
எனக்கு நடனத்தின் மீது தனி ஈடுபாடு உண்டு. நாம்தான் ஆட முடியவில்லையே, அடுத்தவர் ஆடுவதையாவது பார்ப்போம் என்ற ஆவல்தான். நடனத்தின் மூலம் கொண்டு வரமுடியாத உணர்வுகளே இல்லை. கோபம், அழுகை, தாபம், பொறாமை..என்று பல. சிலநேரம் நடனம் ஆடுபவர்களை பார்த்து பொறாமையாக இருக்கும். அற்புதமான கலை அவர்களுக்கு அநாயசமாக வருவதால். நடனம் கற்றுக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. நீங்கள் நடனம் கற்றுக் கொள்ளும் முன்பு யாரையாவது காதலித்தால் முதலில் அந்த காதலியை தள்ளி வைக்க வேண்டும்(ஊர விட்டு தள்ளி வைக்கிறோம்லே..). ஏனென்றால் உங்களுக்கு முதல் காதலியாய் இருக்கப்போவது நடனம்தான்.
எனக்கும் சிறு வயதில் இருந்தே, நடனம் ஆட ஆசைதான். அதுவும் கிளாசிகல் டான்ஸ் ஆட..இந்த பதிவில் பக்கத்தில் உள்ள என் படத்தை பாருங்கள்..நான் பரதநாட்டியம் ஆடினால் எப்படி இருக்கும்..காமெடியாக இருக்குமல்லவா..ஆனால் அப்போதெல்ல்லாம் நான் வெட்கப்படவில்லை. எப்படியாவது கிளாசிகல் டான்ஸ் ஆடியே தீரவேண்டும் என்பதால் என் அம்மாவை நச்சரித்தேன். என் தொந்தரவு தாங்க மாட்டாமல் எங்கள் ஊர் அக்ரஹாரத்தில் உள்ள டான்ஸ் டீச்சரிடம் சேர்த்து விட்டார்கள்.
அங்கு கிடைத்த வரவேற்பை எழுத ஆரம்பித்தால் பதிவர் டோண்டு தேடி வந்து அடிப்பார் என்பதால், சுருக்கமாக “எனக்கு டான்ஸ் வரவில்லை…” என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். கமல் பாணியில் சொல்லப்போனால், இன்னும் காளிவரம் கொடுக்கவில்லை என்பதோடு என்னை தேற்றிக் கொண்டேன்.
எனக்கும் டான்ஸ் ஆட வாய்ப்பு வந்தது பள்ளி நாட்களில். என்னுடைய பள்ளியில் ஆண்டுவிழாவுக்காக கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். என்னுடைய வகுப்பினில் இருந்து டான்ஸ் நிகழ்ச்சி. வழக்கம் போல் நான் ஒதுங்கியே நிற்கவே சனியன் சடை போட்டு இழுத்தது. முதல் வரிசையில் ஆடும் ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லாததால் என்னை அழைத்தார்கள். நானும் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டியாதாக ஆயிற்று. அதுவும் ஏதோ ஒரு ஆனந்தபாபு பாட்டுக்கு. நம்ம ரேஞ்சுக்கு ஒரு மைக் மோகன் பாட்டைக் கொடுத்தால், கரும்பு கடிப்பது மாதிரி மைக்கை பிடித்துக் கொண்டு தலையை ஒரு லெப்ட் ரைட் ஆட்டிவிட்டு போகலாம். அல்லது பாக்யராஜ் பாட்டை போட்டால், காலையில் எழுந்து எக்ஸர்சைஸ் பண்ணி விட்டு போகலாம். ஆனந்தபாபு பொதுவாக நடப்பதே, ஒரு மாதிரி டான்ஸ் மாதிரிதான் நடப்பார். கலங்கி போனேன்.
ஆனாலும் வெட்கப்படாமல் பிராக்டிஸ் செய்தேன். ஒருவழியாக மூன்று முறை ஒத்திகை பார்த்து, மேடைக்கு சென்றாகிவிட்டது. டான்ஸ் மூவ்மெண்டுகளில் கவனம் செய்த நான் உடையில் கவனம் செலுத்தாதது அன்று நான் செய்த ஒரே தவறு. முதல் வரிசையில் ஆடும் பையன் கொஞ்சம் குண்டாக இருந்ததால் அவனுக்குரிய உடையை கொடுத்திருந்தார்கள். குண்டு கல்யாணம் போடவேண்டிய பேண்டை ஓமக்குச்சி போட்டால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது. பெல்ட் போட்டாலும் இடுப்பில் நிற்கவில்லை. பேண்ட் சுத்தமாக இடுப்பில் என்ன, முழங்காலில் கூட நிற்கவில்லை.
அலறியே போனேன். ஆடமுடியாது என்று தகராறு செய்தேன். ஆசிரியர் மிரட்டலால் வேறு வழியில்லாமல், ஒரு கையால் அவிழ்ந்து விழும் பேண்டை பிடித்துக் கொண்டு ஒரு கையால் டான்ஸ் மூவ்மெண்டுகள் கொடுக்கவேண்டும். ஒரு வழியாக சமாளித்து ஆடிக்கொண்டிருந்தேன். பாடலில் ஒரு வரி வரும்..”பச்சை பசேலென்று குலுங்கும் சோலைகள்..” அந்த வரிக்கு ரெண்டு கையை தூக்கி ஆடவேண்டும். மறதியில் இரண்டு கைகளையும் தூக்கவே, அவ்வளவுதான்..அதற்கு முந்திய வாரம்தான், அப்பாவிடம் சண்டை போட்டு காசு வாங்கி இரண்டு உள்ளாடைகள் கடையில் வாங்கியிருந்தேன். அவைகள்தான் பலபேர்களின் கண்களையும், என்னுடைய மானத்தையும் காப்பாற்றியது.
அந்த நிகழ்ச்சிக்கு அப்பால், நான் எந்த டான்ஸ் ஆட்டத்திற்கும் போவதில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு டான்ஸ் ஷோ என்றால், பர்கர் கூட சாப்பிடாமல் பார்ப்பேன். அப்படி நான் வாரம்தோறும் பார்க்கும் நிகழ்ச்சிதான் விஜய் டீவியின் ஜோடி நம்பர் ஒன். சிலநேரம் அங்கு நடக்கும் டிராமாக்கள் என்னதான் கடுப்பேத்தினாலும், பங்குபெறுபவர்களின் திறமையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
அதில் கலந்து கொள்பவர்களில் என்னைக் கவர்ந்தவர், பிரேம் கோபால். யப்பா..என்ன திறமை. என்ன நளினம். என்ன அசைவுகள். நடனத்தை வெறியுடன் காதலிக்கும் ஒருவனால் மட்டுமே இது போல ஆட முடியும். போன வெள்ளிக்கிழமை விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக பிரேமினியுடன் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டிருப்பார் பாருங்கள். அவர் ஆட்டத்திற்கு நான் ஆடிப்போனேன். என்ன ஒரு ஆட்டம். ஒவ்வொரு நரம்பும் டான்ஸ் ஆடியது. போன முறை ஈழ்த்தமிழர்கள் பாடும் அவதியை ஒரு நடனத்தில் கொண்டு வந்து எல்லோரையும் கலங்க வைத்த இவர் ஒரு ஈழத்தமிழர். அந்த நடனத்தை பார்த்தபோது அன்று இரவு சாப்பாடு சாப்பிடமிடியவில்லை. என்ன ஒரு வீச்சு. பல குறும்படங்கள் சொன்ன கருத்தை ஒரே நடனத்தில் கொண்டு வந்த அற்புத கலைஞன். ஆனாலும் கண்டிப்பாக அவர் பைனலில் ஜெயிக்க மாட்டார். ஏனென்றால் மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்துவார்கள். முடிவாக தேர்ந்தெடுக்கப்பட போகிறவர், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை திவ்யதர்சினி.
பிரேம் கோபாலின் அந்த வெள்ளிக்கிழமை நடனத்தைப் பார்க்க கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.
http://www.youtube.com/watch?v=OrUnS8vLsFE
அவரின் ஈழம் சம்பந்தப்பட்ட நடனத்தைப் பார்க்க இங்கு கிளிக்கவும்.