Friday, 25 December 2009
ஒலக சினிமா பார்த்த அனுபவம்
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேன். சனிக்கிழமை ராத்திரி ஷிப்ட் முடித்து வரும்போது தெரு நாய்களுக்கு பயந்து ஓட்டப் பந்தயம் நடத்திய களைப்பால் நன்றாக தூக்கம் வந்தது. காலையில 4.30 மணி இருக்கும், உள்ளங்காலை யாரோ சுரண்டுற மாதிரி ஒரு உணர்வு. வீட்டில் நிறைய பெருச்சாளிகள் இருப்பதால் தட்டி விட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ணினேன். கொஞ்ச நேரம் பார்த்து “ராசா..ராசா.. என்று ஆசையா கூப்பிடுற மாதிரி சத்தம்ணே..கண் முழிச்சு பார்த்தால் நம்ம நண்பன் கோவாலு..நல்லா தலை குளிச்சிட்டு, பவுடர் போட்டு பொண்ணு பார்க்க போற மாதிரி உக்கார்ந்து இருக்காண்ணே..எனக்குனா செம கடுப்பு..
“டே கோவாலு..என்னடா வேணும்…காலங்காத்தால 04:30 மணிக்கு பேய் மாதிரி எழுப்பி விடுற..
“ராசா..வாடா..ஒலக சினிமாவுக்கு போகலாம்..
“டே..கோவாலு.வெறியைக் கிளப்பாத..
“அடப்பாவி ராசா..நீதானடா 05;30 மணிக்கு உலக சினிமாவுக்கு போகலாம்னு சொன்ன..
“அட நாயே..ஏண்டா..05:30 மணின்னா காலங் காத்தாலயாடா?..சாயந்திரம்டா..
“ராசா..நீ அத சொல்லவே இல்லியேடா..
“அத விடு கோவாலு..நீதான் வில்லு படம் பார்க்குற ஆளாச்சே..நீ எப்படி ஒலக சினிமா..??
“இதுக்கு என்னடா கூச்சம்..அது சரி மேட்டர் போடுவாயிங்கள்ள..
“அடப்பாவி..அது என்னடா மேட்டர்..
"அதுதான்டா சீன்.."
“அடங்கொய்யாலே..பரங்கிமலை ஜோதியில பகல் காட்சிக்கு போற மாதிரி சொல்றேயேடா..டே..இது ஒலக சினிமாடா..வேற மாதிரி இருக்கும்..
“ஏண்டா..அதுவும் உலக சினிமாதானடா..
“டே..கோவாலு..நான் ஆட்டத்திற்கு வரலை..ஆளை விடு..
“ஆமாண்டா ராசா..யாருடா படம் போடுறா..
“தெரியலடா..லக்கிலுக்கு வர சொல்லியிருந்தாரு..அதுதான் போகலாமுன்னு..
கோவாலு காண்டாகிட்டான்..புல்மீல்ஸ் எதிர்பார்த்து வந்தவனுக்கு கடலை முட்டாயை கொடுத்தா எப்படி இருக்கும்..கோவாலு அவ்வளவு கெட்ட வார்த்தை திட்டி பார்த்தது இல்லைண்ணே..கடுப்புல என் போர்வையே பிடிங்கிக்கிட்டு தூங்கிட்டாண்ணே..
நானும் சாயங்காலம் 04:00 மணிக்கெல்லாம் ஒலக சினிமா பார்க்க ரெடியாகிட்டேண்ணே..சரி மனைவிக்கு ஒரு போன் பண்ணிடலாமுன்னு நினைத்தேன்..
“ஏங்க..சென்னை எப்படி இருக்கு..
“நல்லா இருக்கு.பதிவர் சந்திப்புக்கு போறேன்..
“அய்யோ..எதுக்கு அங்க எல்லாம்..
“இல்லை..போரடிக்குது..அதான்..
“சரி..ஹெல்மெட்டை போட்டுட்டு போங்க..எந்த சந்தர்ப்பத்துலயும் ஹெல்மெட்டை கழட்டாதீங்க..
“ஏண்டி..
“நீங்க வேற எல்லாத்தையும் கலாய்ச்சிட்டீங்க..யாராவது மூக்குல குத்திட்டா..
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்..
மனதில் ஒரு பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. என் பல்சர் எடுத்துக்கொண்டு ஆழ்வார்பேட்டை சென்றேன்..எனக்கு தெரிந்ததெல்லாம் கமல் வீட்டிற்கு பக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடுகிறார்கள்..ஆழ்வார் பேட்டை முழுவதும் சுத்தி விட்டேன். ஒரு பயலுக்கும் கிழக்கு பதிப்பகம் தெரியல…கடைசியில் ஒரு ஆட்டோக்காரர் மாட்டினார்..
“அண்ணே..இங்க கிழக்குப் பதிப்பகம் எங்க இருக்கு..
“கியக்கு பதிப்பகமா..இன்னாப்பா அது..
“புத்தகமெல்லாம் போடுவாயிங்கள்ள..
“தெரியிலப்பா..
“கமல் பக்கத்து வீட்டுல இருக்குதுன்னு சொன்னாங்க..
“ஆஹாங்க்…அப்படி பிரியுற மாதிரி சொல்ல வேண்டியது தான..அப்படியே லெப்ட் ஓரம் கட்டியே போனேன்னா..நாலாவது வீடு..கமல் இங்கதாம்பா இருக்காரு..கவுதமியும் கூடத்தாம்பா இருக்கு..ஹி..ஹி
“அண்ணே..கவுதமி இருந்தா என்ன..சிம்ரன் இருந்தா எனக்கென்ன..நான் என்ன கிசுகிசுவா எழுதுறேன்..
அது என்னண்ணு தெரியலண்ணே..மெட்ராஸ்ல எல்லாரும் சூடாவே இருக்காயிங்க..கோபத்துல ஒரு கெட்ட வார்த்தையை சொல்லிட்டு போயிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு மணி நேரம் கழித்து கிழக்கு பதிப்பகம் கண்டு பிடித்தேன்..எனக்கு என்ன பயம்னா..ஒரு நூறு பேர் இருந்தா, எனக்கு சீட் கிடைக்குமா..நின்னுக்கிட்டுதான் பார்க்கனுமா..07:00 மணி வேற ஆகிடுச்சே..படம் பார்த்தாலும் புரியுமா..பல கேள்விகளுடன் கதவைத் திறந்தேன்..பார்த்தா..மொத்தம் 15 சேர் இருக்கும்..7 பேர் உக்கார்ந்து இருந்தாங்க..கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்..இடம் மாறி வந்து விட்டமோ..யாருகிட்டயாவது படம் எப்ப போட்டாயிங்கன்னு கேக்கலாமுன்னு பார்த்தா அத பதிவுல போட்டுறுவாயிங்கன்னு பயம் வந்தது..
அப்படியே ஒரு சீட்டைப் பிடித்து உக்கார்ந்தேன்..படம் ஒன்னும் புரியலை..எங்கயோ குண்டு வெடிக்குது.ஒரு பெரியவர் காலை தண்ணி ஊற்றி கழுவுகிறார்..ஒரு பெரிய பாழடைந்த பங்களாவில் ஒரு பெண் தனியாக நடந்தார்..எனக்கு தலை சுற்றியது..எனக்குப் பின்னால் இருந்த 2 பேர் அப்பவே எஸ்கேப் ஆனார்கள்..
நானும் எஸ்கேப் ஆகலாமுன்னு பார்த்தா, எங்க “ஞான சூன்யம்” ன்னு சொல்லிருவாயிங்களோன்னு பயம் வேற..பல்லை கடிச்சுட்டு உக்கார்ந்து இருந்தேன்..பக்கத்துல ஒருத்தருக்கு போன் வந்தது..அவர் வெளியே போய் போன் எடுக்கலாமுன்னு போனவரு அப்படியே எஸ்கேப்பு..அப்பதான் எனக்கு பொறி தட்டுச்சு..ஆஹா..அப்படியே நம்ம கோவாலுக்கு ஒரு மிஸ்டு கால் போட்டேன்..பய புள்ள எதிர் பார்த்த மாதிரியே கால் பண்ணினான்..போன் எடுக்க வெளியே போற மாதிரி “கோவாலு..இங்க நிலைமை..சாரி..டவர் சரியில்லை..நான் வெளியே வந்து பேசுறேன்.. அப்படியே ஓடிப்போய் பல்ஸரை எடுத்துட்டு விட்டேன் பாருங்க ஓட்டம்..ரெண்டு தெரு தள்ளி நிப்பாட்டுனேன்னே..ஒரு தள்ளு வண்டியில இட்லி, தோசை வைத்து தந்தாயிங்க பாருங்க..அப்பா..அதுதான்னே ஒலகம்..அப்படியே ஒலகமே என் கையில வந்த மாதிரி இருந்தது..போன் அடித்தது..மனைவிதான்..
“என்னங்க..உலக சினிமா எப்படி இருந்தது..
“ம்….இருந்தது..
“ஏங்க..ஒரு மாதிரி பேசுறீங்க..யாராவது, மூக்குல குத்திட்டாயிங்களா..
“போடீங்க..படம் பார்த்து நம்மளே நாமே மூக்குல குத்திக்கிட்டாதான் உண்டு..
“சரி..இப்ப வீட்டுல போய் என்ன பண்ண போறீங்க..
“வேற என்ன..பதிவு எழுதனும்..
“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..நீங்கெல்லாம் பதிவு எழுதியே சாகப்போறீங்க..
Saturday, 19 December 2009
வேட்டைக்காரன்
நண்பர்கள் “வேட்டைக்காரன்” படம் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருப்பார்கள் போல்..என்னையும் இழுத்து கூட்டிக் கொண்டு போனார்கள். பொதுவாக நான் விஜய் படங்களின் டிரெய்லர் மட்டுமே பார்ப்பேன்.அதுவே முழுக்கதையும் சொல்லிவிடும்..ஆனால், நேற்று நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன், ஏழரை நாட்டு சனி, தியேட்டர் வரைக்கும் கொண்டு சென்றது..
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிற்பது போல் இளைஞர் பட்டாளம், கியூவில் நின்றது..அனைவரில் கண்களிலும் அப்படி ஒரு வெறி, அன்று படம் பார்த்தே தீருவது என்று. இதே வெறியை படிப்பதில் காட்டியிருந்தால், சென்னையில் குடிசைகளே இல்லாமல் இருந்திருக்கும். ஒருவழியாக கவுண்டரை அடைந்தேன்..
திடீரென்று காதை கிழிக்கும் விசிலோசை..திரை ஒளிர தொடங்கியது..”பிலிம் டிவிசன்” என்று “ பாரத பிரதமர் 10 நாள் வெளிநாட்டு பயணம்..” என்று தொடங்கியபோது..பின்னால் இருக்கும் இளைஞர் பட்டாளம் “டே..**** மவய்ங்களா..படத்தை போடுங்கடா..” என்று அலற தொடங்கியது..ஒரு வழியாக நியூஸ் ரீல் துவங்கியபோது காது சவ்வு கிழிய ஆரம்பித்தது..படம் துவங்கியபோது, படத்தில் ஒருவர் கொடுத்த காசுக்கு மேல் விஜயை புகழ்ந்து கொண்டிருந்தார்….காலிலிருந்து ஆரம்பித்து, அப்படியே மேலே விஜயை காண்பித்தபோது விசில் சத்தம் டி.டீ.எஸ் சவுண்டை விடக் கேட்டது…அப்துல் கலாம் கனவு கண்ட ஒரு இளைஞன் எழுந்து “இளைய தளபதி விஜய் வாழ்க” என்று அடித்தொண்டையில் கத்திய போது புல்லரித்தது..
விஜய் வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசும் போதும் “தலைவா பின்னிட்ட போ..” என்று சத்தம் காதைப் பிளந்தது,,.படத்தில் கதை என்று சொல்வது என்றால்..ம்..ம்…ம்…ம்…வழக்கம்போல் ஒன்றுமேயில்லை..விஜய் வழக்கம் போல் பஞ்ச் டயலாக் விடுகிறார்..எதிரிகளை ஒரே ஆளாக தூக்கி புட்பால் விளையாடுகிறார்..வில்லனிடம் சவால் விடுகிறார்..அனுஷ்காவுடம் ரொமான்ஸ் செய்கிறார்..காமெடி நடிகர் வேறு இல்லாததால் காமெடி செய்ய முயற்சித்து உசிரை எடுக்கிறார்..அனுஷ்கா வழக்கம்போல் ஹீரோக்கள் படத்தில் வரும் ஊறுகாய்..கேமிரா விஜய் சண்டை போடும்போது சும்மா சுழட்டி சுழட்டி அடிக்கிறது…எடிட்டிங்குக்கு சிரமமேயில்லை..ஒரு கட்டிங்க்..ஒரு ஒட்டிங்க்..மனதுக்கு ஒரே ஆறுதல் விஜய் ஆண்டனி இசை..பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன..
படத்தைப் பார்த்தபோது ஒன்று மட்டும் தெரிந்தது..”இன்னும் விஜய் திருந்தவில்லை..இனிமேலும் திருந்தவும் மாட்டார்..” இடைவேளையில் எழுந்து வர முயற்சித்தேன்…என்னுடைய பைக் பார்க்கிங்க் நடுவில் மாட்டிக் கொண்டதால் தியேட்டர் ஊழியர் அனுமதிக்கவில்லை….நொந்து கொண்டே, படம் முழுவதையும் பார்த்தபோது எப்போதும் எனக்கு வந்திராத தலைவலி வந்தது..அப்படியே தலையை பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது எங்கேயோ காற்றை கிழித்துக் கொண்டு குரல் கேட்டது..
“அடுத்த முதலைமைச்சர் விஜய் வாழ்க….”
“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”
Monday, 7 December 2009
யப்பா சாமி…முடியலண்ணே…தொடர்ச்சி
ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையைப் பார்த்து 2 வருடங்கள் ஆயிருந்தாலும், ஏதோ எல்லாவற்றையும் புதிதாக பார்ப்பது போல இருந்தது. சில்லென்று பெய்யும் மழை, அநியாய வட்டி மாதிரி மீட்டருக்கு மேல் வாங்கும் ஆட்டோக்கள், காலையில் பல்விளக்காமல் குடிக்கப்படும் காபி, 9 மணிக்கு மேல் எந்தக் கடையில் கேட்டாலும் கிடைக்காத தினத்தந்தி, ஏதோ நாளை உலகம் அழியப்போவது போல் பரபரப்பாக திரியும் வாகனங்கள், மழையால் நாசமாகிப் போன ரோடுகள், பின்னால் உக்கார்ந்து இருப்பவர்களை மதிக்காமல் துப்பப்படும் பஸ் ஓட்டுனரின் எச்சில், மேலை நாட்டு நாகரிகத்திற்கு மாறி விட்டோம் என்று காண்பிப்பதற்காக ஸ்பென்ஸர் பிளாசாவில் 60 ரூபாய்க்கு வாங்கப்படும் பர்கர்., எங்கு சென்றாலும் கத்தி, கத்தியே உசிரை எடுக்கும் எப்.எம் கள்..”அம்மா செத்துட்டாங்களா..சோ..ஸ்வீட்..அம்மாவுக்கு என்ன பாட்டு டெடிகேட் பண்ணணும்” என்று கூசாமல் கேட்கும் சன் மியூசிக் தொகுப்பாளினி..இன்னும் பல..இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்..ஆனால் “அமெரிக்கா போயிட்டு வந்தவயிங்க மாதிரி நீங்களும் பேச ஆரம்பிச்சிட்டீங்களா..” என்ற விமர்சனம் வந்து விழுவதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..
ஐ.டி ஹைவே பயங்கரமாக இருக்கிறது…எல்லாம் கமர்சியல்..முன்பெல்லாம் சோழிங்கநல்லூர் செல்லும்போது ஏதோ பாலைவனத்தில் செல்வது போல் இருக்கும். ஆனால் இப்போது ஏதோ நரகம் சாரி, நகரத்திற்குள் செல்வது போல் இருக்கிறது. அதுவும் நீங்கள் இரவு பணியில் வேலை பார்த்தால், பாடு திண்டாட்டம். நான் இரவு 2 மணிக்கு என்னுடைய பல்சரில் ஆபிஸில் இருந்து கிளம்பும்போது என்னை முதலில் வரவேற்றது ரோட்டை மறைத்து நின்ற மாடுகள்..பகலில் எங்கிருங்கும் என்றே தெரியவில்லை..என்னை தாண்டி எப்படி போக முடியும் என்ற அலட்சியப் பார்வையுடன் ரோட்டை மறைத்து நின்ற போது ரோட்ட்டில் இறங்கி “பேச்சி..பேச்சி..” என்று பாடும் எண்ணம் வந்தது. அதை சமாளித்து அடுத்த ரோட்டில் வந்தால் மம்மி படத்தில் வருமே அது போல உங்களை கரம் வைத்து விரட்டும் பூச்சிகள்..தெரியாமல் ஹெல்மட் போடாமல் ஓட்டி விட்டேன்..ஒரு பூச்சி என் காதுக்குள்ள போய், ஒன்னுமில்லையே என்று திரும்ப வந்தபோது உயிர் போனது..
அதை தாண்டி வந்தபோது அடுத்து உங்களை வரவேற்பது நம்ம நண்பர்களான தெரு நாய்கள்..ஏதோ கடன் வாங்கியவனை விரட்டுற மாதிரியே விரட்டுதுண்ணே..உசிரே போயிடுது..ஒரு நாயெல்லாம் பஸ் ஸ்டாண்டுல இருந்து வீடு வரைக்கும், ஒலிம்பிக்ல ஓடுற மாதிரி விரட்டுது..அப்படி ஓடுற வழியில, ஒவ்வொரு தெரு நாய்களுக்கும் ஒரு சிக்னல் கொடுத்து ஒவ்வொன்னும் ரேஸ்ல ஜாய்ன் பண்ணிக்குதுண்ணே..
சரி எவ்வளவு ஓட்டினாலும் துரத்துதேன்னு கொஞ்சம் நிறுத்துனால அதுகளும் நின்னு ரெஸ்ட் எடுக்குதுண்ணே..சரி ஹெல்மெட்டை பார்த்துதான் குலைக்குதுன்னு ஹெல்மட்டை கழட்டுனா, என் மூஞ்சியைப் பார்த்து பயந்து அதுக ஓடுறப்ப அழுகை அழுகையா வந்துருச்சுண்ணே..
அமெரிக்கா பகுமானமா என்று நீங்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லைண்ணே..கேட்டே தீருவேன்..
“எப்படிண்ணே..சமாளிக்கிறீங்க..”
Sunday, 6 December 2009
யப்பா சாமி…முடியலண்ணே…
பதினைந்து நாளா எழுத முடியாததால தம்மடிச்சு நிறுத்தின மாதிரி கையெல்லாம் நடுங்குதுண்ணே..ஒருவழியா அமெரிக்காவிலிருந்து சிங்கார(!!!!) சென்னை வந்து சேர்ந்தாச்சுண்ணே..ஆனா, அதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே..யப்பா..சாமி..முடியலண்ணே..ஏதோ மறு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்குண்ணே..
அமெரிக்காவில் இருந்து கிளம்புறப்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..வழக்கம் போல “ராசா..நீ இல்லாம எப்படி..இங்க..”, “ராசா..ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு..” “ராசா..போய் கடிதாசி போடுடா..” “ராசா..எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சிருப்பியா..” டயலாக்குகள்..ஆனால் இதெல்லாம் முதல் பிரிவை சந்திக்கும்போதுதான் வியப்பாக இருக்கும்..எனக்கு இதெல்லாம் ஏதோ வழக்கமாய் கேட்பது போல்தான் இருந்தது…..நண்பர்களின் வழியனுப்பு, புகைப்பட படலங்கள், கூட்டாஞ்சோறு என்று தொடக்கமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது,,.
சின்சினாட்டியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கியபோதுதான் பிரச்சனை ஆரம்பித்தது..வெளிநாட்டு விமானம் பிடிப்பதற்கு 3 மணி நேரம் முன்பாக செல்ல வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தி விட்டு வயிற்று பசிக்காக விமான நிலையத்தில் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் “செக்யூரிட்டி” செக்குக்காக நிக்கிறாயிங்க பாருங்க..அம்மன் கோயில கூழ் ஊத்துற மாதிரி..அம்புட்டு பெரிய க்யூண்ணே..சரி 1 மணி நேரம் தானே என்று நின்றால்..போகுது போகுது..போய்கிட்டே இருக்குண்ணே..ஏர் இண்டியா விமானமே எனக்காக பத்து நிமிசம் லேட்டா கிளம்புச்சுன்னா பார்த்துக்குங்களேன்(விமானத்துல இருக்குறவியிங்க முறைச்ச முறைப்பு இருக்கே..யப்பாடி..எம்புட்டு அவசரமா இருக்காயிங்க..)
ஒரு வழியா..அப்பா..என்று பெருமூச்சு விட்டுக்கிட்டு ஏறி உக்கார்ந்தா..பக்கத்துல இம்பாந்தண்டி வெயிட்டா ஒரு ஆசாமிண்ணே..அவர் ஒன்றரை சீட்டை எடுத்துக்கிட்டு எனக்கு அரை சீட்டை கொடுக்குறாருண்ணே..இதுல “நல்லா கம்பெர்டபிளா உக்காருங்க” ன்னு டயலாக் வேற..ஹெல்ப் பண்றாராருங்களாம்மா…மனசாட்சியே இல்லாம் அவ்வளவு பெரிய சீட்டு குடுத்து இருந்தாலும் என் மேலேயே தூங்கி தூங்கி விழுகுறாருண்ணே..அவ்ர்கிட்ட இருந்து காற்று மூணு பக்கமும்(மூக்கு, வாய்..., ****) வருதுண்ணே..இதுல நடுவுல தூக்கத்துல வேற எழுந்து, நல்லா தூங்கிக்கிட்டு இருக்குற என்னை எழுப்பி “ஏதோ உசிலம்பட்டி வந்துருச்சா” ங்கிற மாதிரி “பம்பாய் வந்திருச்சா” ன்னு கேக்குறப்ப எல்லாம் எப்படி இருக்குமுண்ணே..விமானத்துல சாப்பிடுறதுக்கு கொடுத்து இருக்கிற சின்ன முள் கரண்டியை எடுத்து ஒரே குத்து குத்தலாமுன்னு கடுப்பு ஏறுச்சுண்ணே..
இதுல விமானத்துல ஓசியா கிடைக்குற விஸ்கி பிராந்தி எல்லாம் ரவுண்ட் கட்டி அடிக்குறாருண்ணே..ஊறுகாய் கேக்காத குறைதான்..பதினாலு மணி நேரம் கழுகு பக்கத்துல உக்கார்ந்து இருக்கிற கோழிக்குஞ்சு மாதிரியே உக்கார்ந்து இருக்கேண்ணே..ஒரு வழியா மும்பை வழியா சென்னை வந்தப்புறம்தாம் மூச்சு வந்துச்சுண்ணே..சென்னை ஏர்போர்ட்….இங்கு உள்ளவர்களில் சிலர் மூச்சு முழுக்க லஞ்சம்தான்னே..கடமையை செய்யிறதுக்கே லஞ்சம்(இந்தியன் டயலாகுதான்)..என்னுடைய ஒரு லக்கேஜ்ஜை காணவில்லை..நான் பட்ட கஷ்டம் இருக்கே..என்னுடைய அம்மா அப்பாவிற்கு ஆசை, ஆசையா வாங்கிட்டு வந்தது எல்லாம் அதுக்குள்ளதானே இருந்தது...ஒரு பயலும் பொறுப்பா பதில் சொல்லா மாட்டுறாயிங்க….பிச்சைக்காரன் மாதிரி ஒவ்வொருதரா போய் கெஞ்சுரேண்ணே..கிடைக்குற ஒரே ரெடிமேட் பதில் “எழுதிக்கொடு வரும்”..எவ்வளவு அலட்சியம்..சே..
லக்கேஜ் எஸ்கலேட்டரில் வர்றப்ப யார் யாரோ வந்து எடுத்துட்டு போறாயிங்க..யாரும் கேக்குறது இல்ல..நான் கேக்காமலே ஒருத்தர் என் லக்கேஜை தூக்கி டிராலியில் வைத்து விட்டு என் அருகில் வந்தார்..
“பத்து டாலர் குடு சார்..”
“எதுக்குண்ணே..”
“லக்கேஜ் தூக்கி வைச்சேன்ல..”
“நான் கேக்கவே இல்லையே..”
“அதானால் இன்னா சார்..ஏர்போர்ட் வந்தா அது எங்க லக்கேஜ்ஜூதான்..”
“அதெல்லாம் கொடுக்க முடியாது..என்ன விளையாடுறீங்களா..”
“அய்யே..லக்கேஜை வழிச்சிட்டு போ சார்..”
“வழிச்சிட்டா..அப்படின்னா..”
“ஒத்திக்க சார்..”
“அப்படின்னா..”
“அய்ய..தமில் பிரியாதா..அக்காங்க்..”
ஏர்போர்ட் முழுவதும் கொள்ளை..கொள்ளை..கொள்ளை..முகமுடி போடாதுதான் பாக்கி..அப்படியே லக்கேஜை இஸ்துக்கின்னு..சாரி..தள்ளிக்கின்னு..சீ..தள்ளிக்கொண்டு(எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு) மதுரை செல்வதற்காக உள்ளூர் ஏர்போர்ட் வந்தேன்..பசின்னா பசி..அப்படி ஒரு பசி..சரி ஏதாவது சாப்பிடுவோமேன்னு சொல்லி ஒரு பப்ஸ், ஒரு காபி வாங்கினேன்னே..75 ரூபா கேக்குறாயிங்க..எனக்கு ஒரு சந்தேகம்..என் பெயரை சொல்லி யாராவது சாப்பிட்டு போயிட்டயிங்களோ..
“அண்ணே..ஒரு பப்ஸ்..ஒரு காபிதான்.”
"அதுதான் 75..”
“எப்படிண்ணே..”
“ஒரு பப்ஸ் 30, காபி 35..”
ஆத்தாடி..ஏண்ணே..2 வருசத்துல இப்படி ஒரு வளர்ச்சியாண்ணே..நாசாமா போற வளர்ச்சி..கடுத்துகிட்டே காசை கொடுத்துக்கிட்டு “ஜெட் ஏர்வேஸ்” பிளைட் ஏறுனேன்னே..சரி சாப்பிட ஏதாவது தருவாயிங்கன்னு பார்த்தா..வந்தான் பாருங்க..ஒருத்தன்…டிராலியை தள்ளிக்கிட்டு “டீ..காபி..போண்டா” விக்கிறவன் மாதிரி..”யார் யாருக்கெல்லாம் வேணுமோ காசு கொடுத்து வாங்கிக்குங்க…”
எனக்கு கொலைப் பசிண்ணே..சரி ஏதோ ரெண்டு பிரட்டை மடிச்சு வைச்சு “வெஜ் சாண்ட்ச்” ன்னு ஏதோ சொல்லுராயிங்கன்னு விலையைக் கேட்டா..ஆத்தாடி..”250” ரூபாண்ணே..இதுல என் பக்கத்துல உக்கார்ந்து இருக்குற ரெண்டு மதுரைக்காரயிங்க வேற பகுமானத்துக்கு ஒரு 500 ரூபா நோட்டை நீட்டி “டூ சாண்ட்விச்” ன்னு இங்கிலிபீச்சுல பேசுறப்ப அழுகை, அழுகையா வந்துருச்சுண்ணே..ஏண்ணே..நாட்டுல 500 ரூபா நோட்டு ரொம்ப புழக்கமோ..ஊருக்குள்ள ரிசர்வ் பேங்க் ஏதாவது ஆரம்பிச்சுருக்காயிங்களா..
(கடுப்பு தொடரும்….)
Friday, 13 November 2009
ச்சீ..போடா..நாயே..
உறவுகளை விட்டு பணத்துக்காக என்னதான் பிரிந்து இருந்தாலும், மனம் ஒரு மாதிரி வெறுமையுடன் தான் இருக்கும். நான் சென்னையை விட்டு இங்கு அமெரிக்காவுக்கு வரும்போது ஏதோ ஒரு உலகத்தை வீட்டு பிரிந்து ஆளே இல்லாத இன்னொரு உலகத்திற்கு வந்த மாதிரி உணர்ந்தேன். பாசத்தை தவிர வேறு எதுவும் உணர்த்தாத சொந்தங்கள், என் கூடவே பிறந்த மாதிரி என்னோடே ஒட்டியிருக்கும் பல்சர் பைக், காலையில் கண் முழித்தவுடன் கேட்கும் பக்கத்து வீட்டு சுப்ரபாதம்..இப்படி பல..இங்கு யாராவது ஒரு சிறிய அன்பை வெளிப்படுத்தினால் போதும், மனம் குதூகலிக்கும்.
அப்படி நான் உணர்ந்த அன்புதான் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் “டாரத்தி” என்ற அமெரிக்க பெண். போன வருடத்தில் ஒருநாள் எப்போதும் போல வேலை பார்த்து கொண்டிருந்த போது, பக்கத்தில் “எக்ஸ்கியூஸ்மி” என்ற குரல் கேட்டு அவசரமாய் திரும்பி பார்த்தபின்புதான் அவரை முதல் முதலாய் பார்த்தேன். என்னுடைய அம்மா வயது. அவரை இப்போதுதான் அலுவலகத்தில் முதல்முதலாய் பார்க்கிறேன். ஒருவேளை யாராவது பிராஜெக்ட் மேனேஜர் புதிதாய் சேர்ந்திருக்கிறார்களோ…,
“எஸ் மேடம்..உங்களை அலுவலத்தில் புதிதாக பார்க்கிறேனே..”
"ஆமாம்.இன்றுதான் வேலைக்கு சேர்ந்தேன்..”
“என்னுடைய பெயர் ராஜா..உங்கள் பெயர்..”
“டாரத்தி..”
“ஓ..புதிதாக பிராஜெக்ட் மேனேஜர்..??”
“இல்லை..”
“அப்புறம். ஹெச். ஆர். அட்மின்..??”
மெலிதாக சிரித்தார்கள்..
“ம்ம்..எனக்கு யாரன்று கண்டுபிடிக்க முடியவில்லை..ஏதாவது டாக்குமெண்ட் வேணுமா..”
“இல்லை..உங்கள் கேபினில் இருக்கும் குப்பைத் தொட்டியை எடுத்து கொடுக்க முடியுமா..நான் இங்கு ஸ்வீப்பராக(சுத்தம் செய்பவர்) சேர்ந்துள்ளேன்..”
அதிர்ந்தே போனேன். என்னுடைய அம்மா வயது. அவர்களால் சரியாக பார்க்க முடியும் என்று கூட எனக்கு தோணவில்லை. அப்படியே எழுந்து விட்டேன். உங்கள் அம்மா வயதுள்ளவர் உங்களிடம் வந்து குப்பை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..
“ஐயோ..மேடம்..இந்த வயதில் போய்..”
“ஏன்..எனக்கு என்ன வயதாகி விட்டது..இப்போதுதான் 30 முடிந்து 2 மாதம் ஆகிறது..”
எனக்கு முதல் சந்திப்பிலேயே தெரிந்து விட்டது. முதுமையைப் பழித்து மூலையில் ஒடுங்கிப் போகும் சாதரணப் பெண் இல்லை அவர்கள். முதுமையை சவாலுக்கு அழைத்து, ஜெயிக்க நினைக்கும் பெண். அப்புறம் தினமும், அவர்கள் குப்பை எடுக்க வரும்போது என்னால் எழுந்து நிற்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் வரும் அந்த பத்து நிமிடமும் என் அம்மா எனக்க்கருகில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.
ஒருமுறை அவர்கள் வரும்போது என் நண்பனுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நான் அவனை “சீ..போடா..நாயே..” என்று சொல்வது வழக்கம். அதை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் போல்,, அடுத்த முறை வரும்போது கேட்டார்கள்..
“அது என்ன..சீ..போடா நாய்..”
“அது..வந்து..செல்லமாக திட்டுவோம் இல்லையா..எங்கள் மொழியில் நாயைச் சொல்லி செல்லமாக திட்டினேன்..”
“ஹா..அது ஏன் நாயைச் சொல்லி திட்டவேண்டும்..நாய் நல்ல பிராணிதானே..”
“ம்..எங்கள் ஊரில் அப்படி இல்லை நீங்கள் நாயை குழந்தைப் போல் வளர்ப்பீர்கள். நாங்கள் அப்படி இல்லை..காவலுக்கு மட்டும்தான்..”
“ஓ..ஓ..மனிதர்களை விட நாய்கள் எவ்வளவு மேல் தெரியுமா..”
டாரத்தி, நகைச்சுவைக்காக சொன்னாலும் குரலில் ஒரு விரக்தி..
“என்ன ஆச்சு..மேடம்..எதுவும் பிரச்சனையா..நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.உங்களுக்கு மகன், மகள் யாராவது..”
“எல்லாம் இருக்கிறார்கள்..வேறு ஊரில்..மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்ப்பார்கள், உயிரோடு இருக்கிறேனா என்று..”
சொல்லும்போதே குரல் உடைந்து போனது..இன்னும் ஏதாவது பேச முயன்றால் அழுது விடுவார்கள் என்று தோன்றியது….
“மேடம்..என்ன இதற்கு போய் அழுது கொண்டு..நீங்கள் வேணால் பாருங்கள்..உங்கள் மகன் உங்களை அவர்கள் வீட்டிற்கு கூடிய சீக்கிரம் கூட்டி செல்வார்..”
இந்த ஆறுதலை தவிர எனக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் கண்களில் கண்ணீரோடு கூடிய ஏக்கத்தை உண்ர்ந்தேன்..
“மேடம்..உங்களுக்கு ஒன்று தெரியுமா..நீங்கள் அழுகும்போது 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”
சிரித்து விட்டார்கள்..பொய்க்கோபத்தோடு..சொன்னார்கள்..
“சீ..போடா..நாயே…”
அப்புறம் எனக்கு அலுவல வேலை காரணமாக அவர்களை கவனிக்க முடியவில்லை..நீண்ட நாளைக்கு அப்புறம், நேற்றுதான் அவர்களை சந்தித்தேன்..அவர்கள் முகத்தில் சந்தோசம் புரண்டோடியது..
“என்ன மேடம்..என்ன ஆச்சு..ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது..”
“ஆமாம் ராஜா..என் மகன் நேற்று வந்திருந்தான்..என்னை 1 மாதத்திற்கு வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுள்ளாம்..அடுத்த திங்களிலுருந்து ஒரு மாதம் லீவு..”
“வாவ்..நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல மேடம்..என்னை மறந்து விட மாட்டீர்களே..”
“ஹே..ஒரு மாதம்தான்..அப்புறம் தினமும் இங்குதான்..”
“இல்லை..மேடம்..அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நான் ஊருக்கு கிளம்புறேன்..இனிமேல் வருவது கடினம்..”
அப்படியே அவர்கள் முகம் செத்து விட்டது..எவ்வளவு சந்தோசம் முகத்தில் இருந்ததோ அதற்கு நேர் எதிர்…
“ராஜா.ஏன்..என்ன ஆச்சு..”
“இல்லை மேடம்..பிராஜெக்ட் முடிந்து வீட்டது..”
“ம்ம்ம்…இன்று என்னை ஒரு மகன் வீட்டிற்கு அழைக்கிறான்..இன்னொரு மகன் என்னை விட்டுட்டுப் போறான்..”
அதிர்ந்து போனேன்..எதார்த்தமாக சொன்ன வார்த்தைகள் இல்லை அவை…அடி மனதில் ஆழத்தில் இருந்து வந்தது. ஒரு நிமிடம் என் நெஞ்சை அசைத்துப் போட்டு விட்டது..எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறேன்..
“சரி ராஜா..நீ என்ன செய்ய முடியும்..உனக்கென்று உலகம் இருக்கிறது….உனக்க்காக உன்னுடைய அம்மா, அப்பா காத்து கொண்டிருப்பார்கள்..சந்தோசத்தோடு போய் வா..”
எனக்கு இன்னும் பேச்சு வரவில்லை..அவர்களாலும் அங்கு நிற்க முடியவில்லை..என்னை விட்டு அவர்கள் நகர்ந்து போவதை அப்போதுதான் உணர்ந்தேன்….
“மேடம்..”
திரும்பி பார்த்தார்கள்..”நான் செல்ல மாட்டேன்..சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று சொல்லுவேனோ என்ற ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தது..கண்களில் திரும்பவும் கண்ணீர்..
“நீங்கள் அழுதால் 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”
சிரித்து வீட்டு சொன்னார்கள்..
“சீ..போடா..நாயே…”
Monday, 9 November 2009
நீயா நானாவில் விளக்காமாத்தடி
“தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ, லயன் டேட்ஸ் சிரப் நீயா, நானா..இந்த சமூகத்தில் விளக்குமாறுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொதுவாக சுத்தம் செய்வதற்கு பயன்படும் இந்தப் பொருள் சமீபகாலமாக தண்டிக்கும் பொருளாக பயன்படுகிறது..உதாரணமாக சொல்வதனால் மனைவியிடம் வெளக்கமாத்தடி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு, கணவர்கள் அதிகம் விளக்கமாத்தடி வாங்குவது திருமணத்திற்கு முன்பா, திருமணாத்திற்கு பின்பா..”
(கணவர்கள் தரப்பிலிருந்து ஒருவர்)
“சார்..வெலக்கமாறு என்று சொல்லவேண்டுமா..வெளக்கமாறு என்று சொல்ல வேண்டுமா..”
“ரொம்ப முக்கியம்..அடிவாங்குறப்ப “ஐயோ அம்மா..காப்பத்துங்க” என்று சொன்னால் உயிருக்கு உத்திரவாதம் உண்டு..நான் மனைவிகள் சைடுல இருந்து வர்றேன்..நீங்க சொல்லுங்க..கணவர்களை அடிக்க ஆயிரத்தெட்டு ஆயுதங்கள் இருக்க ஏன் விளக்குமாறு..”
(மனைவி அழுக ஆரம்பிக்கிறார்) தொகுப்பாளர் மெதுவாக அருகில் சென்று
“ஏம்மா..இப்பவே அழுகாதீங்கம்மா..நாங்க சொன்னா மட்டும் அழுதால் போதும்..அப்படியே நீங்க அழுகலைன்னாகூட நாங்க கேள்வி கேட்டே அழுக வைச்சிடுவோம்..”
“சரிங்க சார்..அது வந்து..இந்த வெளக்கமாறு பாருங்க..இதுதான் சரியான ஆயுதம் சார்..சல்லி விலையில கிடைக்குது..பிஞ்சு போனாக்கூட 10 ரூபாயில வாங்கிக்குருவோம்..இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா..நாங்க அடிக்கிறப்ப கணவர் உயிருக்கு பாதிப்பு இல்லை பாருங்க..”
தொகுப்பாளர் கண்கலங்குகிறார்..
“என்ன ஒரு அன்பு..என்ன ஒரு அன்பு..இப்படி ஒரு அன்பு நான் இதுவரை பார்த்ததில்லை..இவர்கள்தான் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்..உங்களை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம்..இந்த பெண்ணுக்கு ஒரு ஸ்டாண்டிங்க் ஓவேசன் கொடுக்கலாமே..”
தொகுப்பாளர் எல்லோரையும் எழுந்திருக்க சொல்ல அனைவரும் எழுகின்றனர்..பிண்ணணி இசையில் கிளாப் சௌண்ட்..
“நன்றி..,நன்றி..இப்ப கணவர்கள் பக்கம் வருவோம்.அடி அடிவாங்கியே, ஆடிப்போய் உக்கார்ந்து இருக்கிற நீங்க சொல்லுங்க..உங்க பொண்டாட்டி, விளக்கமாத்தால அடிக்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்..”
(கேமிராமேன் அழகாக அமர்ந்திருக்கும் பெண்களையே போகஸ் பண்ணா, தொகுப்பாளர் டென்சனாகிறார்)
“கேமிராமேன்..கொஞ்சம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் மேலயும்
கொஞ்சம் போகஸ் பண்ணுங்கப்பா..நீங்க சொல்லுங்க சார்..”
“சார்..அந்தப் பக்கம் வெளக்கமாத்தால அடிவாங்குறத எவ்வளவு சாதரணமா சொல்லிட்டாங்க..எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா சார்..உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஊமைக்காயம் சார்..5 நிமிசம் காதுக்குள்ளா “கொய்ங்க்” ன்னு ஒரு சத்தம் கேட்கும்..வெளியில கூட சொல்ல முடியாது சார்..”
குமுறி, குமுறி அழ ஆரம்பிக்கிறார்..கேமிரா நன்றாக போகஸ் பண்ண ஆரம்பிக்கிறது..
“நன்றி..நன்றி..நீங்க நல்லா அழுதுக்கிட்டே இருங்க..வெளக்கமாத்தடி பற்றி பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”
(சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு)
“வெல்கம் பேக் டூ லயண்டேட்ஸ் சிரப் நீயா…நானா….இப்ப டாபிக்குக்கு வருவோம்..மனைவிகள் பக்கத்துல சொல்லுங்க..நீங்கள் வெளக்கமாத்தால அதிகம் அடித்தது, திருமணத்திற்கு முன்னா, திருமணத்திற்கு பின்னா..”
“திருமணத்திற்கு பின்பு சார்..”
“கொஞ்சம் எக்ஸ்பிளையின் பண்ண முடியுமா..”
“அது வந்து சார்..நாங்க நல்ல பிள்ளைகளா, சீரியல் பார்த்துக்கிட்டு இருப்போம்..அப்ப வந்து…கடுப்பேத்துற மாதிரி, சோறைப் போடு, குழம்பை ஊத்துன்னு, டிஸ்டர்ப் பண்ணின எந்த பொண்ணுக்கு சார் கோபம் வராமல் இருக்கும்
“நியாயமான கோபம்..ஏங்க..கணவன்மார்களே..இது நியாயமான கோபம்தானுங்களே..”
“இல்லை சார்..மனுசன் ஆபிஸுக்கு போய்ட்டு டயர்டா வந்தா..இந்த சீரியல் இருக்கே சார்..ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு சார்..திருமணத்திற்கு முன்பு நிறைய தடவை விளக்கமாத்தடி வாங்கிருக்கோம்..ஆனா, அதுதான் சார் சுகம்..உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்..வாங்குற அடியில 2 நாளைக்கு எந்திருக்கவே முடியலை சார்..”
திரும்பவும் கண்கலங்கிறார்..மனைவியை பார்த்து கத்துகிறார்..
“அடியே..நீயும் அழுதுறுடி..அப்பதான் டீ.வியில காண்பிப்பாயிங்க..”
இப்போது மனைவியும் அழுகிறார்..
“ஆஹா..இதுவல்லவோ தம்பதி..உண்மையான அன்பு..வாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு இங்க வாங்க..”
ரெண்டு பேரும் எழுந்து வருகின்றனர்..
“சொல்லுங்க மேடம்..இப்படி பாசமா இருக்கிற கணவரை அடிப்பது தப்பில்லையா..”
“தப்புதான் சார்..தப்புதான்..ஆனாலும் நான் என்னதான் அடி, அடின்னு அடிச்சாலும், அவரு ரொம்ப நல்லவரு சார்..எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு சார்..”
“ஆஹா..நீயா நானா இது போன்ற தம்பதிகளை சேர்த்து வைப்பதில் பெருமை கொள்கிறது..”
“ஆமா சார்..என் சிட்பெண்ட்..சீ..ஹஸ்பெண்ட்..நான் கடுப்பா இருக்குறப்ப எவ்வளவு பாடுவார் தெரியுமா..அவர் பாட்டைக் கேட்கும்போது எனக்கு அழுகை அழுகையா வரும் சார்..(அழுகிறார்)..அவ்வளவு உருக்கமா பாடுவார் தெரியுமா..”
“ஆஹா..அப்படியா..எங்க, மைக்க அவருகிட்ட கொடுங்க..சார் நீங்க பாடுங்க….மேடம் , நீங்க அழுக ஆரம்பிங்க..”
(கணவர் உருக்கமாக பாட ஆரம்பிக்கிறார்)
“டாய்..டாய்…டிங்கிரிடோய்..டாய்..டாய்..டிங்கிரிடோய்..
கத்திருக்கோலு..”
மனைவி விசும்பி விசும்பி அழுகிறார்..
“அடப்பாவி..நீ பாடுற பாட்டைக் கேட்டா, மனைவி மட்டுமல்ல, பாக்குறவியிங்க எல்லாருமே அழுவாயிங்களே..”
(தொகுப்பாளரும் கண்கலங்குகிறார்..)
மனைவி கணவரைப் பார்த்து
“ஐ..லவ் யூ புருசா..”
“ஐ..லவ் யூ..பொண்டாட்டி..”
எல்லாரும் உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டுகின்றனர்..
“நீயா நானா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று இது..இதுபோன்ற உணர்ச்சிமிக்க வரலாற்றை, நீயா நானா பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது..மேடம்..இதுல இருந்து..நீங்க உங்க கணவர் மேலே அன்பு வைச்சிருக்கிறது இவ்வளவு தெளிவா தெரியுது..நீங்க எப்படி அவரை விளக்காமாத்தால அடிச்சீங்க..கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேசன் பண்ணிக் காட்ட முடியுமா..”
“அதுக்கு விளக்கமாறு வேண்டுமே சார்..”
“நீயா..நானா..உங்களுக்கு அதைக் கொடுக்கும்..”
எங்கிருந்து ஒரு விளக்காமாறு பறந்து வர, மனைவி அதை மனைவி லாவகமாக கேட்ச் செய்கிறார்..
தொகுப்பாளர் கண்வனைப் பார்த்து..
“கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க”
மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்..
“அடப்பாவிங்களா..டாபிக்கை விட்டுட்டு இப்படி அடிவாங்க வைக்கிறீங்களேயா..வீட்டிலதான் அடிவாங்குறோமுன்னா இங்கேயுமா….”
கதறுகிறார்..கேமிரா அவர்களையே போகஸ் பண்ண..அங்கு இருக்கும் பெண்களெல்லாம் அவர்களை போகஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளுக்கு ஒரு விளக்காத்தை எடுத்துக் கொண்டு கணவன்மார்களை நோக்கி ஓடிவர கணவன்மார்கள் எல்லாம் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்..
(ஆத்தாடி..நீங்க எங்க ஓடுறீங்கப்பூ..கீழே உள்ள ஓட்டைப் போட்டுட்டு ஓடுங்க...))
Friday, 6 November 2009
பத்துக்கு பத்து
“என்னையும் ஒரு பதிவராய் நினைத்து இந்த தொடர் பதிவுக்கு அழைத்த” என்று எழுததான் ஆசை.ஆனா ஒரு பயபுள்ள எழுத கூப்பிடாததால், நானே எழுதலாம் என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும்போது அன்புடன் மணிகண்டன் என்னை அழைத்ததை சாக்காக எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்(என்ணண்ணே, ஒரு மாதிரி விசு ஸ்டைலுல வருதா..ஆத்தாடி, எம்புட்டு கஷ்டப்படவேண்டிருக்கு)
ஆமா..எல்லாரும் கவனிச்சீங்களா..ஒவ்வொரு தொடர்பதிவு ஆரம்பிக்கும்போது யாரு தொடங்குறாங்கன்னு தெளிவா தெரியுது..ஆனால், யாரிடம் முடியுதுன்னு யாராவது கண்டுபிடிச்சீங்களா…(ஆஹா..என்ணண்ணே இதுக்கெல்லாம் போ விருதெல்லாம் கொடுத்துக்கிட்டு..அதுவா வருதுண்ணே..)
இந்த பதிவோட விதிகள்னு சொல்லிருக்காயிங்க..கண்ணை மூடிக்கிட்டு கீழே உள்ளதை படிச்சிருங்க பாப்போம்(நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்)
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
எனது பதில்கள்
- அரசியல் தலைவர்
பிடிக்காதவர் : முன்னாள் முதலைமைச்சர்(வீட்டிற்கு ஆட்டோ வர விருப்பமில்லாததால் பெயர் குறிப்பிடப்படவில்லை..அப்படியே, வந்தாலும், வரும் கட்சியினர்கேற்ப பெயர் மாற்றப்படலாம்)
- எழுத்தாளர்
பிடித்தவர் : ஞானி, பாமரன்
பிடிக்காதவர் : சுஜாதா(யாருண்ணே, அங்க அடிக்க வர்றது), பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ.
- கவிஞர்
பிடித்தவர் : அறிவுமதி, முத்துக்குமார்
பிடிக்காதவர் : சினேகன்
- இயக்குனர்
- நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : சந்தானம், லொல்லுசபா ஜீவா, சிவகார்த்திகேயன்(கண்டிப்பா எதிர்காலம் இருக்குண்ணே..என்ன ஒரு டைமிங்க் சென்ஸ்)
பிடிக்காதவர் : பிரா ஜட்டி நடிகர்(சமீபகாலமாக)
- நடிகை
பிடித்தவர் : நயன் தாரா(ஹீ.,..ஹீ)
பிடிக்காதவர் : திரிஷா(பின்ன..தலைவிக்கு போட்டிக்கு வந்தா)
- இசையமப்பாளர்
பிடித்தவர் : ஆஸ்கார் நாயகன், இசைராஜா
பிடிக்காதவர் : சங்கர் கணேஷ்
- நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிடித்தவர் : சிவகார்த்திகேயன்(அது, இது எது)
பிடிக்காதவர் : கோபிநாத்(கடுப்பு ஏறுதுண்ணே), திவ்யதர்சினி(பயமா இருக்குண்ணே)
- ரியாலிட்டி ஷோ
பிடித்தது : அது, இது, எது(என்ன ஒரு கலகலப்பு)
பிடிக்காதது : மானாட, மயிலாட, குரங்காட(சாகடிக்கிறாயிங்கண்ணே), திருவாளர் திருமதி(வீட்டுல ஓரே சண்டைண்ணே)
- பதிவர்
பிடித்தவர்
நக்கலுக்கு : வானம்பாடிகள், விசா பக்கங்கள்
கவிதைக்கு : கதிர், அன்புடன் மணிகண்டன்
சுவைக்கு : பிரதீப்(ஈ.எஸ்), சக்கரை சுரேஷ்(எப்படிண்ணே மறக்கமுடியும்)
கவுஜ கவிதைகளுக்கு : ஞானப்பித்தன், வால்பையன்
விமர்சனத்திற்கு : கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்
பல்சுவைக்கு : உண்மைத் தமிழன், லக்கிலுக்
கோபத்திற்கு : அப்பாவி முருகன்
சமையலுக்கு : ஜலீலா
கலகலப்பிற்கு : கலகலப்பிரியா, துளசி அய்யா
பின்னூட்டத்திற்கு : தாரு என்கிற பெரும்படை அய்யானர்(ஊருக்கு வர்றப்ப இருக்கு உங்களுக்கு)
ஜொலிப்பிற்கு : நான் ஆதவன், செந்தில்வேலன்
சுவாராசியமான இம்சைக்கு : செந்தழல் ரவி
பிடிக்காதவர்
டோண்டு, இட்லிவடை