Sunday 29 September, 2013

தூள் கிளப்பிய ஜாக்சன்வில் கல்யாண கலைவிழா - 2013





“ஏங்க..இந்த மாப்பிள்ளை பய என்ன பண்ணுறார் பாருங்க..முகூர்த்தத்துக்கு நேரம்
ஆயிடுச்சு..”


“மணப்பெண் தோழிகளெல்லாம் எங்கப்பா போயிட்டாங்க..ஒருத்தர் கூட ஆளை காணோம்.விழா ஆரம்பிக்கபோகுதுல்ல..”


“சாப்பாடு நல்லா இருக்கணும்பா சொல்லிப்புட்டேன்..வந்தவங்க வயிறார சாப்பிட்டு வாழ்த்தணும்..”

இவையெல்லாம், மதுரையிலோ, திருச்சியிலோ, அல்லது சென்னையிலோ ஏதோ ஒரு 
திருமண மண்டபத்தில் கேட்ட உரையாடல் அல்ல. தமிழ்நாட்டிலிருந்து பல மைல்களுக்கு 
அப்பால், கண்டம் விட்டு கண்டம் கடந்து, தகவல் தொழில்நுட்பதுறை இளைஞர்களின் கனவுதேசமான அமெரிக்காவில் ஒரு நகரத்தில் கேட்டவை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..


ஆமாம், அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில், ஜாக்சன்வில் என்ற சிறிய நகரத்தில் “ஜாக்சன்வில் தமிழ் மன்றம்” என்ற தமிழர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட “கல்யாண கலைவிழா” என்ற நிகழ்ச்சியில் களை கட்டிய ஏற்பாடுகளின்போதுதான், அனைத்தும் அமர்க்களமாய் நடந்தது..


ஊரைவிட்டு வந்து ஏழு, பத்து வருடங்கள் ஆயிற்று, என்னதான் பிட்சா பர்கர் சாப்பிட்டாலும், நம்ம ஊருல போடுற, அந்த அப்பளம், பாயசத்துக்கு ஈடாகுமாய்யா, என்ற நம்மவர்களின் பேச்சை சீரியசா எடுத்துக்கொண்டு, “ஏன் இங்கு ஒரு கல்யாண கலைவிழா நடத்தக்கூடாது”, என்று பல ஏற்பாடுகளை செய்து அனைவருக்கு, “குடும்பத்தோடு எங்க கல்யாணத்துக்கு வந்திருங்க” என்று முழுமனதாக பத்திரிக்கை அனுப்பினால் யாரால் வராமல் இருக்க முடியும்..



அதுவும் நம்ம ஊரு திருமண நிகழ்வுகள் மறக்ககூடியவைகளா என்ன..


“ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, கல்யாண மண்டபம் தேடி அலையும் பெற்றோர்கள்..”


“நீங்களா பார்த்து பொண்ணுக்கு என்ன போடுறீங்களோ போடுங்க..வேண்டாமுன்னா சொல்லபோறாம்..என்ன மாப்பிள்ள, ஒரு பிளசர் காருல போயிட்டு வந்தா, உங்களுக்குதானே பெருமை..” என்று நைசா ஒரே வார்த்தையில் காருக்கு அடிபோடும் மாப்பிள்ளை வீட்டார்.


“எக்ஸ்க்யூஸ்மி, பொண்ணுக்கு சிஸ்டர் இருக்கா என்று வாண்டடாக கேட்டு ஓரப்பார்வையில் தேடும், மாப்பிள்ளை தம்பி..”


“மாப்பிள்ளை கொஞ்சம் கலரு கம்மியோ” என்று ஏத்திவிட்டு மகிழும், தமன்னா கலர் பக்கத்து வீட்டம்மாக்கள்...


“மொதல்ல, ஸ்வீட்டு காரம் சாப்பிட்டுவோமா” என்று வந்த நோக்கத்திலேயே குறியாக இருக்கும், சப்போர்ட்டுக்கு கூட்டி வரப்பட்ட சொந்த பந்தங்கள்..


“பையன் தங்கமானவன், ஒரு கெட்ட பழக்கமும் இல்லை” என்று கூசாமல் பொய் பேசும் தரகர்கள்


“வீட்டுக்கு போய் சொல்றோமே” என்று நாசூக்காக கிளம்பி செல்லும் பெற்றோர்கள்"


“நிச்சயம் ஆகுற வரைக்கும் கை நனைக்ககூடாதாக்கும்” என்று வீராப்பாக, பேப்பரில் கை துடைத்து சொல்லும் பந்தங்கள்


“என்ன மச்சான்..பூரி வேகவேயில்லை” என்று ரெண்டு நாளாக பட்டினி கிடந்து, காலையில் பூரி கிழங்கில் புகுந்து விளையாடும் சொந்தங்கள்


“என்னய்யா மண்டபம் அரேஞ்ச் பண்ணியிருக்காய்ங்க..ஒரு ஏ.சி இல்லையே..மாப்பிள்ளை வீட்டுக்காரய்ங்கன்னா, ஒரு மரியாதை வேண்டாம்” எனும் ஏதோ சோழா ஹோட்டலிலே தினமும் ரூம்போட்டு தங்கும் ரேஞ்சுக்கு அலும்பு பண்ணும், மாப்பிள்ளை வீட்டார்கள்


தன்னை திரிஷாக்களாக எண்ணி கொண்டு, மணப்பெண்ணை விட, ஒரு கோட்டிங்க் மேக்கப் போட்டு கொண்டு, அங்கிட்டும், இங்கிட்டும் கேட்வாக் செய்யும் மண்ப்பெண் தோழிகள்..

இந்த வேகாத வெயிலிலும், எதுக்கென்றே தெரியாமல் சபாரி போட்டுகொண்டு மாப்பிள்ளை கொடுக்குபோல சுற்றும், மாப்பிள்ளை தோழர்கள்..


திருப்பதிக்கு அடுத்தபடி, எப்போதும் கதவு பூட்டியே இருக்கும் மணப்பெண் அறை..


“அட சீக்கிரம் முடிங்கப்பா, சாப்பாட்டுக்கு நேரம் ஆகுதுல்ல..” என்று சாப்பிடுவதற்காகவே,திருமணத்திற்க்கு வந்திருக்கும் கூட்டத்தினர்..


“தாலி கட்டிய மறுநிமிடம், எங்கடா போனாய்ங்க” என்று தேடும் அளவுக்கு அடுத்த செகண்டே, பந்திக்கு ஆஜராகும் ஊர்க்காரய்ங்க..


“யோவ்....என்னய்யா சாம்பாரை ஊத்துற..ரசம் எங்கய்யா..பாயாசம் இங்க வா..பக்கத்து இலைக்கு ஊத்து, அப்படியே நம்மளுக்கும் ஒரு கரண்டி ஊத்திடு..” கண்ணும் கருத்துமாக பந்தியில் அடித்து கட்டும் நம்மவர்கள்..


அறிவியலே கன்ப்யூஸ் ஆகும் காம்பினேஷனாக, அப்பளத்தை கையை வைத்து நொறுக்கி, பாயசத்தில் விட்டு பிசைந்து, ஜென்ம சாபல்யம் அடைந்து, புறங்கையை நக்கிகொண்டே, கைகழுவ செல்லும் மனிதர்கள்..


“தமிழுல, எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை “மொய்” என்று, “எம் பணத்தை வைச்சு கல்யாணம் நடத்துறீங்கள்ள..நாசமா போங்கடா” என்று மனதுக்குள் கருவிகொண்டே..”ஹி..ஹி..மாணிக்கம் 101 ரூபா, நல்லா கொட்டை எழுத்துல எழுதிக்குங்கய்யா..ஆமா, எங்கய்யா தாம்பூல பை” என்று அந்த நேரத்திலும் அடிபோடும் சொந்தங்கள்...


"யோவ், எங்களையும் கவனிய்ங்கய்யா. பசிக்குதுய்யா.என்று பரிதாபமாக கூப்பிய கையோடு கடைசியாக நிற்கும் மணமக்கள்.."


இப்படி பல, பல, பல..மறக்ககூடியவைகளா என்ன..திருமணம் என்பது நம்ம ஊரில் ஒரு சாதரண நிகழ்வா என்ன..ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், பெருமையாக எண்ணப்படும் ஒரு திருவிழா..



அந்த நிகழ்வை முடிந்த வரைக்கும், சுவையாகவும் , மண்மணம் மாறாமலும் அமெரிக்காவில் கொண்டுவர முடிகிறெதென்றால் சாதாரண காரியமா..முடிந்தவரை சிறப்பாக செய்திருந்தது, ஜாக்சன்வில் தமிழ் மன்றம்


சனிக்கிழமை சரியாக மதியம் நான்கு மணிக்கு தொடங்கிய திருமண கலைவிழா, 
ஆரம்பித்திலேயே களை கட்டியது. அந்த அரங்கத்தில் எங்கு திரும்பினாலும், திருமண மண்டபத்தும் எங்கும் குறைவில்லாத அலங்காரங்கள். முக்கியமாக, மணப்பெண், மணவாளன் அமரும் இருக்கைகள், அதே அலங்காரத்தோடு..அதில் அமர்ந்து அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..அப்படி எடுத்த புகைப்படத்தை பார்க்கும்போது, “அப்படியே ஐந்து வருடம் முன்பு, நடந்த கல்யாணம் ஞாபகம் வருதுல்லங்க” என்று வெட்கத்தோடு கணவன்மார்களை கேட்கும் மனைவிகளிடம், “அந்தக் கொடுமைய ஏன் ஞாபகப்படுத்துற” என்று மனதில் இருப்பதை  சொல்லமுடியாமல், “ஆமாண்டி செல்லம்” என்று ஹி.ஹிக்கும் கணவன்மார்கள் என்று அந்த இடமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.



அடுத்து ஆரம்பித்தது, நிக்ழ்வின் மையமான “கலைவிழா நிகழ்ச்சிகள்..”. இதுபோன்ற கலைவிழாக்களில் பொதுவாக விழாக்களின் நோக்கத்தை விட்டுவிட்டு, குத்துப்பாடல்களாக போட்டு தாளிப்பார்கள்..ஆனால், இங்கு நடத்திய அனைத்து நடனங்களும், நிகழ்ச்சிகளும், விழாவின், மையக்கருத்தை ஒட்டியே அமைந்திருந்தது. அதுவும், நம்ம ஊரு திருமண நிகழ்வை அப்படியே, குழந்தைகள் மூலம் கொண்டு வந்த நடன நிகழ்ச்சிகள் அற்புதம், காணக் கண் கோடி வேண்டும்...அட..அட..அட..குறிப்பாக அப்பாக்களுக்கும், மகன்களும் மேடையில் ஆடிய சிலம்பாட்டம் நிகழ்ச்சி, ஒரு பானை சோறு பதம்..அருமைய்யா...



கடைசியாக ஆரம்பித்தது நாவுக்கு தேவையான அருசுவை உணவு..அதிலும் ஒரு வித்தியாசம்..ஏதோ ஒரு ஹோட்டலில் ஆர்டர் பண்ணி மெனக்கெட டெலிவர் செய்யும் உணவாக இல்லாமல், விழாவுக்கு வந்திருந்த அனைவரையுமே, அவர்களால் முடிந்த உணவை எடுத்து வரச்சொல்லியிருந்தார்கள்..அங்கே அனைத்தையும், கூட்டாஞ்சோறாக வைத்து, அசத்தியிருந்தார்கள்..அதுவும், வத்தக்குழம்பில் அவ்வளவு வெரைட்டி எங்கும் பார்த்திருக்கமுடியாது..அவ்வளவும் அருமை..



அதுவும் திருமண விழாக்களில் சாப்பாட்டில் கவனிப்பார்களே, அதுபோலவே, தமிழ்மன்ற தலைவர் “செந்தில்” மற்றும் “ரமேஷ்” அவர்களும் முடிந்தவரை அனைவரிடமும் சென்று “நல்லா சாப்பிட்டிங்களா, எப்படி இருந்தது” என்று விசாரித்தபோது, உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது..


விழா முடிந்து, காரில் ஏறியபோது, அனைத்து மகிழ்ச்சியையும் அப்படியே மனதில் ஏற்றி கொண்டார்போல இருந்தது...ஊரை விட்டு பல மைல்கள் இருக்கும் நினைவே, அகன்று போனது...ஏதோ சொந்த பந்தங்களோடு, ஒரு திருமண விழாவில் கலந்தது போன்ற ஒரு 
உணர்வு..


“ஆமா..உங்க வூட்டுல கல்யாணம் எதுவும் வைக்கிறீங்க..????”