேன்..
அப்படி ஒருநாளில், போன இண்டர்வியூக்கள் எல்லாம் பல்பு வாங்கியிருந்தேன். மிகவும் எரிச்சாலானேன்..யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. அதே எரிச்சலுடன் “சாய் மெஸ்” வந்தேன். பட்டினி வேறு, ஒருபக்கம் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது..
“மாமா..புளிச்சாதம் கொடுங்க”
“இல்ல சாய்..தீர்ந்து போச்சு,,”
“சரி..தயிர்சாதம்..”
“இப்ப சாய்..இப்பதான் ஆச்சு..”
எனக்கு கோபம் இரட்டிப்பானது..
“சரி..என்னதான் இருக்கு..”
“காலையில் வைச்ச கிச்சடி தான் இருக்கு..”
“கொடுங்க” என்று வாங்கினேன் அதே எரிச்சலுடன்..
ஒரு வாய்தான் வைத்திருப்பேன்..ஆரம்பித்தார்..
“சாய்.நேத்து சாய் பஜனை போயிருந்தேன்..எப்படி இருந்தது தெரியுமா சாய்..அப்படியே அந்த பகவானே நேரில் வந்த மாதிரி..”
“மாமா…கொஞ்சம் நிறுத்திருங்களா..எனக்கு அவரை பிடிக்காது..”
“சாய்..அவரை ஒரு நிமிசம் நேருல பார்த்தீங்கன்னா அப்படி சொல்லமாட்டீங்க..அவர் கடவுளோட அவதாரம்..அவருக்கு இறப்பே இல்லை..”
“மாமா..ரொம்ப ஓவரா பேசாதீங்க..அவரும் நம்மளை மாதிரியே ஒரு ஆளுதான்..என்ன கொஞ்சம் மேஜிக் தெரிஞ்சிருக்கு..அதை வைச்சு, உங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம் ஏமாத்துறாரு..நீங்களும் நம்புரீங்க..மாறுங்க மாமா.. ”
“இல்ல சாய்..உங்களுக்கெல்லாம் அது புரியாது..அதுக்கெல்லாம் ஒரு தீட்சை வேண்டும்….அவரோட கடைக்கண் பார்வைக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க தெரியுமா..”
“மாமா.அவரோட கடைக்கண் பார்வைக்காக காத்து நிற்கிற நேரத்துல , ரேஷன் கடையில நின்னீங்கன்னா, அரிசி, மண்ணெண்ணய்யாவது கிடைக்கும்” என்று குத்தினேன்..
அவ்வளவுதான்..அவருடைய முகம் மாறிவிட்டது..முதல் முதலாக அவருடைய முகத்தில் அவ்வளவு கோபத்தை அப்போதுதான் பார்க்கிறேன்..
“நீங்க கிளம்புங்க சாய்..இனிமேல் என் கடையில் சாப்பிட வராதீங்க சாய்..”
“மாமா…இதுக்கெல்லாம் போய் கோவிச்சுக்கிட்டீங்க..நீங்களும் பேசுனீங்க..நானும் பேசுனேன்..முடிஞ்சிருச்சு..இதுக்குப்போயி..”
“இல்ல சாய்..பாபா மகிமைய இப்ப உங்களுக்கு தெரியாது….அவருக்கு இறப்பே கிடையாது..அப்படியே இருந்தாலும், இன்னொரு அவதாரம் எடுப்பார்..இதெல்லாம் உங்க அறிவுக்கு எட்டாது..இனிமேல் என் கடைக்கு வராதீங்க” என்று திரும்பி கொண்டார்..
எனக்கு மனம் கஷ்டமாக போய்விட்டது. எரிச்சலில் அவருடைய மனதை சங்கடப்படுத்திவிட்டோமே என்று, எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றேன்..அதற்கப்புறம் அவருடைய கடைக்கு செல்வதில்லை. தெருவில் நடக்கும்போது பார்த்தாலும், பார்க்காத மாதிரி முகத்தை திருப்பிக் கொள்வார்…
இதோ, திருவல்லிக்கேணியை விட்டு விட்டு வந்து 10 வருடங்களாகின்றன். அடுத்தமுறை சென்னை வரும்போது, கண்டிப்பாக திருவல்லிக்கேணி செல்லலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக “சாய் மாமாவை” பார்த்து ஒரு கேள்வி கேக்கலாம் என்று..
“சொல்லுங்க மாமா..1.5 லட்சம் கோடி சொத்து சொந்தக்காரரான, சாய்பாபாவின் அடுத்த அவதாராமாக யாரை வணங்க ரெடியாக இருக்கிறீர்கள்..”