
பொதுவாக நான் “தல” என்று கூப்பிடுவது, ஏ.ஆர் ரகுமானை மட்டும்தான். தமிழனனின் இசையை உலக அளவில் உயர்த்தியவர். இரண்டு கைகளில் ஆஸ்காரை தூக்கியபோது அதன் கனம் தலையில் ஏறாமல் பார்த்தவர். அவருடைய பணிவு இன்னும் வியக்க வைக்கும். ஏதாவது ஒன்று அவருக்கு பிடிக்காமல் போய்விட்டால் அந்த இடத்தை விற்று நகர்ந்துவிடுவாராம். கத்தி பேசுவதோ, சத்தம் போடுவதோ அவருக்கு பிடிக்காத ஒன்று. நாம் குறட்டை விட்டு தூங்கும் இரவுதான் அவருக்கு வேலைநேரம். பலபேரின் ரோல் மாடல். தமிழிசை இளையராஜாவிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது, என்னாலும் முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர். அவரிடம் பிடிக்காத ஒன்று, தமிழ் சானல்களில் கூட பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேசுவது.
ரஜினி படத்திற்கு முதல்முதலாக முத்து படத்தில்தான் ஆரம்பித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, அவருடைய படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். படையப்பா, பாபா, சிவாஜி என்று அவருடைய படங்களுக்கு தனித்துவம் வாய்ந்த இசை, பாடல்களை பேசவைத்தன. பொதுவாக சங்கர் படங்களில் ஸ்லோ பாடல்களை கேட்பது கடினம். ஒரு மாதிரி துள்ளலோடுதான் இருக்கும். பாடல்கள் காட்சிகளின்போது கூட ரசிகர்களை கட்டிப்போட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
எந்திரன் பட பாடல்களை கேட்க நேர்ந்தது. ஏ.ஆர் ரகுமான் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். இனிமேல் போவதற்கு என்ன இருக்கிறது என்றே கேட்க தோன்றியது. அனைத்தும் கலக்கல். வைரமுத்துவின் வைரவரிகளுக்கு வைரமே பரிசளிக்கலாம்,நாம் கோடிஸ்வரானாக ஆன பிறகு… உங்களுக்காக ஒரு விமர்சனம்.
1. அரிமா, அரிமா – ஹரிஹரன், சாதனா சர்கம்
போர் முரசு போல ஆரம்பிக்கும் இந்த பாடல் “இவன் பேரை சொன்னதும்” என்று ஆரம்பிக்கும்போது, காதுகளை தயார் செய்து கொள்கிறோம். மெல்லிய குரலாலே பழக்கப்பட்டுபோன ஹரிஹரன் குரல் சற்று ஓங்கி மயக்க வைக்கிறது. சாதனா சர்கம், தண்ணீருக்கு பதில் தேன் குடிப்பார் போலிருக்கிறது. மயக்க வைக்கிறார்..மூன்று நிமிடம் சொக்கிப்போகிறோம்
2. 2. பூம், பூம் ரோபா டா – யோகி, கிர்த்தி, டான்வி, ஸ்வேதா
யோகி யின் குரலை முதல்முதலாக “எங்கேயும், எப்போதும்” பாடலில் கேட்டபோது, அவர் குரலை ஏ.ஆர் ரகுமானின் இசையில் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இதோ எந்திரனில்..சிவாஜியில் வரும் “அதிரடிக்கார மச்சான்” பாட்டின் அடுத்த வெர்சன். ஏர்.ஆர் ரகுமானின் பேவரைட் ஸ்வேதா குரல் சொக்க வைக்கிறது. தாளம்போட வைக்கும் பீட்..கண்டிப்பாக இன்னும் 2 வருடங்களுக்கும் பப்களில் இந்த பாட்டுதான்…
3. சிட்டி டான்ஸ் ஷோகேஸ் – பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி
பூம், பூம் பாடலின் மியூசிக்கல் வெர்சன். டான்ஸ் ஆடுபவர்கள் எல்லாம் ரெடியாகி கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்கு இந்த பாடல்தான். கலக்கல் இசை..
4. இரும்பிலே ஒரு இதயம் – ஏ.ஆர் ரகுமான், க்ரிஸ்ஸி
காந்தக்குரல் ஏ.ஆர் ரகுமான். அவருடைய குரலில் உள்ள அதே காந்தம் இப்போதும் ஈர்க்கிறது. வாய்ஸ்களுக்கிடையே வரும் அந்த பீட் தாளம்போட வைக்கிறது. நடு நடுவே வரும் அந்த ராப் குரல், மற்றும் ஏ.ஆர் ரகுமானின் வாய்ஸ், திரும்பவும் அதிரவைக்கும் இசை, என்று ஒரு ப்யூசனே நடத்தி விடுகிறார்…ம்..என்னத்த சொல்ல..
5. காதல் அணுக்கள் – விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
யாரிந்த விஜய் பிரகாஷ்..காதல் அணுக்கள் என்று ஆரம்பிக்கும்போது நம் உடம்பில் உள்ள அணுக்கள் ஆட ஆரம்பிக்கிறது. நிறைய பேரின் ரிங்க் டோன் ரெடியாகி கொண்டிருக்கிறது. ஓசன்னா பாடல் போல் இந்த பாடல் ஹிட் ஆகும் என்பது சந்தேகம் இல்லை. கொஞ்சம் ஜீன்ஸ் பாடல் மட்டும் அடிக்கடி வருகிறது. ஸ்ரேயா கோஷல் சரியாக பாடவில்லையென்றால் மட்டுமே ஆச்சர்யம். வழக்கம்போல் வழமையான குரலால் அசத்துகிறார்.
6. கிளிமாஞ்சாரோ – ஜாவித் அலி, சின்மயி
என்னடா, இன்னும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் படத்துக்கு சின்மயி பாடவில்லையே என்று நினைக்கும்போது இந்த பாடல் வந்து விடுகிறது. ஆஹா..ஆஹா..என்று இடையில் கேட்கும் அந்த குரல் அதையே திரும்பவும் சொல்ல வைக்கிறது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது இந்த பாடல்தான் படத்தில் சராசரி. என்னை அவ்வளவாக கவரவில்லை என்றே சொல்லுவேன். ஆனால் வரிகளின் பலத்தால் ஹிட் ஆகலாம்
7. புதிய மனிதா – எஸ்.பி.பி, கதிஜா ரகுமான், ரகுமான்
ரஜினியின் ஓபனிங்க் சாங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஓபனிங்க் சாங்கின் அந்த பெப் இல்லாமல் ஆரம்பிக்கிறது..முதலில் ஏ.ஆர் ரகுமான் குரலில் மெதுவாக ஆரம்பிக்கும் சாங்க், எஸ்.பி.பி குரல் ஆரம்பிக்கும்போது பற்றிக் கொள்ளுகிறது. காலை சாப்பாடு சாப்பிடாமல் அப்பன் ஆட்டோ ஓட்டி சம்பாதித்த 500 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு “தலைவா..தெய்வமே.,” என்று ரசிகர்கள் அடித்தொண்டையில் கத்தும் வாய்ப்பு நிறைய உண்டு. அவரும் ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு..”ம்..நிறைய திங்க் பண்ணனும்..அரசியல்னா சும்மாவா..இந்த படத்தோட 100 டேஸ் பங்க்சனுல நான் முடிவை சொல்றேன்..” என்று ஆரம்பிக்கும்போது “இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..” என்று பி.எஸ் வீரப்பா குரலில் எனக்கும் கத்த ஆசைதான்..ஆனால் வீட்டில் நிறைய வேலை இருப்பதால் போயி பொழைப்பை பார்க்கணும்..வரட்டா…