Saturday, 18 January 2014

சென்னை புத்தக கண்காட்சி – ஒரு அனுபவம்



சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்வது என்று முடிவெடுத்து, என் பல்சரை கிளப்பியபோது, என்னை பயமுறுத்திய ஒரே கேள்வி, “என்ன புத்தகங்கள் வாங்குவது.. சென்னை பல்கலைகழகத்தில் ஒரு வேலை வேறு இருந்தது. அதை முடித்துவிட்டு, எங்கு சாப்பிடுவது என்று யோசித்தபோது, மண்டையில் மணி அடித்தது. அட, நம் திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ்.

2000ம்களில், வேலை தேடி சென்னை வந்தபோது, திருவல்லிக்கேணி மேன்சன்தான் சொர்க்கமாக இருந்தது. காலை பசியை, ஒரு, டீயோடு அடக்கி கொண்டு, மத்தியானம் பொறுத்திருந்து, திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ்ஸில், அந்த சோத்து மூட்டைக்குள், சாம்பாரை குழைத்து, வாயில் வைக்கும்போது, ஒரு வெறி வரும். அது பசி வெறி. அதே வெறியில், வந்து ஒரு தூக்கத்தை போட்டோமென்றால், நைட்டு எழுந்தாலும், ஒரு டீயை குடித்துவிட்டு, அங்குள்ள அசிஸ்டெண்ட் டைரக்டர்களிடம், “அப்புறம் மச்சி..அந்த சூட்டிங்குல..” என்று ஆரம்பித்தால், அடுத்த நாள் காலை ஆகிவிடும்..திரும்பவும், டீ, காசி விநாயகா மெஸ் என்று தொடர்ந்து போதுதான், எனக்கு தெரிருந்தது..”ஆஹா..சென்னைக்கு நம்ம வேலை தேட வந்திருக்கோம்டோய்..”

பல எண்ண அலைகளோடு, என் பல்சர், காசி விநாயகாவை நெருங்க, “பொங்கலுக்காக, ஜனவரி10-ஜனவரி 19” வரை விடுமுறை என்ற போர்டு வரவேற்று கொண்டு இருந்தது. உலகத்திலேயே, பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை விடும், ஒரே ஹோட்டல், நம்ம காசி விநாயகாதான் என்ற பெருமிதத்துடனும், பசியோடும், வண்டியை புத்தக கண்காட்சியை நோக்கி இயக்கினேன்..

மணி வேறு, மதியம் இரண்டு ஆகிவிட, பசி வயிற்றைக் கிள்ளியது. சரி, ஸ்டாலில் சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்தால், “ஆஹா..புத்தக கண்காட்சிக்கு சென்று, அங்கு மதிய உண்வை கட்டினால், வரலாறும், பிற்கால சந்ததிகளும், தவறாக பேசி விடுவார்களோ என்ற பயத்தில், ஏதோ ஒரு தெருவுக்குள் உள்ள ஹோட்டலுக்கு வண்டியை செலுத்தினேன். பார்க்கிங்க் செய்து விட்டு பார்த்தால், “பஞ்சாபி தாபா..”

பஞ்சாபியாவது, கிஞ்சாபியாவது, ஏதாவது, வயிற்றுக்குள் போனால் போதும், என்ற எண்ணத்துடன், பில் கவுண்டர் இருக்கும் இடம் சென்று “என்ன இருக்கு” என்றபோது, “கியா..” என்றார்கள். போச்சுடா, என்று நொந்து கொண்டே, ஒரு பபே ஆர்டர் பண்ண, 125 ரூபா என்று சொல்லி, ஒரு ப்ளேட்டை கையில் திணிக்க, உள்ளே நுழைந்தால், அனைவர் கையிலும், அதே தட்டு. என்ன அங்கு தயாராகிறது, என்று பார்த்தால், புரோட்டாவாம். பத்து புரோட்டா, ரெடியாகி, அங்கு வைக்கும்முன்பே, ஒருவர் கையை விட்டு, ஆறு புரோட்டாவை தூக்கினார், நான் பரிதாபாமாக பார்க்க, சைடுவாக்கில் நின்று கொண்டிருந்த ஒரு “க்யா” லேடி மீதி உள்ள 4 புரோட்டாவை தூக்கி கொண்டு என்னை ஏளனமாக பார்க்க, எனக்கென்னமோ, தேனாம்பேட்டை சிக்னலில் தட்டோடு நிற்பது போன்ற ஒரு எண்ணம்..

சாப்பிட என்னாதாண்டா வைச்சிருக்கிங்க என்ற வெறியோடு, ஒவ்வொரு பாத்திரமாக செல்ல, எல்லாம், ஒரே டைப் மசாலாக்கள் மற்றும், நூடுல்சாம்..அதாவது நூடுல்ஸ், பஞ்சாப் பராம்பரிய சாப்பாடாம்...அதை, ரெண்டு கவளம் அள்ளி கொண்டு, சோத்தை தேடினால், அங்கே கொஞ்சம்,பாத்திரத்தோடு ஒட்டி கொண்டு இருந்தது..போய் அதை சுரண்டி எடுத்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தால்..”யப்பே...வாயில் வைக்க முடியவில்லை..” பக்கத்து சீட்டில் “ஜிலேபி ஹா..சூப்பர்..கியா, ஹே..” என்று ஒரு கோஸ்டி, அடுத்த நகர்வுக்கு ரெடியாகி கொண்டிருந்தது..

என் கண்ணுக்கு கடைசியாக பட்ட தயிர் சாதத்தை மட்டும், உள்ளே தள்ளிவிட்டு, பார்க்கிங்க் வந்தபோது, என் பைக்குக்கு முன்னால், பத்து பைக்குகள். சின்ன பிள்ளையாய் இருக்கும்போது, வட்டமான பிளாஸ்டிக் கட்டங்களில், கோலி குண்டை, தள்ளி, தள்ளி நடுவில் கொண்டு சேர்க்கும், விளையாட்டுதான் ஞாபகம் வந்தது. நம்மவர்களிடம் உள்ள பார்க்கிங்க் சென்ஸ்..சூப்பருண்ணா..முன்னாடி உள்ளவன் எப்படி வண்டியை எடுப்பான் என்ற ஒரு துளி எண்ணம் கூட இல்லாமல், கிடைத்த கேப்பில் எல்லாம், டூவீலரை நிறுத்தி, மன்னிக்கவும், சொறுகி இருந்தார்கள்..

கண்களில் மிரட்சியோடு, புத்தக கண்காட்சி செல்ல, 4 மணி ஆகி இருந்தது. இந்த முறை கண்காட்சி, இன்னும் பெரிதாகி இருந்தது. ஒரு வெண்திரையில் நடிகர் ஜீவா..”இப்ப வந்து பார்த்தீங்கன்னா..ஆக்சுவலி,..” என்று புத்தக கண்காட்சிக்கு அழைப்பு விட்டு கொண்டிருந்தார்..நுழைவுச்சீட்டு வாங்கி விட்டு, உள்ளே நுழையும்போது, மனுஷ்யபுத்திரனும், அதிஷாவும்,சிரித்து கொண்டு இருந்தார்கள்.

உள்ளே சென்று பார்த்தபோது, பிரமிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது..ஆயிரம் கடைகள்..எங்கு பார்த்தாலும், மக்கள் வெள்ளம்..எதையோ, தேடி கொண்டிருந்தது..எனக்கு என்ன வாங்குவது என்றுதான் தெரியவில்லை..கொஞ்சம், தெரிந்திருந்த, கிழக்கு, உயிர்மை, என்று உள்ளே செல்ல, நிறைய புத்தகங்கள் வாங்க தூண்டின..வாங்கிய முதல் புத்தகம், ராகவன் எழுதிய “ஹிட்லர்”.

அடுத்து கல்வி சம்பந்தமாகவும், குழந்தைகள் சம்பந்தமாகவும், சில புத்தகங்களை வாங்கி விட்டு , சிறிது உலாத்தியபோது, காதில் விழுந்த டயலாக்குகள், கீழே..

“லிச்சி சூஸ், இந்தவாட்டி டேஸ்டே இல்லைல..”

“செத்த உக்கார, இடம் எதுவும் போட்டிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..மூச்சு வாங்குது..”

“போன தடவை மாதிரி இந்த தடவையும் கமல் வர்றாரா..போன தடவை பார்த்தேன், எம்பூட்டு கலரு தெரியும்ல..சுண்டினா ரத்தம் வரும்..”

“வாங்க சார்..நம்ம கடைக்கு வாங்க..”

“எக்ஸ்க்யூஸ்மி..டூ யூ ஹேவ் கிட்ஸ்..வி ஹேவ் லாட் ஆப் புக்ஸ்..கம்..ப்ளீஸ்..”

“இங்கே எங்கயாவது டாய்லட் இருக்குமா..”

“மச்சி..சமோசா, எந்த கடையில வாங்குன..மொக்கையா இருக்கு..”

“மாப்பு...ஏதோ அவசரத்துல, கொண்டு வந்த, மூவாயிரத்துக்கும், தேவையில்லாம புக்கு வாங்கிட்டேன்.திருப்பி கொடுத்தா வாங்கிக்கிருவாய்ங்களா..”

“யே..ரோஷன்..ஓடாத நில்லு..கமான்..இதுக்குதான் ஒழுங்கா பீச்சுக்கு போகலாம்னு சொன்னேன்..கேட்டாத்தான..”

எனக்கென்னமோ, புத்தக கண்காட்சி, என்பதற்கும், பொருட்காட்சி, என்பதற்கும், நிறைய சம்பந்தம் இருப்பது போலவே தோன்றியது..வெளியே வந்து, ஒரு டீயை குடித்து விட்டு வந்தால், அங்கு உள்ள அரங்கத்தை சுற்றி பயங்கர கூட்டம்..”
 
“இந்த நாட்டில் நீதி எங்கே..நீதி செத்து விட்டதா..” என்று கோஷம் சத்தமாக கேட்க, ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தேன்..

ஐந்து இளைஞர்கள், மற்றும், ஒரு பெண் குழுவாக, ஒரு புரட்சி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருந்தார்கள். சில டயலாக்குகளை கேட்டபோது, நமக்கே நாடி நரம்பு எல்லாம் புரட்சி ஏறியது.. உதாரணமாக..

“இங்க நீதியெல்லாம் கிடைக்காது..இது இந்தியா..”

“நீதியா கேட்குறீங்க..நீதி..”

“பொங்கி எழுங்கள்..தட்டி கேளுங்கள்...”

“ஊமைகளாகவே இருந்து கொண்டிருக்கிறோம்..எப்போது எழப் போகிறோம்..”

“நீதி எங்கு கிடைக்கும்..”

என்ற கோஷம் போட்டபோது, பக்கத்தில் நான்கு அல்லது, ஐந்து வயதே ஆகியிருக்கும் ஒரு சிறுவன், அவன் அம்மாவிடம்..

“மம்மி..வாட் இஸ் நீதி....நீதி வேணும்னு கேட்கிறாங்க.நீல்கிரிஸ்ல, ரிலையன்ஸ் பிரஷ் ஷாப்பில நீதி வாங்க முடியாதா..அங்க கேட்டா கிடைக்காதா..” என்றான்..

அம்மா..”சமர்த்து” என்றார்கள் சிரித்து கொண்டே..

கொஞ்சம் சோர்வாக வெளியே வந்தபோது, அந்த மேடையில் நீதி கேட்டு ஆவேசமாக வசனம் பேசிய ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்..அவரை பார்த்து “சார்..நல்லா நடிச்சீங்க சார்..அருமை” என்று உள்மனம் சொன்னாலும், மனதுக்குள் ஒரு தயக்கம்..

என்னை கடந்து சென்றபோது, முன்னாடி நடந்து கொண்டிருந்தவர் காலின் மேல் லைட்டாக, அவர் பைக் மோதிவிட, நடந்தவர் கோபமாக திரும்பி பார்த்து, “ஏன் சார்..பார்த்து பைக் ஓட்டகூடாதா” என்றார்..

“ஹல்லோ..நடந்து போறப்ப, நீங்கதான் பார்த்து போகணும்..பைக்குல போறவய்கிட்ட சண்டைக்கு வர்றீங்க” என்று கேட்டுவிட்டு, விர்றென்று சென்றார், சற்று முன்பு “எங்கே நீதி கிடைக்கும்” வசனம் பேசியவர்..

எனக்கென்னமோ, அந்த குழந்தை சொல்லியபடி, கூடிய சீக்கிரம், நீல்கிரிஸ் கடையிலயோ, ரிலையன்ஸ் பிரஷ் கடையிலயோ, நீதி கிடைக்கும் போலத்தான் தோன்றுகிறது..

14 comments:

Anonymous said...

வணக்கம்

(((என்னை கடந்து சென்றபோது, முன்னாடி நடந்து கொண்டிருந்தவர் காலின் மேல் லைட்டாக, அவர் பைக் மோதிவிட, நடந்தவர் கோபமாக திரும்பி பார்த்து, “ஏன் சார்..பார்த்து பைக் ஓட்டகூடாதா)))

இந்த காலத்தில் நண்மை எது தீமை எது என்று தெரியாத காலம்...
காலம் மாறிப்போயிட்டு.நாம் கவனமாக இருந்தால் சரிதான்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோவை நேரம் said...

கோர்வையான எழுத்து நடை....நன்று....

கார்த்திக் சரவணன் said...

சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க.... ஆமா, நீங்க இன்னும் இந்தியால தான் இருக்கீங்களா?

அவிய்ங்க ராசா said...

நன்றி ரூபன், கோவை நேரம்..
ஸ்கூல் பையன்..இனிமே, இங்கதான்..))

Robert said...

ஹா ஹா ... சரிதான் அட்டெண்டன்ஸ போட்டாச்சா !!!

Robert said...

நம்மவர்களிடம் உள்ள பார்க்கிங்க் சென்ஸ்..சூப்பருண்ணா..முன்னாடி உள்ளவன் எப்படி வண்டியை எடுப்பான் என்ற ஒரு துளி எண்ணம் கூட இல்லாமல், கிடைத்த கேப்பில் எல்லாம், டூவீலரை நிறுத்தி, மன்னிக்கவும், சொறுகி இருந்தார்கள்..//அப்ப இந்தியக் குடிமகனா இன்னமும் மாறலையா ??

Robert said...

அடுத்து கல்வி சம்பந்தமாகவும்// மெய்யாலுமா ???

Robert said...

நல்ல flow புன்னகைக்க, சிரிக்க .

Unknown said...

எழுத்து நடை நன்று, அருமை , புன்னகை வரவைத்தது நன்றி

தனிமரம் said...

நீதி எங்கே எல்லா இடமும் இப்படித்தான் போலும் ஐயா.

'பரிவை' சே.குமார் said...

அழகான எழுத்து நடை...
ஒரு சிறுகதை வாசிக்கும் அனுபவத்தைக் கொடுத்தது...

Anonymous said...

Gomale..... Alaye kanom?!?!?!

Anonymous said...

Ngoyyale yenga poita?

Unknown said...

Arumai.

Post a Comment