அமெரிக்காவில், எங்கள் ஊர் தமிழ்மன்றம் சார்பாக க்ரேசி மோகனின் “சாக்லேட் கிருஷ்ணா” என்ற நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த 2 மாதங்களாக, எந்த, இந்திய கடைக்கு சென்றாலும், கலர் பேனர்களில் கிருஷ்ணராக, கிரேசி சிரித்துக்கொண்டிருந்தார். தமிழ்மன்றமும், டிக்கெட்டுகள் விற்பதற்கு நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
நாடகம் 7 மணிக்கு அரங்கேறுவதகாக விளம்பரம் செய்திருந்தார்கள். இந்த வாரம் முழுவதும், வேலை நிறைய இருந்தது. ஆபிசில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டியிருந்ததால், 7 மணிக்கு போவனோ, இல்லையோ என்ற பயம் வேறு. சரி, வேலை இல்லையென்றால் “க்ரேசி மோகன்” வேலை இருந்தால் “லூஸ் மோகன்” என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
வெள்ளைக்காரன் மாதிரி சரியாக 7 மணிக்கு அரங்கத்திற்கு சென்றேன். நம்பமுடியாதபடி கூட்டம். ஏதோ ரஜினி படத்திற்கு வந்தாற் போல ஒரு பிரமை. தட்டுத்தடுமாறி உள்ளே சென்ற போது, யாரோ ஒருவர் “மைக் டெஸ்டிங்க்” செய்து கொண்டிருந்தார். வழக்கம்போல “தொழில்நுட்ப கோளாறுகளால், இன்றைய நாடகம் சற்று தாமதமாக” என்று சொல்லியபோது, “தமிழேன்டா” என்று மார்தட்டிக்கொண்டேன்..ஒரு ஓரசீட்டாக பார்த்து உக்கார்ந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகமாகி கொண்டு இருக்க எங்கள் வீட்டு கிருஷ்ணர் வேலையை ஆரம்பித்தார். வேறு யாரு, என் ஒன்றரை வயது, மகன்தான்.
அங்கு அழகாக தொங்கிக்கொண்டிருந்த சீரியல் பல்புகளை சாக்லேட் பல்பு போல கடிக்க நினைக்க மனம் பதறியபடி, ஒவ்வொன்றாக தூக்கி சுவற்றில் போட்டேன்…அவன் பின்னே, நான் ஓட, என் பின்னே நான் ஓட, அங்குள்ள குழந்தைகளுக்கு ஒரே காமெடி ஷோ தான். சரி, இதற்கு மேல் சரிப்பட்டு வராது என்று நினைத்து, சிறுவர்களுக்கு பிரேத்யேகமா கொடுத்திருந்த அறைக்கு சென்றேன்..அங்கு குழந்தைகளுக்கு “டாய் ஸ்டோரி” ஓட்டிக்கொண்டிருந்தார்..ஊர்ப்ப்க்கம் அடிப்பம்பில் கைவைத்து வைத்து குடிக்கும் நம்ம ஊர் குழந்தைகள்..”ஓ வாவ்…இட்ஸ் டெர்ரிப்பிள்” என்று சொல்லியபோது, “அடங்கொக்கா மக்கா” என்று சொல்லத்தோன்றியது..அங்கு ஓடிக்கொண்டிருந்த ஒரு வாண்டை கூப்பிட்டு “ஏம்பா டிராமவுக்கு போகலையா” என்று கேட்டபோது, “செம போர் அங்கிள்..டாய் ஸ்டோரி இட்ஸ் குட்…அண்டு ஐ டோண்ட் வாண்ட் சிட் வித் காமன் பீபிள்” அதவாது நம்ம பாஷையில் சொன்னால் , “உங்களை மாதிரி கம்மனாட்டிக கூடல்லாம் உக்கார மாட்டோம்டா” என்று ரைம்ஸ் ஒப்பிப்பது போல் சொன்னபோது, பெற்றோர்களை நினைத்து பெருமை
கொண்டேன்..”என் குழந்தை இங்கிலீசெல்லாம் பேசுது…”
மதியம் வேறு
சாப்பிடவில்லையா, பசி உயிர் போனது. பால் நழுவி, பீரில் விழந்தாற் போல, அங்கு
குழந்தைகளுக்கு “பீட்சாவும்” குழந்தைகள் பிஸ்கெட்டும்
கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நம்ம பையன், பால் தவிர எதுவும் சாப்பிடமாட்டானே..நம்ம
எப்படி போய் கேட்பது என்று பயம் வேறு. கொடுப்பது, இந்த ஊர்க்கார பெண்மணி..ஆனால்,
பசித்தால், டைனோடரும், முக்குகடை பிரியாணி சாப்பிடும் என்ற பழமொழிக்கேற்ப, பையனை
பகடை காய் ஆக்கி, பிஸ்ஸாவை சாப்பிடுவது என்று முடிவெடுத்தேன்…நேராக அங்கு சென்று..
“கேன் ஐ
ஹேவ் ஒன் பிஸ்ஸா அண்டு குக்கி(பிஸ்கெட்)” என்று கேட்க, அந்த அமெரிக்க பெண்மணி
மேலும் கீழுமாக என்னைப் பார்க்க எனக்கு பயமாகி போனது. ஒருவேளை க்ராமர் மிஸ்டேக்கா
இருக்குமோ என்று “கேன் ஐ..” என்று திரும்ப ஆரம்பிக்க, “இந்த குழந்தைக்கா” என்று
பையனைப் பார்க்க, என் பையன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்..”பிட்சா, இந்த மீசை
வைத்த குழந்தைக்கு” என்று கேட்டால் ஒரு மாதிரியாக இருக்குமோ என்று “ஆக்சுவலி..எங்க
குழந்தை, 6 மாசத்துல\, பிட்சா, பர்கர்ன்னு சாப்பிட பழகிட்டோம்” என்று நாகூசாமல்
ஆங்கிலத்தில் பொய் சொல்ல, அவர்கள் சிரித்துக்கொண்டே, அந்த பிட்சாவை கொடுக்க “ஒரு
நாளைக்கு சோத்துக்கு சிங்கி அடிப்படா” என்று என் அப்பா கொடுத்த சாபம் நினைவுக்கு
வந்தது. என் பையனைப் பார்க்க “அடங்கொன்னியா, என் பேரை சொல்லி நீ பிட்சா கட்டுறியா”
என்று பார்த்தான்..வாழ்க்கையிலேயே, ஒன்றரை வயசு பையன் அப்பாவுக்கு ரெண்டு பிட்சா
சம்பாதித்து கொடுத்திருக்கிறான் என்றால், அது என் பையன் தான்…
ஒருவழியாக,
அவனை சமாதானப்படுத்தி, அரங்கத்துக்குள் சென்ற போது, க்ரேஷி மோகன் கிருஷ்ணர் வேஷம்
போட்டு, “மாது..” என்று ஆரம்பித்துக்கொண்டு இருந்தார். வழக்கம்போல, க்ரேஷி மோகனின்
“மாது”, “மைதிலி”, “திருட்டுப்பாட்டி” என்று வழக்கமான க்ளிஷேக்கள். குழந்தைகளுக்கு
பிடிக்கும் என்பதால், “சாக்லேட் கிருஷ்ணர்” என்று பேர் வைத்ததாக சொன்னதை, எந்த
குழந்தையும் கேட்டதாக தெரியவில்லை…..ஒருவேளை அவர் மீசைவைத்த குழந்தைகளைப் பற்றி
சொன்னாரா என்று தெரியவில்லை…
சில
இடங்களில் சிரிப்பு வந்தது. நிறைய இடங்களில் கொட்டாவி வந்தது. சாப்பிட்ட பிட்சா
வேறு வயிற்றுக்குள் ஏதோ செய்ய, வயிறு குலுங்கி எங்கும் சிரிக்கமுடியவில்லை. இந்த
நாடகத்தை 500வது தடவை அரங்கேற்றியிருப்பதாக சொல்ல, “அடப்பாவேமே” என்று சொல்லத்
தோன்றியது..நாடகத்தில் சொல்லப்பட்ட ஜோக்குகளை காட்டிலும், என் மகன் அடித்த
லூட்டிகளுக்குத்தான் விழுந்து விழுந்து சிரித்தேன்…
சாக்லேட்
கிருஷ்ணா..பெயரில் மட்டும்தானோ…..