Tuesday 14 May, 2013

இரு மரணங்கள்


பொதுவாகவே நான் எழுதப் பயப்படும் அல்லது சங்கடப்படும் விடயம் மரணம்தான்..காலை செய்தித்தாளை படிக்கும்போது, கடவுளை வேண்டி கொள்வதும் அதுதான்.."கடவுளே..இன்றைக்கு எந்த மரணச்செய்தியும் வந்திருக்க கூடாது.." ஆனால், மரணம் பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஒரு செய்திதாளையும் இதுவரை பார்த்ததில்லை..

பிறப்பை எவ்வளவு கொண்டாடுகிறோமோ, இறப்பை அவ்வளவு பயத்துடன் எதிர்நோக்கவேண்டியிருக்கிறது..யாரும் மரணத்தை விருப்பப்பட்டு அழைப்பதில்லை. தற்கொலை செய்பவர் கூட, விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுப்பதில்லை..

பிறப்பு, இறப்பு வாழ்க்கையில் சகஜம் என்று தேற்றுதலுக்கு வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நெருங்கிய அல்லது தெரிந்த ஒருவரோ இறந்துபோகும்போது, மனம் அடையும் துயரத்துக்கு அளவே இல்லை..

சிறுவயதிலிருந்து என் கூடவே, இருந்த ஒரு நண்பன், நான் பத்தாவது படிக்கும் வயதில் இறந்துபோனான்..நேற்று வரை என்னுடன் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்தவன், அன்று மட்டும் வரவேயில்லை..வீட்டுக்கு வந்தபிறகு..அம்மா மெதுவாக சொன்னார்கள்..

"ராசா..உன் பிரண்டு செத்துட்டாண்டா.."

நான் கேட்ட முதல் மரணச்செய்தி அதுதான்..எனக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை..

"என்னம்மா சொல்லுற..."

"வாடா..அவிய்ங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துருவோம்..."

மாட்டவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்..எப்படி அவனை பார்க்கமுடியும்..நேற்றுவரை என்னுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவனை, பிணமாக, படுக்கப்போட்டிருந்தால் எப்படி இருக்கும்..

என்னால் அவனைப் பார்க்கவே முடியாது என்று சொல்லிவிட்டேன்...

இன்னும் கூட என் நண்பனின் அண்ணனை, ஊரில் பார்க்க நேர்ந்தால், அவர் என்னிடம் கண்ணீருடன் கேட்பது..

"கடைசி வரைக்கும் வரலைல ராசா.."

"என்னால, அவனை அந்த கோலத்தில் பார்க்க முடியாதுண்ணே..."

இந்த வாரம் நான் கேட்ட, இரண்டு மரணச்செய்தியும், அந்த நிலைதான்..முதலில் நண்பர் பதிவர் பட்டாபட்டி..நான் பதிவுலகத்திற்கு வந்து, ஐந்துவருடங்களுக்கு மேல் இருக்கும்..அப்போதெல்லாம் இரண்டு பதிவர்கள், கேலி, கிண்டல் என பதிவு போட்டு கலக்கு, கலக்கென்று கலக்குவார்கள்..அவர்கள், பட்டாபட்டி, ரெட்டைவால்(என்று நினைக்கிறேன்)

நான் தவறாது படிக்கும் பதிவுகளில் நண்பர் பட்டாபட்டி பதிவுகள் தான் முதல்..அரசியல் நையாண்டி ஆகட்டும்.,சினிமா கலாய்ப்பு ஆகட்டும், எல்லாவற்ற்றிலும் கலக்கல்தான்..நான் ஒருநாள் அவருடைய பதிவுகளில் சென்று.."உங்கள் பிளாக்கை ரசிக்கும் வாசகனில் நானும் ஒருவன்" என்று கமெண்ட் செய்தினேன்..அவ்வளவுதான் செம கலாய்ப்பு..எனக்கோ, சந்தேகம்..
"என்னய்யா..நல்லதுதானே சொல்லியிருக்கிறேன்.." அப்புறம், அவர்களே சொன்னார்கள்..

"தப்பா எடுத்துக்காதிங்க பாஸூ..முதல் வாட்டி வர்றீங்க..அதுதான் கலாய்ச்சோம்.."

சிரித்துக் கொண்டேன்..அதற்கப்புறம் கமெண்டுகள் எதுவும் போடாவிட்டாலும், அவர் எப்போது பதிவு போட்டாலும், கமெண்டு போட்டாலும், தேடிப்பிடித்து படிப்பேன்..அவர் இப்போது இல்லை என்கிறபோது, என்னால் இன்னுமும் நம்பமுடியவில்லை.."சும்மாதான் கலாய்ச்சேன்.." என்று இதற்கும் சொல்லுவாரா என்று என் மனம் ஏங்குகிறது..ஆனால்...

அடுத்து என்னை பாதித்த மரணம்..என் பெரியப்பா பையன்..அதாவது எனக்கு அண்ணன் முறை...கம்பம் அருகில் உள்ள கிராமத்தில் சந்தோசமான குடும்பம்...ஞாயிற்று கிழமை, தோப்புக்கு சென்றிருக்கிறார்..அங்கு கீழே விழுந்து கிடந்த தென்னை மட்டையை எடுக்கும்போது, அதில் சுத்தியிருந்த , ஒரு கட்டுவிரியன் பாம்பு கடித்ததில்., விஷம் ஏறி...

ப்ச்.....அவர் போய் சேர்ந்துவிட்டார்..ஆனால் அவரை விட்டு பிரிந்து வாடும் என் பெரியப்பா குடும்பம்...

ஐயோ....மரணம்தான் எவ்வளவு கொடிது...


Wednesday 8 May, 2013

வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி



சென்னை வந்து வேலை தேடும்போது, முழுக்க மேன்சன் வாசம்தான்..கக்கூஸ் அளவே உள்ள ஒரு ரூமில், மூன்று பேர்..ஓனருக்கு தெரிந்து இரண்டு பேர், தெரியாமல் ஒருவர் என்று..இருக்கு இரண்டு பெட்களில், ஆளுக்கு ஒருவர்..இரண்டு கட்டிலுகளுக்கு இடையே இன்னொருவர்.. தரையில் தூங்கி கொண்டிருப்பவரிடம்.."பாஸ்.கொஞ்சம் இடம் கொடுக்குறீங்களா" என்று அனுமதி கேட்டுத்தான் வெளியே செல்லவேண்டும்..அவ்வளவு அருமையான வசதி..

காலமாற்றத்தில், ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, ஒரு நாலாயிரம் சம்பளம் வாங்கும்போது..

"ஓ..மை..காட்..வாட் எ டெர்ட்டி பிளேஸ்" என்று பகுமானமாக சொல்லிக்கொண்டு, நானும் என் நண்பனும் வீடு பார்க்க துவங்கியபோது, எங்களை மேலும் வெறியேற்றியது...

"வீடு வாடகைக்கு - வெஜிடேரியன் ஒன்லி.."

என்ற வாசகம் தான்..அதுவும் எப்படியும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவிடவேண்டும், அப்பதான் ஊருக்குள்ளாற நாலு பேரு மதிப்பாய்ங்க என்று  கிடைக்கும் நாலாயிரத்தில், மூவாயிரத்துக்கு வேட்டு வைக்கும் முடிவோடு, ராவும் பகலுமா அலைந்ததில், கடைசியாக ஒரு வீடு கிடைத்தது..

"கரெக்டா நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க" என்ற ஓனரிடம் இரண்டு மணிக்கெல்லாம் வந்துருவோம் சார்..என்று, ஹி..ஹி த்தபோது, ஒரு மாதிரியாக பார்த்தார்..வேறு வழி..வீடு வேண்டுமே..அதுவும் ஐந்தாயிரம் ருபாய்க்கு...

அவர் வீட்டு அரண்மனையை சுற்றி காட்டிவிட்டு..அட்வான்ஸ் ஐம்பதாயிரம் என்று சொன்னபோது, நண்பன்.."ஹவுஸிங்க் லோன் போடலாமா சார்" என்று அப்பாவியாக கேட்டான்.. கடைசியாக அடித்து பிடித்து இருபத்தைந்தாயிரத்து ஒப்புகொண்டு..புரட்டிகொடுக்கும்போது, வாங்குவதற்கு முன் அவர் கேட்ட ஒரே கேள்வி..

"ஓ..கேட்க மறந்துட்டேன்..நீங்க வெஜிடெரியன்தானே..."

எனக்கு குப்பென்று வேர்த்தது..ஆமா என்று சொல்லலாமலும்..இல்லை என்று சொல்லாமலும், இருபக்கம் தலையை ஆட்ட..நண்பன் கூச்சப்படாமல்.."நான் வெஜிடேரியன் சார்" என்றான்..எனக்கு படு குழப்பம்..ஒரு நாளைக்கு சிக்கன், அல்லது முட்டை கிடைக்காவிட்டால், அந்தப் பக்கம் அதுபாட்டுக்கு போகும் பல்லியை பிரை பண்ணி சாப்பிடும் அளவுக்கு நண்பன் நான் வெஜ் பார்ட்டி..

வெளியே வந்தவுடனே..

"டே..மச்சி..ஏண்டா வெஜிடேரியன்னு பொய் சொன்ன்ன" என்றேன்...

"டே..நா எங்கடா பொய் சொன்னேன்.."நான்-வெஜிடேரியன்" தான்னு சொன்னேன்..உண்மைதானே.." அப்படிங்குறான்..

அப்பவே தெரிஞ்சுபோச்சு..பயபுள்ள பெரிய ஆளா வருவான்னு..சென்னையிலே வாய் இல்லைன்னா நாய் கூட மதிக்காதுங்குறத கரெக்டா புரிஞ்சுவைச்சிருக்கிற ஒரே ஜீவன், அவன் தான்..

அதற்கப்புறம் சொன்ன பொய்யை மறைக்க நாங்க பட்ட பாடும்...முக்கு கடையில் வாங்கி வந்த சிக்கனை சாப்பிட்டு எலும்பை மறைக்க நாங்க பட்ட பாடும்,காலத்தால் அழியாத ஒரு சரித்திரம்..அதுவும் முக்கியமாக, சிக்கன் மஞ்சூரியனை சரியாக டிஸ்போஸ் பண்ணாமல், ஒருதுண்டு தெருவில் விழ..ஓனர் பார்த்துவிட்டு...

"என்னப்பா புள்ள நீங்க...காலி பிளவர் பிரையை இப்படியா கீழ போடுறது.."
என்று கேட்கும் அளவுக்கு போனதை நினைத்தால், இன்றும் புரை ஏறும் அளவுக்கு சிரிப்பு..கடைசியாக காலி பண்ணும்போது பொறுக்க மாட்டாமல்..

"சாரி..சார்..நாங்க சுத்த நான் வெஜிடேரியன்..அதுவும் இந்தப் பய நண்டு, மீன் இல்லாம சாப்பிடவே மாட்டான்னா பார்த்துக்குங்களேன்..அதுவும்..உங்க வீட்டு அடுப்பறையில் சமைச்சா, அப்படி ஒரு டேஸ்ட்டுன்னா பார்த்துக்குங்களேன்.." என்று கலாய்த்து..அவர், "ஐயோ..".. என்று அவர் அலறுவதற்குள்.."சும்மா கலாய்ச்சோம், சார்..வெளியில் தான் சாப்பிடுவோம்.." என்று சொன்னாலும்,..அவர் முகம் கலவரம் ஆனது, இன்னும் அடங்கவில்லை..நூறு ரூபாயை எடுத்துக்கொண்டே அட்வான்சைத் திருப்பி கொடுத்தார்..ஒருவேளை "ஊதுபத்தி" வாங்க செலவுபோல என்று எண்ணி கொண்டு ஒன்றும் சொல்லவில்லை...

இப்போதெல்லாம், பேப்பரை புரட்டும்போது.."வெஜிடேரியன் ஒன்லி" என்பதை பார்த்தால், "நான்-வெஜிடேரியன் சார்" என்று சொன்னது மனசுக்கு வந்து, சிரிக்க ஆரம்பித்துவிடுகிறேன்..

இதற்காகவே, சென்னையில் ஒரு வீடு சொந்தமாக வாங்கி, நான் வாடகை வீட்டிலாவது தங்கி..இப்படி போர்டு மாட்ட வேண்டும் என்று ஆசை..அல்லது வெறியாக உள்ளது..

"வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி.."

Wednesday 1 May, 2013

எனக்கொரு கேர்ள் பிரண்ட்...



கடந்த முறை "நீயா நானா" வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு என் மனதை கேசரி மாதிரி கிண்டிவிட்டது..அதாவது இன்றைய காலகட்டத்தில் "ஆண்-பெண் நட்பு சாத்தியமே.." என்று ஒரு அணியில், நொந்துபோன அப்பாக்களும், நூடுல்ஸ் ஆன அண்ணன்களும், எதிர் அணியில் "எனக்கொரு பாய் பிரண்ட்ஸ் வேண்டுமடா" என்று பாடிக்கொண்டு இந்த தலைமுறை பெண்களும் அமர்ந்திருந்தனர்..அந்த காலத்தில காலேஜ் படிக்கும்போது என்று நான் ஆரம்பித்தால் "யப்பே..ஆளை விடுடா..சொந்தக் கதைய சொரிய ஆரம்பிச்சுட்டாண்டா" என்று பலபேர் சொரிய..இது..எழுந்துபோக வாய்ப்பு அதிகம் உள்ளதால், படிக்கும் 48 பேரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் மேற்கொண்டு தொடரவில்லை...

ஆனால் என் மனதை இன்னும் அரித்துக்கொண்டு இருக்கும் கேள்வி..தூய்மையான "ஆண்-பெண்" நட்பு சாத்தியமா அதுவும் இந்த காலகட்டத்தில்..எனக்கு கிடைத்த அனுபவங்கள் சாத்தியம் இல்லையோ என்று பயப்பட வைக்கிறது..

நான் சென்னையில் வேலை தேடியபோது கிடைத்த அனுபவங்கள் அப்படி...ஏ.சி காரில் சொகுசாக சென்னை ரோட்டுகளில் பயணம் செய்வதை விட, மிதமான கூட்டம் உள்ள பேருந்துகளில் பயணம் செய்து பாருங்கள்..உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை எடுத்து, மணிரத்னத்திடம் கொடுத்து, அடுத்த படமாவது நல்ல படமாக எடுக்க சொல்லலாம். அவ்வளவு அனுபவங்கள்..

அதுபோன்ற பேருந்துகளில் இளைஞர்கள் நடத்தும் உரையாடல்கள், அவ்வபோது காதில் விழுவதுண்டு...

"செம பிகர்டா மச்சி..எப்படியாவது கவுத்துடுணும்.."
"பிக் அப் ஆயிருமா.."
"மடிச்சுரலாமா.."
"லைட்டா நூல் விட்டு பார்க்கலாம.."

எந்தப் பையனும், எந்தப் பொண்ணிடமாவது, நட்பாக பேசி ஒருகாலும் பார்த்ததில்லை..ஓரக்கண்ணால் பார்ப்பது, சைடு பார்வை பார்ப்பது..எப்படியாவது காதலிக்கவைக்கவேண்டும் என்ற வெறி..என்ற அனைத்தும் காதலையோ அல்லது காமத்தையோ எதிர்நோக்கியே அமைந்திருப்பதாக உணர்ந்தேன்..அதாவது நான் பார்த்த அனுபவங்களில்..

சரி..ஒரு சின்ன சர்வே எடுக்கலாம், இதைப் படிப்பவர்களிடம்..."நாங்க எல்லாம் கடைசி வரைக்கும் "ட்ரூ" பிரண்ட்ஸ் என்று "ப்ரூ" காபி குடிப்பது மாதிரி சொல்பவர்களாக நீங்கள்.."இருக்கலாம்..ஆனால் ஒரு நிமிடமாவது..அல்லது, ஒரு நொடியாவது, அவனால் அல்லது அவளால் கவரப்பட்டு, "ச்சே..இவள்/இவன் வாழ்க்கை துணையாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்திருப்பீர்கள்..அட..பொய் சொல்லதிங்க சார்..கண்டிப்பாக நினைத்திருப்பீர்கள் தானே...அப்ப சத்தம் போடாம என் பக்கம் வந்து உக்காருங்க..

ஓகே..மீதி யாருங்க அங்க கை தூக்குவது..ஓகே..உங்களிடம் இன்னொரு கேள்வி....உங்கள் நண்பி/நண்பர் வந்து "ம்..உங்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தயக்கமா இருக்கு..ஐ.திங்க்..ஐ ஆம் இன் லவ் வித் யூ.." அப்படி சொல்லுகிறார்கள் என்று வைத்து கொள்வோம்..மனசைத் தொட்டு சொல்லுங்கள்..

"ந்நோ..நோ...யூ.ஆர்.மை.டியர் பிரண்ட்...உன்னை அப்படி நினைக்கவே இல்லை.."

இப்படி சொல்லிவீர்களா..மாட்டீர்கள் தானே..அப்புடின்னா என் சைடுல வந்து உக்காருங்க..

மீதி கையை தூக்கிக்கிட்டு இருக்கிறது..அப்பாவியா இருக்குற அந்த ரெண்டு பேரும்..

"ரியலி கிரேட் சார்..இந்த காலத்திலயும், உண்மையான நட்பா பழகுறீங்க பாருங்க..சூப்பர்..கொடுத்துவைச்சவங்க சார் உங்க பிரண்டு..என்னது..கல்யாணம் ஆகியும் இன்னும் ஒரு கேர்ள் பிரண்டு கூட கிடைக்கலையா...அதுக்கு நான்..ஹெல்ப்பு பண்ண..."

அடப்போங்கையா....

ஜோக்ஸ் அபார்ட்...மனதை தொட்டு சொல்லுங்கள்..நீங்கள் எந்த பெண்ணிடமாவாது, கடைசி வரைக்கும் நட்பாக பழகி இருக்கிறீர்களா..அதாவது, காதலாக மாற சந்தர்ப்பம் கிடைத்தும்...

ராயல் சல்யூட் சார்...

(எனக்கு பெண் நண்பிகள் கிடைத்தும் அனைத்தையும் நானே கெடுத்துக் கொண்டேன்..இப்படித்தான் நான் காலேஜ் படிக்கிறப்ப..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..கொஞ்சம் கேட்டுட்டு போங்க..ஹல்லோ..)