Thursday, 6 September 2012

யம்மா…



அம்மாவுக்கு கால் பண்ணி, இதோடு ஒரு வாரம் ஆகிறது. ஏனோ தெரியவில்லை..அமெரிக்கா வந்தபிறகு, மனதும் மறத்துப்போகிறதோ..அலுவலகம் செல்ல சொகுசான கார், நிமிடத்தில் வந்துவிடும் உணவு. அள்ளி இறைக்க டாலர், இனிக்க இனிக்க பேசும் நட்புகள், ஒருநிமிடத்தில் இணையத்தில் மூலம் அடையக்கூடிய உலகம் , எல்லாம் சேர்ந்து, அம்மாவை மறக்கச் செய்திடுமோ., எனக்கே தெரியவில்லை..

அமெரிக்கா வரும் வரை, அம்மாவிடம் பேசாமல், ஒருநாள் கூட இருந்ததில்லை. சென்னையில் இருக்கும்போது, எழுந்தால்யம்மா..எழுந்துட்டேன்மா..டீ குடிக்கப்போறேன்..”, ஆபிஸுக்கு கிளம்பும்போது கூடயம்மா..ஆபிசுக்கு போறேன்..”, “யம்மா தியேட்டருக்கு போறேன்..”யம்மா, லஞ்சுக்கு போறேன்..”, எத்தனை யம்மாக்கள்..நான் பொதுவாகஅம்மாஎன்று கூப்பிட்டதேயே இல்லை..அது என்ன நாடகத்தனமாகஅம்மா..”. எனக்குப் பிடிப்பதில்லை..”யம்மாஎன்று கூப்பிட்டால் கிடைக்கும் அந்நியோன்னியம், “அம்மாவில் கிடைக்கிறதா என்ன.. “யார் கூடடா இம்புட்டு நேரம் பேசுற..கேர்ள் பிரண்டாஎன்று நண்பர்கள் கேட்டபோது..”இல்லைடா..அம்மாஎன்று சொன்னபோது, கேலியாக பார்த்தார்கள்..

எப்போது கால் பண்ணினாலும் அம்மா கேட்கும் முதல் வார்த்தைராசா சாப்பிட்டயா..” என்றுதான்..”யம்மா..போதும்மா..உன்மவன் சாப்பிட்டு, சாப்பிட்டுதான், இப்படி இருக்கேன்..கொஞ்சம் ஒல்லியாகிக்கிறேன்மா..விடும்மாஎன்றால், “அடப்போடாஎன் மவனுக்கென்ன..ராசாவுக்குஎன்பார்கள், காக்கைக்கும் பொன் குஞ்சாய்..

அதே குரலில் ஒரு நாள்யம்ம்மா..விசா கிடைச்சிருச்சும்மாஎன்று நேரில் பார்த்து சொன்னபோது, அம்மாவின் கண்ணைப் பார்த்தேன்..சடக்கென்று எட்டிப் பார்த்த கண்ணீரை, எங்கே நான் பார்த்து விடுவேனோ என்ற பயத்தில் மறைத்துவிட்டு  “அப்படியாப்பா..ரொம்ப சந்தோசம்பாஎப்ப பிளைட்டுஎன்று சொல்லி சந்தோசமாய் நடித்தாள், உள்ளுக்குள் அழுகையோடு..

யம்மா..நான் வேணா இங்கேயே இருந்துருவா…” என்று கேட்ட போது, “அடப் போடா..கிறுக்குப் பயலே..நாலு ஊருக்கு போனாத்தாண்டா அறிவு நல்லா வளரும்என்று சொல்லிக்கொண்டே விழியில் இருந்த கண்ணீரை எனக்குத் தெரியாமல் துடைத்தவள்..

ஏர்போர்ட்டில் விமானத்தில் ஏறும்போது, எல்லாரிடம் சொல்லிவிட்டு, அம்மாவிடம் சொல்லத் திராணி, இல்லாதவனாய், பக்கத்தில் சென்றுயம்மா..போயிட்டு வர்றேம்மா..” என்று சொல்ல, அழக்கூடாது, என்ற தீர்மானமாய் வந்தவள், ஒரு நிமிடத்தில் சின்ன குழந்தை போல அழயம்மா..இருந்துரவா…” என்று கேட்டபோது, “போடா..அதெல்லாம்..நாங்க நல்லா இருப்போம்..கவலைப்படாத..சூதானமா போயிட்டு வா..” என்று சொன்னவள்

கிளம்பும் போது, “யம்மா..உன் ஞாபகார்த்தமா ஏதாவது கொடும்மாஎன்று கேட்க, அவள் அழுக்கு சுருக்குப்பையிலிருந்து, எடுத்து கொடுத்த, அந்த வியர்வையில் நனைந்த 10 ரூபாய், இன்னும் என் மணிபர்ஸில்..என்னதான் 100 டாலர்தாள் இருந்தாலும், அந்த 10 ரூபாயை எடுக்கும்போது, இன்னும் என் கை நடுங்கத்தான் செய்கிறது..அதை முகர்ந்துபார்க்கும்போது, அதே, அம்மாவின் வாசம்..ஊருக்குச் செல்லும்போதெல்லாம், அவள் மடியில் படுத்துக்கொள்ளும்போது, ஒரு வாசம் வருமே..அதே வாசம்..

அப்படிப்பட அம்மாவோடுதான் பேசி, ஒரு வாரம் ஆகிறது..வேலை வந்தால், மனதும் மறத்து போகுமா என்ன..வீட்டில் நுழைந்தவுடன், மனைவிதான் ஞாபகப்படுத்தினாள்..

ஏங்க..அம்மா கால் பண்ணியிருந்தாங்க..ஒரு வாரமா கால் செய்யலைன்ன்னு சொன்னாங்க..”

இல்லை..வேலை இருந்துச்சுல்ல..மறந்துட்டேன்..”

ஏங்க இப்படி..பாவங்க..குரல் ரொம்ப கலங்கிப் போயிருந்துச்சு..ஆபிசுக்கு போன் பண்ணிணால் கூட எடுக்க மாட்டிங்குறேங்களாம்..”

ஏய்..ஆபிசுல ஆயிரம் கால் இருக்கு..எப்படி அட்டெண்ட் பண்ணமுடியும்..” எரிந்தேன்

போய் முகம் கழுவிவிட்டு, இணையத்தில் அமர்ந்துவிட்டு, செய்திகள் படிக்கிறேன்..சாப்பிடுகிறேன்நண்பர்களுக்கு தொலைபேசுகிறேன்தூங்கப் போகிறேன்..அனைத்தையும் செய்கிறேன், அனிச்சை செயலாய்.. கடைசியாக, நண்பனுக்கு பணம் அனுப்புவதற்காக, பர்சை திறந்து கிரெடிட் கார்டு எடுக்கும்போது, அந்த பத்து ரூபாய் நோட்டு கீழே விழுந்தது, அதே அழுக்காய்..ஆனால், மடிப்பு கலையாமா..எடுத்து முகர்ந்து பார்த்தேன்..அம்மா வாசம்….”ராசா..என்னை மறந்துட்டில்ல..” என்று அம்மா கேட்பது போல் இருந்தது..ஒரு நிமிடம் செத்துவிட்டேன்..டாலர், கார், வீடு, சொகுசு, அம்மாவை மறக்கச்செய்யுமாபதறிப்போனென்….எப்படி மறந்தேன்…..

அவசரம், அவசரமாக, வீட்டுக்கு கால் செய்ய அம்மாதான் எடுத்தார்கள்

யம்மா..சாரிம்மா..மறந்துட்டேன்..கொஞ்சம் வேலை இருந்துச்சு..அதான்..சாரிம்மா..”

ராசா சாப்பிட்டயா…”

12 comments:

IlayaDhasan said...

என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே , ஜெ ஜக்கம்மா...ம்மா!

ஆனந்தி.. said...

Sooooooo Touching post....

Unknown said...

அழுது கொண்டு இருக்கிறேன். (நான் ஒரு நாளும் மறந்ததில்லை எங்க அம்மாவுக்கு போன் பண்ண.. IT -யில் வேலை [நானும் தான்], நல்ல சம்பளம், சொகுசு வாழ்க்கை இருந்து என்ன பயன்.. ஏழ்மையில் இருக்கும், தினமும் வேலை செய்தால்தான் சாப்பாடு என்று இருக்கும் ஒருவனுக்கு / ஒருத்திக்கு கிடைத்த அந்த [அம்மாவுடன் சேர்ந்து வாழும்] பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லை. எங்க அம்மாவும் போன் பண்ணவுடன் கேட்பது "சாப்டியாப்பா..")

திண்டுக்கல் தனபாலன் said...

ஏங்க வைக்கும் பதிவு...

Sivaranjani said...

மிகவும் நெகிழ்ந்து போனேன்.. அருமையான பதிவு..

ILA (a) இளா said...

யோவ்.. அசத்திட்டியேய்யா.. என்னமாதிரியான ஒரு பதிவு.. கலங்கடிச்சிடுச்சு..(அம்மாகிட்ட பேசிக்கிட்டே தட்டச்சுறேன்)

இராஜராஜேஸ்வரி said...

நெகிழ வைத்த அருமையான பதிவு யம்மா !!..

Unknown said...

கண்ணில் நீரை வரவைத்த பதிவு. உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்

அவிய்ங்க ராசா said...

நன்றி இளையதாசன்(கமெண்டுதான் புரியல..)))
நன்றி ஆனந்தி
நன்றி தமிழ் உலகம்
நன்றி ராஜேஸ்வரி
நன்றி ஜி.பி
நன்றி இளா..(அமெரிக்காவில்தானே இருக்கீங்க..)
நன்றி சிவரஞ்சனி
நன்றி தனபாலன்
நன்றி கருப்பசாமி..

kavi said...

நெகிழ வைத்த பதிவு

SELECTED ME said...

பிரிந்திருக்கும்போதுதான் பிரிவின் வலி தெரியும்! அருமை

பாவா ஷரீப் said...

rasa touch

super rasanne

Post a Comment