Wednesday, 30 May 2012

காதலில் சொதப்புவது எப்படி..



"மதுமிதா..." இந்தப் பெயரை சொல்லும்போதே அவனுக்கு ஜிலீரென்றிருந்தது. மீண்டும் ஒருமுறை அந்தப்பெயரைச் சொல்லிப் பார்த்தான்.
இதோடு, 48 முறை சொல்லியிருக்கிறான் இந்தப்பெயரை, இன்று மட்டும். இன்னும் சொல்லுவான்...100 தடவை சொன்னாலும் அலுக்கவில்லை.
தன்னுடய பெயர் "ரமேஷை" கூட அவன் இவ்வளவு முறை சொல்லியதில்லை..


ஒரு மாதத்திற்கு முன்புவரை, எந்தப் பெண்ணோ, அல்லது பெயரோ, அவனை ஈர்த்ததில்லை. ஆனால், எல்லாம் அவளை பார்க்கும்வரைதான்.
அவளை, ரயில்வே ஸ்டேஷனில்தானின் முதலில் பார்த்தான்...இல்லை விழுங்கினான்...அவள் அந்த பக்கம் வரும்போது, மனது
படபடத்தது.."கடவுளே..இவள் என் கம்பார்ட்மெண்டுக்கு மட்டும் வந்துவிட்டால்..ஊருக்கு வந்து நேர்த்தி செலுத்துகிறேன்.."


ஆனால், பழம் நழுவி, பீரில் விழுந்தார் போல் அவனை நோக்கியே வந்தாள்...

"எக்.ஸ்.க்யூஸ்..மீ"

அவனுக்கு நா ஓட்டிக்கொண்டது..என்ன பேசுவதென்று தெரியவில்லை...சொல்லப்போகும் இரண்டு எழுத்துக்களையே முழுங்கினான்..

"எ...ஸ்..."

"இதுதானே எஸ் 6 கம்பார்ட்மெண்ட்"

இல்லையென்றாலும், அவன் ஆமாம்தான் சொல்லியிருந்தான்..

"யா..யா..."

"தேங்க்ஸ்..." சிரித்தாள்..ஆஹா..இன்று தேவதை என் அருகிலா..அதுவும், இவ்வளவு அருகிலா..இன்று கண்டிப்பாக தூங்கக்கூடாது..
என்று முடிவெடுத்தான்...எப்படி ஆரம்பிக்கலாம்..


"எக்.ஸ்.கியூஸ்..மி..ஐ. ஆம் ரமேஷ்...மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்.."
ம்..ஹீம்..

"ஹே..ஹவ் ஆர்..யூ....."

ம்..இன்னும் இன்னோவேட்டிவாக இருக்கவேண்டுமே...

"ப்ச்..எப்படிங்க..இவ்வளவு அழகா இருக்கீங்க..."

வாவ்..இதையே சொல்லிவிட்லாம்..தீர்மானத்துடன் அவளை நோக்கினான்..இதயம் பட்டென்று வெடித்தது..அவளை காணவில்லை..
ஓ..மை..காட்..எங்கே அவள்..மெல்லியதாக குரட்டைச் சத்தம் கேட்கவே, குழப்பத்துடன் மேல் பெர்த்தைப் பார்க்க...அவள் தான்
இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கிறாள்..வெறுத்துப் போய்விட்டது..சரவணபவணில், அம்மாவாசை
இலை சாப்பாடு போட்டு, படாரென்று "சாரி..சார்..நோ..மீல்ஸ்..ஒன்லி பிட்சா" என்று சொன்னால் எப்படி இருக்கும்.

அனைத்து கனவுகளும் ஒரு நிமிஷத்தில் நொறுங்கிப் போயின.. அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்..ஏதாவது
கொசு கடித்தாலாவது, அவள் முழிப்பாளா என்று ஏங்கினான்..அன்று பார்த்து பாழாய்ப்போன ஒரு கொசு கூட காணவில்லை..
ஏதாவது மேட் வாங்கி வைக்காலாமோ என்று யோசித்தான்..இப்போதெல்லாம், மேட்டுகளை தேடித்தானே கொசுக்கள் வருகின்றன..


வெறுத்துப்போய் தூங்கியவன், காலையில் விழித்துப் பார்த்தபோது, அவளை காணவில்லை..நடுவிலேயே எங்கயோ இறங்கியிருந்தாள்..
முதன்முதலாக, அவன் மேலே அவனுக்கே வெறுப்பு வந்தது.."சே..மிஸ் பண்ணிட்டயேடா..."


இரண்டு நாட்களாக, அவள் நினைவாக இருக்க..மூன்று நாட்களில், வேலைப் பளு காரணமாக மறந்து போனான்..ஆனால் "வாழ்க்கை
ஒரு வட்டம்டா.." என்று இளைய தலைவலி சொன்னது போல, அவனுக்கு அவள் காட்சி கொடுத்தாள்., அன்று..அதுவும், தினமும்
அவன் ஏறும் பஸ்ஸ்டாப்பில்.."வாட்..இவள் நம்ம ஏரியாவா..இதுநாள் வரை எப்படி பார்க்கவில்லை..."


ஆனால், இந்தமுறை அவளை மிஸ் பண்ண அவன் விரும்பவில்லை..சிறிது சிறிதாக அவளருகில் சென்றவன்..

"எக்..ஸ்..கியூஸ்,,மி.."

சட்டென்று காதில் உள்ள ஓயர் போனை துண்டித்தாள்..தேவதைக்கும் கூட பாட்டு பிடிக்கும்போல..

"எஸ்.."

"ஏங்க...என்னை ஞாபகம் இருக்கா..அன்னைக்கு டிரெயினுல பார்த்தோமே..நீங்க கூட.."

அவள் சற்று குழப்பமானாள்..

ஐயய்யோ..தெரியாது என்று சொல்லிவிடுவாளோ..

"ஓ..எஸ்..நௌ ஐ ரிமெம்பர் யூ..ஹவ் ர் யூ.." என்று கையை நீட்டினாள்..
வாவ்,,அதுக்குள் கையா..கையை கர்ச்சிப் வைத்து துடைத்துக்கொண்டான்..
கையை நீட்ட, முதன் முதலாக ஒரு பெண்ணின் கை..முதல் ஸ்பரிசம்..ஆயிரம் முதன் மழை அவனை நனைத்ததுபோல்
இருந்தது..அன்று அவன் கையை கழுவவேயில்லை..சாப்பிடும் போது கூட ஸ்பூன்தான்..கையை அடிக்கடி மோந்து பார்த்துக்
கொண்டான்


அன்றிலிருந்து..அவனுக்கு அப்ரைசலே, அவளிடம், பேசுவதுதான்..மெதுமெதுவாக அவளிடம் பேச ஆரம்பிக்க..அவளும், அவனிடம் சகஜமாக நெருங்கினாள்..அதுவும் ஒரு வாரத்துக்குள்..வாவ்..
ஒரு வாரத்தில் ஒரு பெண்ணை ஈர்த்துவிட்டேனா..அதுவும்..தேவதையை..நம்பாமல் இருக்கமுடியவில்லை..வானமும் வசப்படுமோ..
அவளும் என்னை விரும்புகிறாளோ..காதல் முரளி மாதிரி இருக்க விரும்பவில்லை..கண்டிப்பாக சொலலியே ஆக வேண்டும்..

சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியான காபி ஷாப்பிற்கு கூட்டி செல்லவேண்டும்..அங்கே வைத்து நேரம் பார்த்து சொல்லவேண்டும்..
"ஐ.லவ்.யூ.."..சே..எடுத்தவுடனே சொல்லக்கூடாது..ஏதாவது கதை பேசிக்கொண்டே..பட்டென்று சொல்லிவிடவேண்டும்..நிறைய முறை ப்ராக்டிஸ் செய்து,ஒரு முறையை தேர்ந்தெடுத்தான்..அவளிடம் அரை மணிநேரம் கேட்டு இருந்தான், இதோ, தேவதை, அவனருகில், காபி கோப்பையுடன்..


"ஹே..மதுமிதா.."

"சொல்லுப்பா.."

"ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்..சொல்லலாமா..."
பீப்..பீப்..அவள் செல்போன், மெசெஜ் ரிங்க்டோன் கேட்கவே..

"ஒன்மினிட்யா.." என்று, மெசெஜ் பண்ணியவள்..நிமிர 5 நிமிடங்கள் ஆனது..

"ம்..சாரிப்பா..ஒன் ஆவ் மை பிரண்ட்.நேம் இஸ் தினேஷ்...அவனுக்கு வேற வேலையே இல்லை..நிமிஷத்துக்கு ஒரு மெசெஜ் பண்ணுவான்...ரிப்ளை பண்ணலைனா கத்துவான்.....ப்ச்..சரி..நீ சொல்லுப்பா..."

"அது..வந்து..என்னைப் பத்தி என்னை நினைக்குற.."

"ஹே..என்ன இது புது கேள்வி..யூ..ர்..மை..டியர்..."

இப்போது, ரிங்க்டோன்...திரும்பவும் அவள் போனில் இருந்துதான்..

"கம்..ஆன்....ஒன் மினிட்யா"...போனை எடுத்தவள் முகம் மாறியது..

"ஹே..ராகுல்..வாட் இஸ்..திஸ்..கம் ஆன் யா..ஐ காண்ட் கம் நௌ..ஐ..வில் மீட் யூ டுமாரோ..பீளிஸ்...அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கையா..ஆபிசுல
எவ்வளவு வேலை தெரியுமா..ஹே..ஷல் வீ மீட் இன் வீக் எண்ட்..வாட்..கம்..ஆன்..டோண்ட் ஸ்கோல்ட் மீ..ஓகே..டியர்..சீ..யூ.."

போனை மடக்கியவள் நிமிர்ந்து பார்த்தாள்..

"சாரியா..எகெய்ன் அனதர் கால்..இவனுக்கும் வேற வேலையே இல்லை...பத்து நிமிசத்துக்கு ஒரு கால் பண்ணிருவான்..பட் ஓகெ....நீ ஏதோ
சொல்ல வந்தியே..வாட் இஸ் தேட்.."


இப்போது, அவனுக்கு சொல்லவந்தது மறந்தே விட்டது..நான் என்ன சொல்ல வந்தேன்..அவளிடமே கேட்டான்..

"நான் கடைசியா என்ன சொன்னேன்.."

"ஓ..ஐ..பர்காட்..என்ன சொல்ல வந்து.."

"அது வந்து..ஐ...ஐ...."

எச்சில் முழுங்கினான்..

திரும்பவும், அவளுக்கு ரிங்க்டோன்..

"ஹே...ரியலி சாரியா..திஸ் ஸ் மை க்ரேட் பிரண்ட்..ஹெர் நேம் இஸ் திவ்யா..ஐ..நீட் டூ அட்டெண்ட்.."

"ஹல்ல்லோ திவ்யா..எங்கடி இருக்க..நான் தான் சொன்னேன்ல..ஐ..ஆம் இன் மீட்டிங்க் வித் ஒன் ஆப் மை ப்ரண்ட்..."

இதற்கு மேல் அவனால் பொறுக்கமுடியவில்லை...அப்படியே எழுந்து நின்றவன்..

"மதுமிதா.."

போன் பேசிக்கொண்டே நிமிர்ந்தவள்,

"ஒன் மினிட்யா.." என்றாள்....

"நோ மதுமிதா.யூ டேக் யுவர் ஓன் டைம்..பட்..நான் சொல்ல வந்ததை சொல்லிர்றேன்..ஐ தாட், ஐ லவ் யூ..பட் நாட் நௌ..
உன்னை என்ன மாதிரி லவ் பண்ணினேன் தெரியுமா..உன்மேல பைத்தியாமா இருந்தேன்..ப்ச்..டெய்லி, உன் முகத்தைப்
பார்க்கலைனா, என்னால தூக்கம் வராது..ஆனால்....உங்கிட்ட அரை மணிநேரம் தானே கேட்டேன்..எனக்காக ஒரு
அரை மணி உன்னால ஒதுக்க முடியல..அதுக்குள்ள..4 மெசேஜ்ஜூ..நாப்பத்தெட்டு காலு..உன்னோட வாழ்க்கை முழுவதுமா
இருக்குணும்னு ஆசைப்பட்டேன்..ஆனால், உன்னால ஒரு அரை மணிநேரம் கூட எனக்காக ஒதுக்க முடியலைலே...
லவ்வரா கூட வேணாம்..அட்லீஸ்ட் பிரண்டா கூடவாவது, ஒரு அரை மணிநேரம்...அப்புறம் எப்படி நம்ம வாழ்நாள் பூரா..
சாரி..மதுமிதா..ஐ.ஹேட்..யூ.."


சொல்லிக்கொண்டே அவள் முகத்தைகூட பார்க்காமல் நடந்து சென்றான்...தூரமாய் சென்றவள், அவள் பார்வையில்
புள்ளியாய் மறைந்தான்..


மூன்று மெசெஜ் பீப்கள் அவள் மொபைல் போனுக்கு வர ஓபன் பண்ணி பார்த்தாள்..மெசெஜ்கள், ராகுல், தினேஷ்..திவ்யா" விடமிருந்து..
அனைத்தும் ஒரே செய்தியையே சொல்லின..


"ஹே..என்னய்யா..உன் ஆளு ரமேஷ் ஒரு வழியா ப்ரபோஸ் பண்ணிட்டானா...இல்லாட்டி , தயங்காம நீயே ப்ரபோஸ் பண்ணிடு.."

2 comments:

Kathiravan Rathinavel said...

செமங்க, ஆனா ப்ளிஸ் கதைய பாஸிட்டிவ் ஆ முடிங்களேன்

கோவை நேரம் said...

அருமை...அவரச பட்டு விட்டானே..

Post a Comment