Monday, 1 October 2012

சாட்டை



தமிழ் சினிமா உலகத்தில் நல்ல படங்களே அரிதாக வருகின்ற இந்த காலத்தில், அதைப் போக்கும் வகையில் தற்போது வந்த படமே அறிவழகன் இயக்கி, சமுத்திரக்கனி இயக்கியுள்ள சாட்டை திரைப்படம். அரசு பள்ளிக்கூடங்களில் நடக்கும், அவலநிலையை செவிட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கும், இத்திரைப்படம், ஏறக்குறையநம்மவர்படத்தின் கருவோடு ஒத்துப்போயிருக்கிறது. ஆனால் நம்மவர் படத்தின் தோல்விக்கும், இந்தப் படத்தின் வெற்றிக்கும், ஒரே காரணம், சாட்டைப் படம், ஏதோ 2 மணிநேரம் அரசு பள்ளியேலேயே நாமும் இருந்தோம் என்ற உணர்வை ஏற்படுத்தியதுதான். நம்மவர் படத்தில் மேலிட்ட அந்த அதிமேதாவித்தனமும், நாடகத்தனமும், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட காண்பிக்கப்படவில்லை, கிளைமேக்ஸ் காட்சியில், கத்தியை எடுத்துவரும் .ஹெச்,எம் தவிர..மற்றபடி, மனது சற்று உலுக்கிப்போடும்இந்த சாட்டை திரைப்படம், பல விருதுகள் வாங்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த படம் பார்க்கும்போது, உங்களுக்கு, ஏற்பட்ட உணர்விற்கும், எனக்கு ஏற்பட்ட உணர்விக்கும், ஒரு சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஏனென்றால், நான் பத்தாம் வகுப்பு வரை படித்தது, சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் என்ற சிறிய கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி. அதனாலேயே, இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும், என்னால், என் பள்ளிக்கூட அனுபவங்களோடு பொருத்தி பார்க்க முடிகிறது. இந்தப் படத்தில் வரும் சமுத்திரக்கனி போல இல்லாவிட்டாலும், முடிந்தவரை, பசங்களை, படிப்பின்மேல் ஆர்வம் ஏற்படவைத்த ராஜேஸ்வரி டீச்சர். தம்பி ராமையா போல், பள்ளிக்கூட மாணவர்களை ஸ்டிரைக்குக்கு தூண்டி விட்ட, உடற்கல்வி ஆசிரியர். தொப்புள் தெரியும்படி உடை உடுத்திவரும், கணக்கு டீச்சர். வகுப்பறையிலேயே தூங்கும், வயதான வரலாறு டீச்சர்வீட்டு வேலைகளையே முழுநேரம் பார்க்கவைக்கும், தமிழ் ஐயா..என்று அனைத்து கேரக்டர்களும், இன்னும் என் கண் முன்னால்..

நன்றாக நினைவிருக்கிறது. என்கூட படிக்கும், நண்பன் முருகபாண்டிக்கும் எனக்கும் தான் பயங்கரபோட்டி..யார் நன்றாக படிப்பது என்று..அப்புறம் சேர்ந்தவன் ஹெச்.சரவணன்..அதுவரை, இரண்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்தவனை, மூன்றாவது ரேங்க் வாங்கவைத்தவன். சற்றே பணக்காரப் பையன். டியூசன் வேறு தனியாக சென்று கொண்டிருந்தான். முருகபாண்டியை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். மிகவும், ஏழையான குடும்பம். அப்பா, அரிசிக்கடை வைத்திருந்தார்..சந்தையில், இந்தப்பையன் சென்று பகல் முழுவதும், வேலை பார்த்துவிட்டு, இரவு அந்த சிம்னி விளக்கில்தான் படிப்பான்..கரண்ட் பில் வரும் என்று வீட்டில் லைட்டெல்லாம் அணைத்துவிடுவார்கள். சிலநேரம், தெரு டியூப் லைட்டு வெளிச்சம்தான் அவனுக்கு ஒளி..

இரண்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்த எனக்கு, மூன்றாம் ரேங்க் வாங்கியவுடன் வெறி வர ஆரம்பித்தது..வீட்டிற்கும், பள்ளிக்கூடத்திற்கும், 3 கிலோமீட்டர் இருக்கும். பாலம் வழியாக நடந்து சென்றுதான் படிப்போம். நடக்கும்போதெல்லாம் படித்தேன். விளையாட செல்லமாட்டேன்..ஒலியும், ஒளியும் பார்ப்பதில்லை..வெறி வைத்து படித்தேன்..ஒரு முறை மயங்கிவிழுந்த பின்புதான் எனக்கே தெரிந்தது, என் வெறி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, ரிசல்டும் வந்தது. முருகபாண்டி – 465. நான் 450..ஹெச்.சரவணன் – 425..வாடிப்பட்டி வட்டத்தில் முதலாவது முருகபாண்டி

என் பையனுக்கு இத்தனை ஆற்றல் உள்ளதா, என்று என் பெற்றோர் வியந்தது அப்போதுதான். “இவனை பெரிய ஆளாக்கணும்டாஎன்று அப்பா, என் அண்ணாவிடம் சொன்னது, இன்னமும் என் காதுகளில். மார்க்கை பார்த்துவிட்டு, திண்டுக்கல் செயிண்ட்மேரிஸ் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்று உடனே கிளம்பினார்கள்..அன்றைக்கெல்லாம் வாடகை கார்பிடிப்பது என்பது பெரிய விஷயம். அப்பா, இருந்த சந்தோசத்தில், கையில் இருந்த காசையெல்லாம் புரட்டி, கார் பிடித்து, செயிண்ட்மேரிஸ் பள்ளிக்கு கூட்டிச்சென்றார்கள். தலைமையாசிரியர் மதிக்ககூடவில்லை..

எங்க ஸ்கூலுல 50 பேரு 450 எடுத்திருக்காங்க சார்..சீட்டு கிடைக்கிறது கஷ்டம்..அதுவும் அரசு பள்ளின்னு வேற சொல்லுறீங்க..அப்படி போய் உக்காருங்க..”

சார்..கவர்மெண்டு ஸ்கூல படிச்சு நல்ல மார்க்கு வாங்கிருக்கான் சார்..கொஞ்சம் தயவு பண்ணி சேர்த்துக்குங்க சார்என்று என் அப்பா கெஞ்சியது, இன்னமும் ஞாபகத்துக்கு வருகிறது.. கடைசியாக சேர்த்து கொள்ளப்பட்டு, அங்குள்ள ஹாஸ்டலிலும் அட்மிட் செய்யப்படேன்..அதுவரை சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்த எனக்குசிறைச்சாலைஎன்றால் எப்படி இருக்கும் என்று காட்டியது, அந்த ஹாஸ்டல். காலையில் 04:30 மணிக்கு எழுவது..எழாவிட்டால், குச்சி எடுத்து அடி..05 மணிக்கு, மைதானத்தில் உள்ள ஷவரில் குளியல்(ஒரு ஷவரில் இரண்டுபேர். விசில் அடிக்கும்போது தண்ணிவரும்..குளிக்கவேண்டும்..திரும்பவும் விசில் அடித்தால், தண்ணி நின்றுவிடும். சோப்பு போடவேண்டும். திரும்பவும் விசில் அடித்தால் தண்ணிவரும்..அவ்வளவுதான். அதிகபட்சம், 5 மணித்துளிதான்..) திரும்பவும் 05:30 மணிக்கு சர்ச்..06 மணிக்கு படிப்பு, 07 மணிக்கு சாப்பாடு, 08 மணிக்கு படிப்பு, 09 மணிக்கு வரிசையாக ஸ்கூல், 05 மணிக்கு விளையாட்டு, 6 மணிக்கு படிப்பு, 08 மணிக்கு சாப்பாடு, 09 மணிக்கு படிப்பு. 10 மணிக்கு தூக்கம்..இன்னமும் அந்த டைம்டேபிள் அப்படியே ஞாபகம் இருக்கிறது..அம்மா மடியிலே தூங்கி பழகியிருந்த எனக்கு, நரகத்தில் விட்டால் போல இருந்தது..அப்போதெல்லாம், தொலைபேசி என்ற ஒரு வஸ்துவே, இல்லாமல் இருந்தது. வீட்டிலிருந்து அம்மா லெட்டர் போடுவார்கள். மாதத்திற்கு ஒருமுறை..10 முறை அதையே மறைத்து வைத்து படித்தேன். பெண்களை பார்ப்பதே அபூர்வமாக இருந்தது.

இட்லியோடு, நாலுவகை சட்னி சாப்பிடு பழகிய எனக்கு, அந்த ஹாஸ்டல் சாப்பாடு, நரகல் போன்ற தோற்றம் தந்தது. அப்படியே திண்டுக்கல் பஸ்ஸில் அடிபட்டு செத்துவிடலாமா என்ற எண்ணம் கூட வந்தது..அனைத்தையும் பொறுத்துகொண்டேன், மாதத்திற்கு ஒருமுறை அம்மாவை பார்ப்பதற்கு..மாதத்திற்கு ஒருமுறைதான் ஹாஸ்டலில் பெற்றோர் அனுமதி. முதல் ஞாயிறன்று..அம்மாவும் அண்ணனும் வாசலில் ஒரு டிபன் பாக்ஸோடு உக்கார்ந்திருப்பார்கள். படிப்பு அறையில் இருந்து, என் பார்வை முழுவதும், அவர்கள் மேல்தான் இருக்கும்..அந்த மணி அடித்ததும்..அப்படியே ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுவேன்..”யம்மா..ஜெயிலு மாதிரி இருக்கும்மா..கூட்டிட்டு போயிரும்மா..” என்று கதற..”இன்னும் ரெண்டு வருசம் கண்ணு..பொறுத்துக்கப்பா..இங்கதான் படிப்பு நல்லா இருக்கும்பா..உன் வாழ்க்கை நல்லா இருக்கும்பாஎன்று கெஞ்சுவார்கள்..அம்மாவே ஊட்டி விடுவார்கள்..போகும்போது, அம்மா புடவை தலைப்பை பிடித்துக்கொள்வேன்பிரிய மனமில்லாமல் செல்வார்கள்..

அங்கு உள்ள பணக்கார பசங்களோடு என்னால் போட்டி போடமுடியவில்லை. அனைவரும் டியூசன் சென்றார்கள்..நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினார்கள்..பதினொன்றாம் வகுப்பில் நான் வாங்கிய மார்க் 600/1200…வீட்டில் பயந்து போனார்கள். என்னை மேலும் பயமாக்கியவர், 12ஆம் வகுப்பின் இயற்பியல் ஆசிரியர்..அவர் தனியாக டியூசன் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்..டேஸ்காலர் பசங்களெல்லாம், அவரிடம் டியூசன் சென்று கொண்டிருக்க, என்னால் செல்ல முடியவில்லை. டியூசன் வராத பசங்களை, அவர் படுத்திய பாடு சொல்லி மாளாது..வந்தவுடன், இரண்டு கேள்விகள், டியூசன் வராத பசங்களாய் பார்த்து கேட்பார். சொல்லாவிட்டால், பெஞ்ச் மேல் ஏறவைத்து, பிரம்பை எடுத்து அடி பிண்ணிவிடுவார்..

என் வீட்டில் கூட என்னை அடித்ததில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மறத்துவிட்டது. அவர் எந்த கேள்வி கேட்டாலும், சொல்லிவிடவேண்டும், என்று வெறி கொண்டு படித்தேன். சிலநேரங்களில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியதால் அவரே தடுமாறினார்..அதுவரை உடம்பில், அடிவாங்கியிருந்த எனக்கு, மனரீதியான அடியை கொடுத்தது, அந்த வார்த்தைதான்..ஒருமுறை பதில் சொல்லாதபோது..”உன்னையெல்லாம் ஏண்டா பெத்து போட்டாய்ங்க..காக்கா கலருல..நீயெல்லாம் சோப்பு போட்டா, அந்த சோப்பே கருப்பாயிரும்டா..” என்றார்அதுவரை வைராக்கியமாக இருந்த, எனக்கு, அந்த வார்த்தைகள் தூக்கிப்போட்டது….ஹாஸ்டலில் போய், பாத்ரூமுக்கு சென்று அழுதேன்..அழுதேன்..இனிமேல் இந்த நரகத்தில் இருக்ககூடாது, என்று, என் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி, யாருக்கும் சொல்லாமல் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தேன்..

ஏதோ ஒரு எண்ணம்..”நான் ஏன் போகவேண்டும்..படிக்கணும்டாஎன்று ஒரு வெறி..பத்தாம் வகுப்பில் வந்ததே அந்த வெறிதிரும்பவும் படிக்க ஆரம்பித்தேன்..இயற்பியல் ஆசிரியர் சொன்னதெல்லாம், என் மனதுக்குள் ஏறவில்லை..”1013” மார்க்..அந்த காலத்தில் எல்லாம், 1000 மார்க் எடுப்பதெல்லாம் சாதரணமில்லை..எனக்கே, என்னை பிடித்துபோனது..ஏதோ சாதித்ததாய் தோன்றியது..பள்ளியில் 1000 மார்க் எடுத்தவன் லிஸ்டில், இந்த அரசுபள்ளி மாணவன் என்றபோது, எனக்கே, என்னை நினைத்து பெருமையாக தோன்றியது..

அதனாலேயே, இந்த சாட்டை திரைப்படம் எனக்குள் பல உணர்வுகளை கிளறிவிட்டது..என் வாழ்க்கையில், இந்த மாற்றத்திற்கு காரணம், இரண்டு பேர்..ஒருவன் 10ஆம் வகுப்பு முருகபாண்டி..என்னதான், அடித்தாலும், என்னை, எனக்கு அடையாளம் காட்டிய அந்த இயற்பியல் ஆசிரியர்..இருவரையும் போனமுறை ஊருக்கு சென்றபோது பார்க்க முடிந்தது, எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம். முருகபாண்டியை வீட்டுக்கு சென்றபோது பார்த்தேன்..மிகவும் ஒடுங்கி போயிருந்தான்

படிக்கணும் ஆசைதாண்டா..பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருக்கும்போது., பெங்களூர் டைட்டன் தொழிற்சாலையிலிருந்து வந்திருந்தாய்ங்க..ஏதோ டெஸ்ட் வைச்சாய்ங்க..நான் மட்டும் தான் பாஸ் ஆனேன்..3000 ஆயிரம் ரூபாய் சம்பளம்..வாட்சுக்கு முலாம் பூசுற வேலைடாவீட்டுல கஷ்டமுனால, உடனே படிப்பை நிறுத்திட்டு அனுப்பிட்டாய்ங்கடா..சே..தெரியாம வந்துட்டண்டா..வேலை பின்னி எடுக்குறாய்ங்கடா..உடம்பு புல்லா ஒரே அலுப்புடா..எப்படிடா இருக்க

என்று கேட்டபோது, வறுமைதான், நம்நாட்டு மக்களின் சாபம் என்று கண்கூடாக தெரிந்தது..அவன் மட்டும் படித்திருந்தால் சத்தியமாக சொல்லுகிறேன்..கண்டிப்பாக ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பான்..ஆனால் இந்த வறுமைதான் எத்தனை பேருடைய கனவுகளை சிதைக்கிறது..

அந்த இயற்பியல் ஆசிரியரை, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில்தான் பார்த்தேன்..மிகவும் தளர்ந்திருந்தார்..எப்போதும், மிடுக்காக இருக்கும், முகம் முழுவதும் சுருக்கம்..ரிட்டையர்டு ஆகியிருந்தார்..நானேதான் சென்று அறிமுகமானேன்..

சார்..நான் ராசா.உங்க மாணவன்..”

என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை..எவ்வளவு மாணவர்களை பார்த்திருப்பார்..

அப்படியாப்பா..ரொம்ப சந்தோசம்..இப்ப என்ன பண்ணுற..”

சென்னையில ஒரு கம்பெனியில வேலை பார்க்குறேன் சார்…”

அவரைப் பற்றி கேட்டேன்..என்னை பிரம்பால் அடித்த அந்த இயற்பியல் சாரா என்று என்னால் நம்பமுடியவில்லை..அந்த கர்வம்..தேஜஸ்..எல்லாம் காணாமல் போயிருந்து..அன்று பயணம் முழுவதும் நான் தூங்கவில்லை..அவருடைய வாழ்க்கை பற்றியும், என் வாழ்க்கை பற்றியும், முழுக்கதான் அந்த பயணம் முழுவதும்..கிளம்பும்போது என் கையை பிடித்து கொண்டு சொன்னார்..

தம்பி..உங்களுக்கு எப்ப பாடம் எடுத்தேனுன்னு ஞாபகமில்லை..ஆனால் ஒன்னு மனசிலே இருக்கு தம்பிபசங்களை நல்லா படிக்க வைச்சிருணும் தம்பி.அதுதான், அவிங்களுக்கு நம்ப கொடுக்குற கொடை..வாழ்க்கை எல்லாம்..அதுதான் தம்பி சோறு போடும்….”

பிரிய மனமில்லாமல் கிளம்பினேன்..

ஆமாண்ணே..பசங்கள நல்லா படிக்க வைச்சிரணும்ணே…”

12 comments:

Anonymous said...

padikara pasangaluku oru tonic maadiri iruku sir unga article.....
Geetha

Good citizen said...

படம் கிடக்கட்டும் சார், அது வியாபாரம் ,உங்களின் அனுபவம் வியக்கத்தக்கது,ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் நான் படித்து ஜெயித்து காட்டுவேன் என்கிற வைராக்கியத்துடன் படித்து ஜெயித்து காட்டிவிட்டால் வரும் பாருங்கல் ஒரு சுயகெளரவம்,சுயமதிப்பும், கோடி ருபாய் சப்பாதித்தாலும் கிடைக்காத ஒன்று,கேளி பேசியவன் மூஞ்ஜியிலெல்லாம் மூத்திரத்தை பேய வேண்டும் என்று கூட தோன்றும்

சேக்காளி said...

சாட்டையின் விமர்சனம் என்ற பெயரில் ,விடுதி நினைவுகள்,முருகபாண்டி போன்ற திறமை மிக்கவர்கள் என்று எனக்கும் நெருக்கமான சம்பவங்களை ஞாபகப்படுத்தி மயிலிறகால் ........

Anonymous said...

murugapandiyin nilai romba parithaabamanadhu.

RAASU said...

ELLA KIRAMATHU MAANAVARKALUKUM ITHAI MAATHIRI SOLLAMUDIYATHA ANUBAVAM UNDU. UNKAL ANUBAVAMUM ENNODATHU MATHIRIYE. NALLA PATHIVU RAASA

raja said...

really impressed with your article..

பாவா ஷரீப் said...

ராசான்னே நீ எதுக்கு அழுவுற
நீ கருப்பு தங்கம்யா

நான் குடும்ப கஷ்டத்ல 10 th மேல
படிக்க முடியல அந்த வருத்தம் அப்புறம் இங்கிலீஷ்ல
பேச முடியலங்கறத நினைச்சு வருத்தபடாத நாளே இல்லண்ணே

Anonymous said...

Nalla pathivu sir.

Durai

Temple Jersey said...

Mullipallam ? What is your native village? And in which year you studied Sslc

Anonymous said...

ரொம்ப அருமை.
நன்றி
அருள்

Cable சங்கர் said...

ராசா.. படத்தை விட உங்க கதை நெகிழ்வானது. படம் ஒரு ட்ராமாவாகத்தான் இருக்கிற்து.

ராமுடு said...

Rasa.. Great. Hope you completed your HSC in 1995. I took the same exam from Titan in 94 and got selected from Govt School, Thanjavur. Thank god, I didn't go for it, because of my dad. Incidents from personal life - so touching. I m able to co-relate incidents with my school experience.

Post a Comment