Saturday 5 June, 2010

அறிவிருக்காடா உனக்கு.



உங்களை அறிவிருக்கா என்று யாராவது கேட்டால் உங்களுக்கு கோபம் வரும்தானே. ஆனால் என்னை யாராவது கேட்டால் என் பக்கத்து வீட்டுக்காரர்தான் நினைவுக்கு வருவார். நான் பொதுவாக யாரிடம் ஒட்ட மாட்டேன்(அது மூஞ்சியைப்பாத்தா தெரியுதுண்ணுலாம் சொல்லக்கூடாது). நெரிசல் மிகுந்த அபார்ட்மெண்ட்களில் பக்கத்து வீட்டில் கொலை நடந்தால் கூட பேப்பரைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். சென்னை நரக மன்னிக்கவும் நகர வாழ்க்கை அப்படி.

அப்படி சென்னையில் நான் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்ந்தபோது..(இந்த இடத்தில் கொசுவர்த்தி சுருள் போட்டுக்கொள்ளவும்..) பக்கத்து வீட்டில் ஒரு மதுரைக்காரர் குடும்பம் குடி வந்தது. நமக்குதான் மதுரைக்காரயிங்கன்னாவே எக்ஸ்ட்ரா பாசமாச்சே.நன்றாக பழக ஆரம்பித்தேன். அவருடைய மனைவியும், என்னுடைய மனைவி ஒரு அசோசியேசன் அமைக்கும் அளவுக்கு நண்பர்களாகிவிட்டார்கள். எனக்கு அவர்கள் வீட்டில் மிகவும் பிடித்தது அவர்களுடைய 2 வயது குழந்தை. குழந்தையைப் பார்த்தால் குற்றம் கூட மறந்து போகும் என்பார்கள். மிகவும் க்யூட்டான குழந்தை. எப்போதும் துறுதுறுவெறுன்று இருக்கும். எனக்கு பொதுவாக
குழந்தைகள் என்றால் சற்று எக்ஸ்ட்ரா பாசம். அதுகளுடைய சிரிப்புதான் எந்த உள்நோக்கமும் இல்லாதது. உலகத்தையே மறக்க வைக்கும் சக்தி உடையது. குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் மறந்து போவோம்.

நண்பருடைய குழந்தை என் விட்டிற்கு வந்தாலே நான் குஷியாகி விடுவேன். அதனுடன் விளையாடுவதற்கென்றே தனிநேரம் ஒதுக்க ஆரம்பித்தேன்.
முதலில் அக்குழந்தை என்னை பார்க்கும்போது எல்லாக் குழந்தைகளைப்போல பூச்சாண்டி என்று பயந்து அழுதது. அதுக்கப்புறம் இந்த பூச்சாண்டி
பழகிவிட்டது. சிறிது காலங்களில் பக்கத்து வீட்டு நண்பரை விட அந்த குழந்தைதான் எனக்கு சிநேகிதமாகி போய்விட்டது.

நண்பர் மிகவும் மரியாதைக்குரியவர்..என்னை "பாஸ்..வாங்க பாஸ்.." என்றுதான் அழைப்பார். கொஞ்சம் மொட்டைபாஸ் போன்று எண்ணம் அளித்தாலும்
நான் ஒன்றும் சொல்வதில்லை. மனிதர்களை எப்படி அழைத்தால்தான் என்ன. மரியாதை மனதில் இருந்தால் போதும். நானும் அவ்விதமே அவரிடம் பழகுவேன்.

அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அக்குழந்தை தவழ்ந்து , தவழ்ந்து என் வீட்டிற்கு வந்தது. பொதுவாக என் நண்பர்தான் தூக்கி வருவார். வீட்டை எட்டி பார்த்தேன். யாரும் இல்லை.
ஒருவேளை வேலையாய் இருக்குமோ என எண்ணிக்கொண்டேன். சிறிதுநேரம் அதனுடன் விளையாட ஆரம்பித்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. குழ்ந்தை வீல் என்று அழுக ஆரம்பித்தது. எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் அக்குழந்தை அழுது அப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிரிக்கும் குழந்தையிடம் விளையாட மட்டுமே தெரிந்த எனக்கு அழும் குழந்தையை சமாளிக்க முடியவில்லை நானும் என்ன என்னமோ செய்து பார்க்கிறேன். முடியவில்லை. அன்று பார்த்து என் மனைவி கூட வீட்டில் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு ஓடினேன். என் நேரத்திற்கு எல்லா கடையும் அடைத்திருந்தது. கொஞ்சம் தூரமாக உள்ள கடைக்கு ஓடிச்சென்று ஒரு சின்ன பொம்மை மற்றும், ஒரு சிறிய பிஸ்கட் வாங்கி கொடுத்தவுடன் தான் குழந்தையிம் அழுகை அடங்கியது.

நிம்மதியாக வீடுநோக்கி வருகிறேன். வீடு அல்லோல்கல்லோல் பட்டிருந்தது. நண்பர் குழந்தையைத் தேடி அலைந்திருப்பார் போல். என்னுடைய வீடி முழுவதும் தேடியிருக்கிறார். இல்லை என்றவுடன் மிகவும் டென்சனானது முகத்தில் தெரிந்தது. ஓடி வந்து என் கையில் உள்ள குழந்தையை வாங்கி இல்லை, பிடிங்கி கொண்டார். அவருடைய முகம் கோபத்தில் சிவந்திருந்தது,கோபத்தில் அவர் முகம் மட்டுமல்ல உடம்பு முழுக்க வேர்த்திருந்தது. அவரை இந்த கோலத்தில் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். எப்போதும் பாஸ் பாஸ் என்று அழைக்கும் அவர் முதல்முறையாக கத்தினார்

"அறிவிருக்காடா உனக்கு.."

நான் உண்மையிலேயே இதை எதிர்பார்க்கவில்லை. நண்பரிடம் நிறைய தடவை பேசியிருக்கிறேன். அவர் பாஸ், பாஸ் என்று அழைப்பதைப் பார்த்து கூச்சமாக "நமக்குள்ள என்ன பிரண்ட்..வாடா, போடான்னே கூப்பிடலாமே.." என்றேன். "போங்க பாஸ்..உங்களைப்போயி.." என்று சிரிப்பார்..அவரா இப்படி..என்னால் நம்ப முடியவில்லை..

"ஹே..இல்லை..குழந்தை அழுதது. என்ன பண்றதுன்னு தெரியலை..பக்கத்தில் உள்ள கடைக்கு கூட்டிக்கிட்டு போய்.."
"அதுக்கு..எங்க வேணுன்னாலும் தூக்கிட்டு போயிருவியா..பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்..என்னை வந்து கூப்பிட்டயா.."
"இல்லை..உங்க வீட்டில யாரும் இல்லை.."
"இல்லைன்னா காலிங்க் பெல்லாவது அடிச்சிருக்கலாமில்ல.."
"பதட்டத்துல தோணலை..பிரண்ட்.."
"போடாங்க..நீயெல்லாம் ஒரு மனுசனா..ஒரு நிமிசத்துல என் செல்லம் இல்லாம நான் தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா.."

அவர் கண்கள் கலங்கியது. அப்பா பாசம்....முதல்முறையாக அவர் கண்களில் கண்ணீரைப் பார்க்கிறேன்..குழந்தையை எடுத்து அப்படி உச்சிமோர்ந்தார்..அப்படியே நெஞ்சோடு அணைத்து
கொண்டார்.."என் தங்கமில்ல..அப்பாவை விட்டுட்டு எங்கடா போயிட்ட.." சின்ன பிள்ளை போல அழ ஆரம்பித்தார்..குழந்தையை கொஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் சென்று படார் என்று கதவை
சாத்தினார்..என்னை யாரோ செருப்பால் அறைந்தது போல்

மெதுவாக வீடு நோக்கி சென்று அமர்ந்தேன். என் செல்பேசி அழைக்கும் சத்தம் கேட்டது. அவசரமாக சென்று எடுத்தேன்..

"அப்பா காலிங்க்" என்று இருந்தது..

"ராசா..எப்படிடா இருக்க.."
"ம்..நல்லா இருக்கேன்.."
"அப்ப ஒரு கால் பண்ணினேன்..யாருமே எடுக்கலை.."
"இல்லை..வெளியே போய் இருந்தேன்.."
"சரி சொல்லு..விசா இண்டெர்வியூக்கு போறேன்னு சொன்னியே...என்ன ஆச்சு.."

குரலில் கவலை தெரிந்தது.

"கிடைச்சிருச்சுப்பா..அடுத்த வாரத்தில் அமெரிக்கா கிளம்புறேன்.."

அவ்வளவுதான் எதிர்முனையில் சத்தமே இல்லை. பலத்த மௌனம்..இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை போலும்..

"அப்பா..அப்பா..ஹலோ..ஹலோ.."

இன்னும் மௌனம்..சிறிது நேரம் கழித்து பேசினார்கள்..

"நான் வேணுமின்னா கேன்சல் பண்ணிடவாப்பா...."

வார்த்தைகள் அவசரமாக வந்து விழுந்தன..

"அறிவிருக்காடா உனக்கு.."



8 comments:

vasu balaji said...

ம்ம்ம். அப்பா:)

Anonymous said...

usss....apppaaaa......
sentimentu thaangala...

Viji said...

அவருடைய மனைவியும், என்னுடைய மனைவிகளும் //

என்னங்க இப்படி போட்டு இருக்கீங்க.பார்த்து வீட்டுல சண்டை ஆகா போகுது.இருந்தாலும் நல பதிவு.

Unknown said...

ம்..ம்.. நல்லாயிருக்கு!
பகிர்ந்தமைக்கு நன்றி!!

taaru said...

அபப்ப்பப்பா ..... முடியல...அதெப்பிடி அண்ணே..!! அந்தூருக்கு போனா! இப்பூடி ஆயிடுறீங்க?

N.Parthiban said...

great style of writing...

endrum anbudan,
N.Parthiban

http://parthichezhian.blogspot.com

Anonymous said...

very nice

காஞ்சி முரளி said...

ஓர் தந்தையின் நேசத்தை அனுபவித்தவன்.... என்னை பொறுத்தளவில் என் முதல்... கடைசி... கடவுளும் அவர்தான்...
யார் என்ன சொன்னாலும் கவலையில்லை... எதையும் எதிர்பாராத... எதிர்பார்க்காத... பாசமும் நேசமும் ஓர் நல்ல தந்தையிடம் மட்டுமே காண முடியும்...
என்னை பொறுத்தளவில்.. ஓர் தந்தை... தன் பிள்ளைக்கு முதல் ஆசான்... வழிகாட்டி... எதையும் எதிர்பார்க்காத பாசம்.. கீதோபதேசம் செய்த கண்ணன்... அனைத்துமே என் தந்தை... அவர் என்னுடன் உடலால் இல்லாவிட்டாலும்... இன்றும் உள்ளத்தால் என்னுடன் இணைந்துதான்... என்றும்... (அவர் என் நினைவுடன் இணைந்து 25 ஆண்டுகள்)...

இந்த இடுகை என் தந்தையோடு இருந்த நாட்களை நினைவுபடுத்திவிட்டன...
நல்ல இடுகை...

வாழ்த்துக்கள்....

பாராட்டுக்கள்....

நட்புடன்...
காஞ்சி முரளி....

Post a Comment