Saturday, 27 February 2010

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம்

சின்ன வயதில் தலை நிறைய முடியுடன் ஒருமாதம் திரிந்து விட்டு, ஒருநாள் ஞானதோயம் வந்து , நல்ல பிள்ளையாய் ஹேர்கட்டிங்க் செய்து விட்டு வீட்டுக்கு சென்றால், என் அம்மா சொல்லும் முதல் வார்த்தை, “இப்பதான் புள்ளையப் பார்த்த மாதிரி இருக்கு”. பஞ்ச் டயலாக் பேசாமல், விரலை கன்னாபின்னாவென்று ஆட்டாமல், பெண்களுக்கு அடக்க ஒடுக்கத்தை போதிக்காமல் அமைதியான சிம்புவை இந்தப் படத்தில் பார்க்கும் போது சொல்லத் தோன்றுகிறது “இப்பதான் புள்ளையப் பார்த்த மாதிரி இருக்கு”. இனிமேல் இப்படியே நடித்து விடுங்கள் சிம்பு. எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா... இதை விட்டு விட்டு நீங்கள் விரலால் வீடு கட்டும்போது எவ்வளவு கோபம் கோபமாக வருகிறது என்பது தமிழ்நாட்டில் நடக்கும் தற்கொலைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இனி விமர்சனம்.

கார்த்திக் என்னும் வீர்குடி வெள்ளாளர் வகுப்பை சேர்ந்த(அடிக்க வராதீங்க..படத்துல அப்படிதான் சொல்லுறாயிங்க) சிம்புவுக்கும், கேரள கிறிஸ்தவ பெண்ணான திரிஷாவுக்கும் இடையில் நடக்கும் அஜால் குஜால்(அய்யோ..முதல் வரிசையில் உக்கார்ந்தது தப்பா போச்சே..) சாரி..காதலே படத்தின் கரு. இஞ்சினியரிங்க் படித்து விட்டு டைரக்டர் கே.எஸ் ரவிக்குமாரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்க்கும் சிம்புவும், பொலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனி பஸ்ஸில் மட்டுமே செல்வதாக சொல்லப்படும் திரிஷாவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது(வேறு என்னதான் நடக்கும்). மதம் காரணமாக திரிஷா வீட்டில் கடுமையான எதிர்ப்பு(பின்ன இருக்காதா..) அவ்வப்போது நடக்கும் உரசல்களுக்கும் அப்புறம், கவுதம் மேனனுக்கு மட்டும் தெரிந்த சாரி திரிஷாவுக்கு மட்டும் தெரிந்த ஏதோ ஒரு காரணத்திற்காக நிரந்தரமாக பிரிகின்றனர்.பின்னர் ஒன்று சேர்ந்தார்களா என்பது கொடுத்த 100 ரூபாய்க்கு கொஞ்ச நஞ்ச தலைமுடியை பிய்த்து கொண்டு அப்பாவிகளாக படம் பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்

துடிப்பான சிம்பு, அழகான திரிஷா, இதை வைத்து கொண்டு ஒவ்வொரு பாலிலும் 4, 6 என்று பின்னி இருக்க வேண்டாமா டைரக்டர் சார்..கவாஸ்கர் போல் ஒவ்வொரு ரன்னாக அடிக்கிறார். கடைசி ஒரு பாலில் 40 ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிகிறது. சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை சுவாராஸ்யமாக படமாக்கியிருக்க வேண்டாமா..எடுத்துக்காட்டு சிம்பு வீட்டில் சிம்பு தங்கையுடன் திரிஷா வந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி..எவ்வளவு ஜாலியாக இருக்க வேண்டும்..ஹூம்… உரைநடையை வாசிப்பது போல் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும், திரிஷாவும் சிம்புவும் பேசிக் கொண்டிடேயிருக்கிறார்கள்.. அப்புறம் கவுதம் மேனனின் டிரேட்மார்க் வசனங்கள்..”நீ அழகா இருக்க..இது எப்படி நடந்ததுன்னு தெரியல..பட் ஐ ஆம் இன் லவ் வித்யூ..” “த்தா..போட்டுருவமா…” போன்ற ஒரே மாதிரியான டயலாக்குகள் மின்னலே படத்திலிருந்து.. இடைவேளையின் போது தியேட்டர் கேண்டினில் கேட்டது..

“இன்னா சார் வேணும்..”

“ப்ச்..சூடா இருக்கு..பார்க்கவும் நல்லா இருக்கு..எப்படி நடந்ததுன்னு தெரியல..ஐ திங்க்..ஐ வாண்ட் வெஜ் பப்ஸ்..”

“அய்ய..பிரியுற மாதிரி சொல்லு சார்..”

“த்தா.. ஒரு வெஜ்பப்ஸ் கொடு..”

“டேய்..யாரைப் பார்த்து “த்தா..” ன்னு சொல்லுற..*****”

“அய்யோ..சாரிண்ணே..ஒரு பப்ஸ் கொடுங்கண்ணே..”

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, படத்தில் நடிப்பதற்கு முன்னால் சிம்பு கையை கட்டியிருக்கவேண்டும்..கையால் வீடு கட்டுவதற்கு பதில் பணக்கார வீட்டு பையன்கள் மாதிரி அடிக்கடி தலையை கோதிக்கொண்டே நன்றாக நடித்திரிக்கிறார். திரிஷாவும் அழகாக இருக்கிறார்..நடிக்கிறார். ஆனால் ஒரு சுவாராஸ்யமும் இல்லாத திரைக்கதைதான் போரடிக்கிறது. அவ்வப்போது வரும் காட்சிகள் தலைநிமிர வைத்தாலும் பக்கத்து சீட்டில் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. ஒருவேளை நீங்கள் காதலித்து கொண்டிருந்தால் இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கலாம். அல்லது கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு உண்டு,.,

அடுத்து முக்கியமானது. இசை..ஏ.ஆர் ரகுமான்…வழக்கம்போல் பின்னியிருக்கிறார்..குறிப்பாக “ஓசன்னா..” “ஓமணப்பெண்ணே..” தியேட்டரே பாடுகிறது….உலகத்தரமான இசை. படம் முடிந்து விட்டு வரும்போது இசை மட்டுமே நெஞ்சில் நிற்கிறது. படத்தில் வேறு நகைச்சுவையே இல்லாததால் சிம்புவின் நண்பராக வரும் கேமிராமேன் கணேஷ் சீரியசாக பேசினாலே சிரிக்கிறார்கள். அவரை பச்சைகிளி முத்துச்சரம் படத்தில் டிரைவர் வில்லனாக பார்த்த ஞாபகம். இன்னும் ஒரு நல்ல ஆளைப் போட்டிருந்து நகைச்சுவையை தூக்கலாக கொடுத்திருக்கலாம்..

ஒளிப்பதிவு, எடிட்டிங் கலக்கல்..ஒவ்வொரு காட்சியிலும் இளமை துள்ளுகிறது..அடிக்கடி கட்டிப்பிடிப்பதும், கிஸ் பண்ணுவதும்தான் காதல் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சிம்பு திரிஷாவை அடிக்கடி கட்டிபிடிக்கிறார்..திரிஷாவும் அடிக்கடி, “நட்பு..காதல்” என்று குழப்பமாகி நம்மையும் குழப்புகிறார். ஆனால் குத்துப்பாட்டு, வன்முறை, பஞ்ச் டயலாக்குகள் இல்லாத ஒரு படம் எடுத்ததற்காக கவுதம்மேனனை பாராட்டலாம்..

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..


Friday, 26 February 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார பிரச்சனை

அஜீத்-திரையுலகம் பிரச்சனைப் பற்றி எழுதாவிட்டால் பதிவர் சங்கத்திலிருந்து விலக்கிவிடுவோம் என்று மிரட்டப்படுவதால்(மிரட்டுராங்கையா..ஹி…ஹி) அஜீத் பிரச்சனையை எழுதுவது அவசியமாகிறது.. இந்த வாரத்தில் சில பதிவுகளைப் படிக்கும்போது சிப்பு, சிப்பா(சிரிப்பாமாம்..) வந்தது. அதுவும் அஜீத் தான்யா வேட்டிக் கட்டின ஆம்பிளை என்று ஒரு நண்பர் சூளுரைந்திருந்தார். கவர்மென்ட்டை பகைத்துக் கொண்டு யாரும் இங்கு வாழமுடியாது(அரசியல்வாதிகளைத் தவிர), அதனால் சீக்கிரமே சமாதானம் ஏற்பட்டு, எல்லோருக்கும் அல்வா கொடுக்கப்படும் என்று உள்மனது சொல்லியது. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு என்ன கவலைன்னா, குமுதம் சொல்லியது போல் நடுவுல “பஞ்சாயத்து தலைவனுக்கு பாராட்டு விழா” ன்னு ஏதாவது நடுத்திருவாயிங்களோன்னுதான்…எதுக்கும் கொஞ்சம் பாராட்டுக்களை மிச்சம் வைங்கப்பா..அடுத்து ”தைரிய லட்சுமியை” பாராட்ட உதவும்.. அப்புறம் இன்னும் ஒரு சந்தேகம்..அஜீத்குமார் தெரியும்..அது யாருண்ணே, தல???

இந்த வார வாழ்த்துக்கள்

வேறு யாருக்கு..தன்மான சிங்கம், பாரதத்தின் அங்கம், எங்கள் தங்கம், கொள்கைகளின் சங்கம்(யாரு யாருக்கு அடைமொழி கொடுக்குறோம்..இவருக்கு கொடுக்கலாமுன்னே) சச்சின் டெண்டுல்கருக்குதான். மனுசன் பொறக்குறப்பயே “குவா, குவா” ன்னு கத்துறக்குப் பதிலா “கிரிக்கெட், கிரிக்கெட்” ன்னுதான் கத்திருப்பார் போல. அந்த 200 அடிக்கும்போது முகத்தில் ஒரு கர்வம், ஆணவம் இருக்க வேண்டுமே..ம்..ஹூம்..துளியும் இல்லை..அதற்கு இணையான இன்னொருத்தர்..”ஏ.ஆர். ரகுமான்..” ஆஸ்கார் வாங்கும்போது அவர் முகத்தைப் பாருங்கள்..துளி கூட கர்வம் இருக்காது..இதற்காகவே, என் வாழ்க்கையில் ஒருமுறையாவது இவர்களை பார்க்கவேண்டும் என துடிக்கிறேன், முடியாது என்று தெரிந்தாலும்…சச்சின் 200 அடிக்கும் முன்னர் “தோனி” வேண்டுமென்று அவருக்கு பந்து வரக்கூடாது என்ற நோக்கத்தில் 4, 6 ரன்களாக அடித்து ஆடி பாலிடிக்ஸ் பண்ணினார் என்று நண்பர்கள் சொன்னார்கள்., சரி நம்ம கோவாலுகிட்ட எதுக்கும் கேக்கலாமுன்னு கேட்டா “ஆமாண்டா ராசா..அன்னைக்கு தோனி பண்ணியது ரொம்ப தப்புடா..சரி அத விடு..மேட்சுல இந்தியா எத்தனை கோலுடா போட்டாயிங்க” ன்னு கேக்குறாண்ணே..

இந்த வாரப் பதிவு

ஏழு கடல், ஏழு மலையெல்லாம் தாண்ட வேண்டியதில்லை. தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்தை புரட்டினாலே, நிறைய சுவாராசியமான பதிவர்கள் கிடைக்கிறார்கள். சமீபத்தில் நான் படித்து ரசித்த பதிவர் “வெளியூர்க்காரன்”. மனுசனுக்கு என்னமா நக்கல் வருது..நீங்களும் படித்துப் பாருங்களேன்..

இந்த வாரக் கொடுமை

முன்பெல்லாம் சானல்களில் அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி பார்ப்பதற்கு “சூர்யா”, “தேஜா” சானல்களின் இரவு நேரப் படங்களுக்கு இளைஞர்கள் காத்திருப்பதாக கேள்விப் பட்டிருகிறேன். ஆனால் இப்போது எல்லாரும் “மானாடா மயிலாட, ஜோடி நம்பர் ஒன் சீசன் 4” மற்றும் “ஆடவரெல்லாம் ஆட வரலாம்” நிகச்சிகளைப் பார்த்துவிடுவதால் இரவு சீக்கிரம் தூங்கப்போய், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு புண்ணியம் தேடிக் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். ஆனாலும் விடாமல் சில பேர் “வசந்த்” டீ.விக்கு முன்னால் சனிக்கிழமை இரவு தவம் கிடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வேணாமுன்னே..மனசை கெடுத்துக்காதிங்க..அத விடுங்க..”போன வாரப்படம் ஏண்ணே படம் ஒளிபரப்பலை..”

இந்த வார சாப்பாட்டுக்கடை

வீட்டுக்குப் பக்கத்துலயே சூப்பர் ஆந்திரா மெஸ்ஸு இருந்திருக்கிறது, ஜாக்கி சேகர் அண்ணன் பதிவைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது. உண்மையிலேயே சூப்பர்தான். அதுவும் அந்தப் ஆவக்காய் மற்றும் வெண்டிக்காய் பொரியல்…சோறை விட அதுதான் அதிகம் வாங்கினேன். வேளச்சேரி வந்தால் மறக்காமல் சாப்பிடுங்கள். டி.சி.எஸ் பக்கத்து சந்தில் கொஞ்சம் உள்ளே போனால் முதல் மாடியில் உள்ளது. அந்த தெருவிலே நிறைய ஆந்திர மெஸ்கள் உள்ளன.இதுதான் டாப்பு..மத்ததெல்லாம் டூப்பு..

மற்றும் ஒரு ஹோட்டல் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ளது “ராயல் ரீகேல்”. நான் வெஜ், மற்றும் வெஜ் அயிட்டங்கள் ஏ.ஒன்..மற்றும் சர்விஸ்க்காகவே அடிக்கடி செல்லலாம்..அந்தப் பக்கம் வந்தால் சொல்லுங்க நானும் வர்றேன்..”நீங்க பே பண்ணுங்க..”

இன்னும் ஒரு ஹோட்டல் செனடாப் ரோடில்..இது ஒரு வடநாட்டு தாபா..75 ரூபாய்க்கு பபே கொடுகிறார்கள்…சப்பாத்தி, மற்றும் சப்ஜி சுடசுட எடுத்து எடுத்து வைக்கிறார்கள்....பபே என்பதால் சமையல் செய்பவர்கள் கதறுகிறார்கள்..ஒருத்தரெல்லாம் ஒருமுறை சாப்பிட்டு, கை கழுவி விட்டு இரண்டாம் முறை வருகிறார்..கூடிய சீக்கிரம் கடையை மூடும் வாய்ப்பு உள்ளது..அதற்குள் சென்று விடுங்கள்

இந்த வாரம் கவர்ந்தது

திருநெல்வேலி புதிய பஸ்ஸ்டாண்டில் ஒரு அல்வாக்கடை போர்டில் படித்தது..

“ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. பக்கத்தில் உள்ள கடை எங்கள் கிளை அல்ல..போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..”:

Monday, 22 February 2010

அய்யா சாமி…தர்மபிரபு…

அப்போதுதான் அவளைக் கவனித்தேன். ஒடிசலான தேகம், கருப்பேறிய தோல், கிழிந்துபோய் கந்தலாக உடம்பை அங்கெங்கு பற்றியிருக்கும் சேலை..பட்டினியை காட்டுவதற்கு ஏதுவாக ஒடுங்கி போயிருக்கும் வயிறு, தண்ணீர் குடிக்காமல் உலர்ந்து போன நாக்கு, பிச்சை எடுப்பதற்காகவே இவ்வுலகில் தருவிக்கப்பட்ட ஒரு பாவமும் அறியாத குழந்தை.. நான் குளிர்பானம் அருந்துவதைப் பார்த்து மெதுவாக என் அருகில் வந்தாள்..

“அய்யா சாமி..தர்மபிரபு..”

எனக்கு எரிச்சலாக வந்தது. நண்பன் ஒருவனுக்காக காத்திருந்து இந்த பழமுதிர் கடையில் ஒதுங்கியிருந்தேன். பகல் 2 மணி.,மதிய உணவு வேறு சாப்பிடவில்லை. வெயில் மூளையை ஊடுருவி, நரம்பை சோதித்தது. எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் நாக்கு கூட இன்று மௌனமாக தண்ணீர் கேட்டது. ஏதாவது கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம் என்று கடைப்பக்கம் ஒதுங்கினால் இப்படி ஒரு தொல்லை.

“இல்லைம்மா..போ..”

“அய்யா சாமி..தர்மபிரபு..வெயில் தாங்கலை சாமி..ஒரு சர்பத் வாங்கிக் கொடுங்க சாமி..”

“இல்லைன்னு சொன்னா போ…”

அவள் போகவில்லை..மாறாக நான் குடிக்கும் கூல்டிரிங்க்ஸை ஆசையாக பார்த்தாள். என்னால் குடிக்க முடியவில்லை. திரும்பிக் கொண்டேன்.. அவளால் தாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை போலும்..இந்த முறை குரல் இன்னும் அழுத்தமாக கேட்டது..

“அய்யா சாமி..தர்மபிரபு..இந்த குழந்தைக்காகவாவது..”

திரும்பி குழந்தையைக் கவனித்தேன். 2 வயது இருக்கும். அம்மாவை இறுகப் பற்றி இடுப்பில் அமர்ந்திருந்தது..அதனுடைய கைகள் அம்மாவின் கழுத்தை இறுக சுற்றியிருந்தது. பசி கண்களில் தெரிய அம்மாவின் தோள்களில் சாய்ந்திருந்தது.”அம்மா பார்த்து கொள்வாள்” என்ற நம்பிக்கை பார்வையில் தெரிந்தது.. உடம்பு முழுவதும் புழுதி..என் மனம் ஒரு நிமிடத்தில் ஆடிபோனது. இவர்களுக்கு வாங்கி கொடுத்தால் இது போன்றவர்களை ஊக்குவிப்பது போலாகாதா..மனம் சடுகுடு ஆடியது.. நான் ஒன்றும் பேசவில்லை. செல்பேசி அழைத்தது. நண்பன் தான்..

“டே..ராசா..எங்கேடா இருக்கே..”

“சீக்கிரம் வாடா..டிக்கெட் புக் பண்ணிட்டியா..”

“சத்யம் இல்லைடா..புல் ஆகிடுச்சு..”

“சரி..ஐநாக்ஸ்”

“டிரை பண்ணுறேன்..”

“எவ்வளவு டிக்கெட்..”

“120 ரூபாய்..பிளஸ் டாக்ஸ்”

“சரி..வேற என்ன பண்றது..மூணு வாரமா ஹௌஸ் புல்..புக் பண்ணிடு..”

இப்போது குழந்தை வீய் என்று அழுக ஆரம்பித்தது. பசி, தாகம், வெயில், அனைத்தும் சேர்ந்து அழுத்தியது போல..கடைக்காரர் வாசலுக்கு வந்தே விட்டார்..

“வந்திட்டியா..ஒரு தடவை சொன்னா உனக்கு பத்தாது..போறியா, இல்லை சுடு தண்ணியை ஊத்தவா..”

வார்த்தைகளிலேயே சுடுதண்ணீரை ஊற்றினார்..என்னைத் திரும்பிப் பார்த்தார்..

“இதுகளுக்கு இதே பொழைப்பா போச்சு சார்..தெருவுக்கு தெரு இதுகதான் திரியுது சார்..பிச்சை எடுக்கறதுக்குன்னே பெத்து விட்டுருக்காயிங்க..நீ எதுவும் குடுக்காத சார்..”

சட்டைப் பையில் எடுத்த காசை அப்படியே திரும்ப வைத்தேன்..

“பசிக்குது சாமி..ஒரு ரூபாயாவது குடுங்க சாமி..நல்லா இருப்பிங்க..குழந்தைக்கு ஏதாவது வாங்கிக்குருவேன்..”

கடைக்காரர் கையை ஓங்கினார்..

“இப்ப போறியா..இல்லையா..”

அந்தப் பெண் பயந்து பின்வாங்கினாள்..குழந்தை இன்னும் சத்தமாக அழுக ஆரம்பித்து.இந்த முறை தேம்பி தேம்பி….அழுகையில் சத்ததில் பசி ஒன்றே தெரிந்தது..அவள் கண்களை பார்த்தேன்....”ஒரு தண்ணீராவது வாங்கி தாயேன்டா..” என்று கெஞ்சுவது போலிருந்தது..அவள் ஆற்றாமையுடன் பின்வாங்கினாள்.. அடுத்த கடை நோக்கி மெதுவாக நடந்து சென்றாள்..

திரும்பவும் செல்பேசி அழைக்கவே, எடுத்தேன்..அம்மா..

“தம்பி ராசா..எங்க இருக்க..”

“நண்பனை பார்க்க வந்தேன்..அப்படியே ரோட்டோரமா..”

“அய்யோ..வெயிலிலுயா நிக்குற..வெயில் கொளுத்துது ராசா..ஏதாவது கடையோரம நின்னுக்கப்பா..ஒரு தண்ணியாவது வாங்கி குடிப்பா..என்ன..வாங்கினியா..”

என்னால் பேசமுடியவில்லை..திரும்பி அவளைப் பார்த்தேன்..இந்த முறை மிகவும் தளர்ந்திருந்தாள்..கூல்டிரிங்க்ஸ் குடிக்கும் இன்னொருத்தரைப் பார்த்து சன்னமாக கேட்டாள்..

“அய்யா சாமி..தர்மபிரபு..”

Friday, 19 February 2010

மிரட்டுராங்கையா…..

நம்ம கோவாலு இருக்கானே..பச்சை மண்ணுன்னே..நாட்டு நடப்பு தெரியாத பய…இன்னைக்கு கலைஞருக்கு ஏதும் பாராட்டு விழா நடக்கலைன்னு சொன்னாகூட அப்படியே நம்பிடுவாண்ணே..எப்படித்தான் இந்த சென்னைப் பட்டணத்திலே பொழைக்குறான்னே தெரியலைண்ணே..

போன வாரம் பரபரப்பா எங்கிட்ட வந்தான்..

“ராசா..ராசா..பார்த்தியாடா..எங்க தல அஜீத்..சிங்கம்டா..எவ்வளவு துணிஞ்சு மேடையில பேசிருக்காரு..”

கோவாலு எந்த நடிகருக்கும் தொண்டன் இல்லைண்ணே..ஆனா யாராவது புரட்சிகரமா பண்ணினா உடனே நம்பியிருவான்..ஒருநாள் மசாலா, பஞ்ச் டயலாக் இல்லாத ஒரு படத்துல விஜய் நடிக்கப் போறாருன்னு செய்தி கேட்டு எவ்வளவு சந்தோசப்பட்டான் தெரியுமாண்ணே..

“டே..கோவாலு..இந்த காலத்துல யாரையும் நம்பமுடியாதுடா..நீ வேணா பாரேன்..இன்னும் ஒரு வாரத்துல உங்க தல கலைஞரைப் பார்க்குறாரா இல்லையான்னு..”

“போடா வெண்ணை..எங்க தல புலி..பசிச்சாலும் புலி பர்கர் சாப்பிடாதுடா..”

இன்னைக்கு காலைல தினத்தந்தியப் புரட்டுனவுடனே நேரா கோவாலுகிட்டத்தான் போனேன்..பயபுள்ள ஜன்னி வந்த மாதிரி போர்வையை நல்லா போர்த்திக்கிட்டு தூங்கிகிட்டு இருந்தான்..

“மச்சான் கோவாலு..காலையில பேப்பரைப் பார்த்தியா..”

“அதப்பார்த்துதாண்டா ஜன்னி வந்து படுத்துக்கிடக்கேன்..”

“உலக விவரம் தெரியாத பயபுள்ள இருக்கேயேடா…கவர்மெண்டை பகைச்சுக்க அஜீத் என்ன உன்னை மாதிரி விவரம் தெரியாத புள்ளையா..”

கோவாலு டல்லாகிட்டான்..

“ராசா..இந்த உலகத்தில யாருமே தைரியமா கடைசி வரைக்கும் இருக்க முடியாதாடா..”

“ஏன் இருக்க முடியாது..எங்க பக்கத்து வீட்டு குழந்தைக்கு எவ்வளவு தைரியம் தெரியுமாடா.. தன்னந்தனியா சிம்பு படம் பார்க்கும் தெரியுமா..”

திடிரின்னு எழுந்துட்டான்..

“ராசா..கேக்க மறந்துட்டேன்..சூப்பர் ஸ்டார் ரஜினி கூட அஜீத் பேசுறப்ப எழுந்து கைதட்டுனாருல்ல..டே..அவர் சிங்கம் மாதிரி…

“கோவாலு..இன்னைக்கு முதல் பக்கமே ரஜினி-கலைஞர் சந்திப்புதான்..அஜீத் சந்திப்பு கூட இரண்டாம் பக்கம்தான்..இதுல நடிகர்களை யாரும் மிரட்டவில்லைன்னு பேட்டி வேற..”

பயபுள்ள திரும்பவும் ஒரு மாதிரி ஆகிட்டான்..

“ராசா..ரஜினி அரசியலுக்கு வருவாராடா..” ஏக்கமாக கேட்டான்..

“எந்திரன் படம் ஜூலைல வரப் போகுதுல்ல..அதுக்குள்ள வந்துட்டு திரும்ப போயிருவாரு..”

“ராசா..சீரியசா சொல்லுடா..யாராவது ஒரு தலைவராவது காமராஜர், கக்கன் மாதிரி….”

கோவாலை விடுங்கண்ணே..நீங்க சொல்லுங்க..கோவாலை திருத்த முடியுமாண்ணே..

Sunday, 14 February 2010

தீராத விளையாட்டு பிள்ளை-விமர்சனம்

காதலர் தினத்தன்று ஐநாக்ஸ் சென்றிருந்தேன். காதலிக்க அல்ல. சென்னை எவ்வளவு தூரம் மேல்நாட்டு கலாச்சாரப் போர்வையைப் போர்த்தியிருக்கிறது என்று பார்ப்பதற்கு. சும்மா சொல்லக்கூடாது, கணுக்காலிருந்து முட்டிக்கால் வரை ஏறியிருக்கிறது. எப்போதும் அலட்சியப்பார்வையுடன் ஹைடெக் பெண்கள் ஸ்டைலாக நடந்து போவதைப் பார்ப்பதற்கே, தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக ஒரு இளைஞர் கூட்டம். எப்படியாவது ஒரு காதலி கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் ஒவ்வொருத்தர் முகத்திலும் தெரிந்தது., ஜோடியாக செல்லும் ஆட்களைப் பார்க்கும்போது வயிறும், மனதும் கருகும் வாசனையும் அரங்கு முழுவதும் நிரம்பி இருக்கிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக “டூ சாண்ட்விச் ப்ளீஸ்” என்று அப்பன் நெற்றி வியர்வை விழுந்து சம்பாதித்த 500 ரூபாய் அநியாயமாக தூக்கி எறியப்படுகிறது. அதை வாங்கி ஸ்டைலாக இளம்பெண்கள் பார்வையில் படும்படி எடுத்து செல்லும்போது அவர்கள் முகத்தில் உள்ள பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே.

இதில் கீழ்தளத்தில் விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட கவுண்டரில் இருந்து மைக்கை எடுத்துக் கொண்டு “எக்ஸ்கியூஸ்மீ..டிட் யூ பைண்ட் யுவர் லவ்வர்” என்று இளவட்ட பசங்களை துரத்தினர். அவர்களும் “ஆக்சுவலி” என்று ஆரம்பித்தபோது அவசரமாக இடத்தை காலி பண்ணினேன்.

மனைவி ஏதாவது படம்பார்க்கலாம் என்று சொன்னதால் ஐநாக்ஸ் தியேட்டர் சென்றோம். “தீராத விளையாட்டு பிள்ளை”, “கோவா”, மற்றும் “ஓநாய் மனிதன்” ஆகிய மூன்று படங்களுக்குதான் டிக்கெட் கிடைத்தது. ஓநாய் மனிதனை தினமும் கண்ணாடியில் பார்ப்பதால், கோவா, தீராத விளையாட்டுப்பிள்ளை இரண்டில் ஏதாவது என் நினைத்து சென்றால், தீராத விளையாட்டுப்பிள்ளைக்கு டிக்கெட் கிடைத்தது. இனி விமர்சனம்..

வாழ்க்கையில் எதை செய்தாலும் பெஸ்ட் வேண்டுமென்று நினைப்பவர் விஷால். அப்படி நானும் நினத்திருந்தால் இந்த படத்துக்கு சென்றிருக்கவே மாட்டேன். சிறுவயதிலிருந்தே ஒரு பேனா வாங்குவதற்கு கூட பத்து பேனாவை எடுத்து எழுதிப்பார்த்து ஒரு பேனாவை செலக்ட் செய்கிறார். ஆனால் அதற்காக வாழ்க்கை துணையையும் மூன்றில் ஒன்றாய் செலக்ட் செய்ய நினைத்து அவர் படுத்தும் மன்னிக்கவும் படும் கஷ்டங்கள்தான் கதை. சென்னையில் இதுபோன்ற குணாதிசியம் கொண்டவர்கள் குறைவு என்பது “தமிழ்படம்”, கோவா” ‘தீராத விளையாட்டுப்பிள்ளை” என்ற மூன்றில் இதை செலக்ட் செய்து வந்திருந்தபோது தெரிந்தது.

விஷால் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். சிலநேரம் சிரிக்க வைக்கிறார். ஆனால் கடுப்பேத்தவில்லை என்பது ஆறுதல். ஆனால் எதற்கெடுத்தாலும் “நாங்க எல்லாம் ஆம்பிளைங்க”,”பெண்கள் இப்படித்தான் டிரஸ் உடுத்த வேண்டும்” என்று ஆணாதிக்க டயலாக் பேசும் விஜய், சிம்பு வரிசையில் இணைந்துவிட்டார். அடிக்கடி பேசும் பஞ்ச் டயலாக்குகள், புரட்சி தளபதி சீக்கிரம் அரசியலில் சேர்ந்து அமைச்சரோ, முதலமைச்சராகும் வாய்ப்புகளைத் தெரிவிக்கின்றன. அதற்கு சாட்சியாக முதல் வரிசையில் அமர்ந்து விசிலடிக்கும் கூட்டமும், இதுவரையிலும் ஓட்டே போடாததை பெருமையாக நினைக்கும் கடைசி வரிசை கூட்டமும் கைதட்டும்போது உணர முடிந்தது.

படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஒருமுறையாவது முழுசாக உடுத்தி பார்க்க ஆசைப்பட்டு படம் கடைசிவரையில் முடியவில்லை. கவர்மென்ட் குடியிருப்பில் தங்கியிருக்கும் நடுத்தர குடும்பத்து ஹீரோயின் கூட டவுசர் போட்டு கொண்டு திரிவது தமிழ்படங்களின் தலையெழுத்து அல்லது இளைஞர் கூட்டத்துக்கு அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். மூன்று ஹீரோயின்களில் ஒருத்தர் கூட கடைசிவரை நடிக்கவில்லை. கவர்ச்சி காட்டுவதில் ஒரு பங்காவது நடித்திருக்கலாம். படத்தின் முதல் ஹீரோ கேமிராமேன் அரவிந்த்கிருஷ்ணாவை சொல்லலாம். தெளிவான காட்சிகள். ஒவ்வொன்றும் கலர்புல்லாக.

முதல் பாதி முழுவதும் நகைச்சுவை கலாட்டா. சந்தானம், மயில்சாமி கூட்டணி நகைச்சுவையில் தியேட்டரே அதிர்கிறது. இடைவேளை வரை படம்போவதே தெரியவில்லை. இடைவேளைக்கு அப்புறம் உயிர் போவதே தெரியவில்லை. ரொம்ப சோதிக்கிறார்கள். அதுவும் கிளைமாக்சை நோக்கி சீரியசாக நகரும்போது நாமும் எக்சிட்டை நோக்கி நகரும் எண்ணம் வருகிறது. ஆனால் அவ்வப்போது பிரகாஷ்ராஜ் வந்து கலகலப்பாக்குவதால் கொஞ்சம் தப்பிக்க முடிகிறது. இப்படி இசையமைத்தால் யுவனும் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. பப்ஸ் 50 ரூபாய் விற்றாலும் பரவாயில்லை என்று பாடல் காட்சிகளில் எல்லாம் எல்லோரும் கேண்டின் நோக்கி ஓடுகிறார்கள்.

ஆனாலும் முதல்பாதி நகைச்சுவை காட்சிகளுக்காகவும், அவ்வப்போது வரும் வித்தியாசமான காட்சிகளுக்காகவும் இயக்குநருக்கு பாராட்டுகள். இடைவேளைக்கு பின்னால் வரும் சவால் காட்சிகள் சோதித்தாலும், படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம், வேறு நல்ல படங்களுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால்.

இறுதியாக தீராத விளையாட்டு பிள்ளை – விளையாட்டு கொஞ்சம் ஓவர்தான்.


Friday, 12 February 2010

காதலிச்சே சாவுங்கடா…

இப்போதுதான் காதலர்தினம் வெளிப்படையாக கொண்டாடப்படுகிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பலபேருக்கு வெட்கம் வந்துவிடும். மனதுக்குள்ளே பல பட்டாம்பூச்சி பறந்தாலும், வெளிக்காட்ட முடியாத உணர்வுதானே காதல். நிறைய பேர் காதலர் தினம் கொண்டாடுவதற்கே காதலிகளை தேடி அலைந்தார்கள்.

அவர்களை எல்லாம் கிண்டல் செய்யும் கூட்டத்திலே நானும் ஒருவன். வேறு என்ன செய்ய, எங்களுக்கு காதலி கிடைக்கவில்லையே..

“மச்சான்..எப்படித்தான் இந்த லவ்வு கருமத்தைப் பண்ணுராயிங்களோ..தூ..”

“ஒரு பொண்ணு பின்னாடி அலையுறதுக்கு பதிலா நாயா பொறக்காலம்டா”

“சுடிதார் பின்னாடி போறவியிங்க எல்லாம் ஆம்பிளையே இல்லைடா..”

இப்படிப்பட்ட டயலாக்குகள்தான் நாங்கள் அதிகம் பேசுவது. மெல்ல மெல்ல இந்த உணர்வுகளே எங்கள் மனதை ஆக்கிரமிக்க, நாங்களே எங்களுக்கு ஒரு திரையைப் போட்டுக் கொண்டோம்..அல்லது திரை இருப்பதாக சொல்லிக் கொண்டோம். இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டவர்களை கொண்டு எங்கள் வகுப்பறையில் தனியாக அணி உருவாக்கப்பட்டது. “காதலை மதிக்காத ஆம்பிளைங்கடா” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டோம். வகுப்பறையில் எந்த பெண்ணிடமும் பேசவில்லையா, உடனே எங்கள் அணியில் இடம் அளிக்கப்பட்டது..”மனுசன்டா..” என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். பெண்களோடு பேசும் பையன்கள் புழுவைப் போல் பார்க்கப்பட்டனர். “நீயெல்லாம் சுடிதார் வாங்கிப் போட்டுக்கடா..இந்தப் பொழைப்புக்கு..” என்று கேலிப்பேச்சாலேயே எங்கள் அணிக்கு வந்தவர்கள் அதிகம். இன்னும் உண்மையைச் சொன்னால் அப்படி வந்தவன் தான் நானும்.ஹி..ஹி..

எங்கள் அணியின் தலைவன் என் நண்பன் ஆனந்த். இந்த அணியின் தலைவனாவதற்கு முன்பு வகுப்பறையில் அவனுக்கு ஒரு பெண் நண்பி இருந்தாள். பெயர் பிரீத்தி. இரண்டு பேரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றார்கள். தினமும் அவளிடம் இருந்து சாக்லேட் வாங்கி இருப்பதை பெருமையாக காண்பித்தான். “ஒரு பயலும் அவ வீட்டுக்கு போகமுடியாதுடா..நான் மட்டும்தாண்டா போவேன்..அவங்க வீட்டுல அம்மா, அப்பா கூட உக்கார்ந்து சாப்பிடிருக்கேண்டா” என்று பெருமையாக சொல்லிக் கொள்வதைக் கேட்டு பலபேருக்கு அல்சர் வந்திருக்கிறது. அழகான பெண் வீட்டுக்கு அடுத்தவன் சென்றால் வயிறு பத்திக் கொள்ளதா..அது போலதான். “நாங்கதாண்டா..உண்மையான நட்பு..அவதாண்டா..பிரண்ட்சிப்பின் அடையாளம்” பெருமையாக சொல்லுவான்

‘டே..ஆனந்து..அவளை லவ் பண்ணுறியா..”

“சீ..போடாங்க..தூய்மையான நட்புடா..லவ்வுன்னு சொல்லி கொச்சைப்படுத்தாதடா..”

அவனுடைய நட்பைப் பார்க்கும்போதெல்லாம் எல்லாருக்கும் பொறாமையாக இருந்தது. அவனுக்கென்று அவளிடம் இருந்து ஸ்பெசல் கிரீட்டிங் கார்டுகள். வாழ்த்துக்கள். சாக்லெட்டுக்கள். எல்லாமே “மூழ்காத ஷிப்பே பிரண்ட்சிப்” தான் என்று பாட்டு பாடியது. அனைவரும் கண் போட்டதாலோ என்னவோ அவனுடைய நட்பு ஒருநாள் அறுந்து போனது அவனை கண்டாலே அவள் எறிந்து விழ ஆரம்பித்தாள். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. “பொம்பளைக்கே இவ்வளவு திமிர் இருக்கும்போது ஆம்பிளைக்கு திமிர் இருக்கும்” என்று அவளை வேண்டுமென்றே கடுப்படித்தான்.

அவனுக்கு எங்கள் அணி முழு ஆதரவு தந்தது. “அப்பவே சொன்னோம் கேட்டியா..இந்த சுடிதார் போட்டவியிங்களை நம்பாதேன்னு..முதுகிலேயே குத்துவாள்கடா மச்சான்..” என்று ஏத்திவிடப்பட்டு அவன் எங்கள் அணியின் தலைவனாக்கப்பட்டான். பலபேருக்கு இதில் உள்ளூர சந்தோசம். அவளைப்பற்றி கோபமாக சொல்லி, சொல்லியே வெறி ஏற்றப்பட்டான்..”இனிமேல் பசங்கதாண்டா மச்சான் எனக்கு பிரண்ட்ஸ்..ஒரு பொண்ணு கூடயும் பேச மாட்டேன். அப்படி யாராவது ஒருத்தன் பேசுனாலும் அவனுக்கு ரெட்கார்டு போட்டுருவோம்..” வெறியாக பேசினான். ரெட்கார்டுக்கு பயந்தே எங்கள் அணியில் பலர் சேர்ந்தனர். பின்னே, வகுப்பறையில் மட்டும்தான் கேர்ஸ். ஆனால் வெளியில் பசங்ககூடதானே சுற்ற வேண்டும். இந்த நிர்ப்பந்தத்தாலேயே பலபேர் அணியில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் மேல் வெறுப்பு என்ற உணர்வு அனைவருக்குள்ளும் திணிக்கப்பட்டதால் வகுப்பறையே இரு தீவுகளாய் ஆனது…

பெண்கள், பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடு மட்டும்தான் நட்பு வைத்தனர்..பேசிக் கொண்டனர். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிப்போய் கல்லூரி இறுதி நாள் வந்தது. அப்பவும் இருபுறமும் இருமாப்பாகவே திரிந்தனர். ஆட்டோகிராப் கூட வாங்காத அளவிற்கு வெறுப்பு. எல்லாம் அன்று ஒரு நாளைக்குத்தான். கல்லூரி வாழ்க்கை முடிந்து போனது.. கல்லுரிக்கு செல்லாத அடுத்த நாள் ஏதோ அடுப்பில் நிற்பது போல் இருந்தது. என்னதான் பெண்கள் பிடிக்கவில்லை என்று நினைத்தாலும் அவர்கள் அந்த இடத்தில் இருந்தாலே தென்றல் இருந்தது. சண்டையோடு பார்க்கும் அந்த ஓரக்கண் பார்வை கூட சுகமாக இருந்தது,. ஆனால் இன்றோ ஏதோ பாலைவனத்தில் இருப்பது போல் இருந்தது. சண்டை போடுவதற்கு கூட பெண்கள் இல்லை. ஆற்றாமையுடன் நண்பன் ஆனந்த் வீட்டிற்கு சென்றேன்.

நண்பன் அவனுடைய அறையில் அடங்கிக் கிடந்தான் என்று சொல்லுவதை விட புழுங்கி கிடந்தான் என்றே சொல்ல வேண்டும். என்னைப் பார்த்ததுமே அப்படியே கலங்கி விட்டான். கண்கள் முழுவது தண்ணீர்..

“ராசா..தப்பு பண்ணிட்டமோ..அவளுக கூட சண்டை போட்டிருக்க கூடாதுடா..”

“ஏண்டா..”

“இல்லைடா..என்ன இருந்தாலும் அவளுக நம்ம கிளாஸ் பொண்ணுங்க தானே..நாம கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாமோ..”

“ம்ம்..”

“ஒரு மாதிரி இருக்குடா..ஏதோ பாலைவனத்தில் இருக்குற மாதிரி..காலேஜ் லைப்பை வேஸ்ட் பண்ணிட்டோம்டா..”

“சரி விடுடா..”

“ஏண்டா..ராசா..திரும்பவும் காலேஸ் போயிருவோமாடா..பர்ஸ்ட் இயர் திரும்பவும் படிப்போமாடா..”

விடை தெரிந்து கொண்டே கேட்டான். வாழ்க்கையில் கொடுமையான நாள் எது தெரியுமா..கல்லூரி முடிந்த அடுத்த நாள் தான். கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தால்தான் அதை உணர முடியும். அதுவும் நீங்கள் காதலித்து அதை சொல்லாமல் இருந்துவிட்டால்….

“மச்சான்..ஆனந்து கேட்க மறந்துட்டேன்..காலேஜ்ஜூல யாரையாவது லவ் பண்ணியாடா..”

“…”

“டே..வெண்ணை..அடப்பாவி..சொல்லவே இல்லை..யாருடா..”

“ப்ச்..விடுடா..”

“அடி வாங்குவ..சொல்லுடா..”

“ம்ம்ம்…தப்பா நினைக்காதடா..நம்ம பசங்ககிட்டயும் சொல்லாதடா..பிரீத்தி..அவளைதாண்டா லவ் பண்ணினேன்..”

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “பிரண்ட்ஸ்டா” என்று பெருமையாக சொன்னதெல்லாம் பொய்யா….”எங்களுக்குள்ள இருப்பது தூய்மையான நட்புடா..” என்று சொன்னதெல்லாம் நடிப்பா..

“டே..அவ உன்னை லவ் பண்ணிளாடா..”

“தெரியலைடா..”

“போடாங்க..சரி..உன் லவ்வையாவது சொன்னியா..”

“ராசா..என்னடா..ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுற..நம்ம அணி பத்திதான் உனக்கு தெரியுமே..அதுவுமில்லாம நான் அவகூட எப்படி சண்டை போட்டிருக்கேன்..எத்தனை தடவ கெட்ட வார்த்தையில திட்டியிருக்கேன். எந்த மூஞ்சிய வைச்சிக்கிட்டு அவகிட்ட போய்..”

இதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.உடைந்து அழுதே போனேன். இதற்கு மேல் அவனுக்கு ஆறுதல் சொல்ல கூட என்னால் முடியவில்லை. எந்த துக்கத்திற்கும் ஆறுதல் சொல்லலாம், காதலை இழந்தால் அழுகைதான் ஆறுதல். வாய்விட்டு அழுதாலே பாதி துக்கம் போய் விடும்.

“சரிடா..ஆனந்து இப்ப என்ன காலம் கெட்டுப்போச்சு..இப்பவாவது சொல்லாம்ல..”

என்னை ஏறெடுத்துப் பார்த்தவன் பக்கத்தில் உள்ள அலமாரியைத் திறந்து அந்த இன்விடேசனை எடுத்துக் கொடுத்தான்..

“பிரீத்தி வெட்ஸ் வெங்கட்..”

அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை..கிளம்பி விட்டேன். இது நடந்து பல வருடங்கள் ஓடி, நண்பனை எப்பவாவது சந்திப்பேன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் கேட்டால் “ப்ச்..பிடிக்கலைடா…” என்பான்., காரணம் எனக்கு மட்டும்தான் தெரிந்தது. அவனால் அவளை மறக்க முடியவில்லை. இன்னும் அவன் மனதில் அவள்தான் இருந்தாள்..

போனவாரம் ஸ்பென்சர் பிளாசாவில் எதேச்சையாக பிரீத்தியை சந்தித்தேன்..பிரீத்தியா அது..என்னால் நம்பமுடியவில்லை…வகுப்பறை அழகியான அவள் ஒடுங்கி போயிருந்தாள்..காலம் அவள் தலைமுடியில் இரண்டை வெள்ளையாக்கி இருந்தது..

“ஹே..ராசா..எப்படி இருக்க..”

“நல்லா இருக்கேன்..”

“பார்த்து 10 வருசம் ஆகிடுச்சுல்ல..இப்பதான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு..”

“ஆமா..மேரேஜ் லைப் எப்படி இருக்கு பிரீத்தி..”

“போய்கிட்டு இருக்கு..அப்புறம் ராசா..,காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் பார்ப்பியா..”

“சில நேரம்..”

“யாரெல்லாம்..”

“ம்ம்..விஜய்..ஷேக்..ராம்..ம்ம்,,யுவா..”

“அப்புறம்..வேற யார்..”

“ம்..சிவா..செந்தில்..”

“ம்ம்..வேற யாரைப் பார்ப்ப..”

எனக்கு புரிந்துபோனது. அவள் எதிர்பார்க்கும் பெயர் “ஆனந்த்..”

“சரி ராசா..நம்ம வகுப்புல யார் யாரெல்லாம் லவ் பண்ணினாங்க..”

“ஹே பிரீத்தி..என்ன கேக்குற..நம்ம கிளாஸ்ஸுல எல்லாம் எலியும் பூனையுமில்லாம இருந்தோம்..அப்புறம் எங்கிட்டு லவ்வு எல்லாம்..”

“ஹா..ஆமா..அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருதுல்ல..எவ்வளவு சின்னப்புள்ளத்தனமா இருந்துருக்கோமில்ல..”

“ஆமா..இப்ப நினைச்சா..ஏண்டா அப்படி இருந்தோமின்னு தோணுது. ஒரு பேக்வேர்ட் பட்டன் இருக்குமா..திரும்பவும் கல்லுரி வாழ்க்கை வாழ்ந்து அதெயெல்லாம் சரி செய்துவிடுவோம்..”

விழுந்து விழுந்து சிரித்தாள்..எனக்கு எங்கிருந்துதான் வேகம் வந்தது என்று தெரியவில்லை..அதைக் கேட்டே விட்டேன்..

“ஹே..பிரீத்தி..நீ யாரையாவது லவ் செய்தியா..”

அவளிடமிருந்து பதிலே காணவில்லை. சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு சொன்னாள்..

“ஆமாம்..ஆனா அவன் கிட்ட சொல்லலை..”

“ஹே..யாரது..”

“ஆனந்த்…..”

Monday, 8 February 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார கண்டணம்

இந்த வார கண்டனம் நடிகர் ஜெயராமுக்கும், அவரை எதிர்த்து அவருடைய வீட்டை தாக்கியவர்களுக்கும். என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் “தடித்த, கறுத்த தமிழச்சியான வேலைக்காரி” என்று சொன்னது தவறு. ஏன் தடித்து கறுத்து, வீட்டு வேலை செய்தால் அவ்வளவு இளக்காரமா..ஒருநாள் உங்கள் வீட்டு வேலைக்காரி விடுமுறை எடுக்கட்டும், அப்புறம் பாருங்கள் உங்கள் வீடு எவ்வளவு நாறிப் போகிறது என்று. பவுடர் போட்டு நடிக்கத் தெரிந்தால் மட்டும் பத்தாது, அடுத்தவர்களின் மனது புண்படாமல் பேசுதலோ, இருத்தலோதான் மனிதனுக்கு அடையாளம். உங்கள் நடிப்பை பார்த்து சிரித்து, மகிழ்ந்த மக்கள், உங்கள் கருத்தைக் கேட்டு சிரிப்பார்கள் என்று நினைத்தால் “சாரி ஜெயராம் சார்..” நாங்கள் மனிதர்கள்..

அடுத்த கண்டனம், ஜெயராமுக்கு கண்டனம் தெரிவிப்பதாக சொல்லி அவருடைய வீட்டை உடைத்தவர்களுக்கு. எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், அதைக் கருத்தாலும், கண்டனத்தாலும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல. தவிர, அவர் அனைத்து தமிழ்பெண்களை பற்றியும் தவறாக கூறவில்லை. வீட்டு வேலை செய்பவர்களை வேண்டுமானால் தவறாக கூறிவிட்டார் என்று போராடுங்கள், “தமிழர்களை இழிவுப்படுத்திவிட்டார்” என்றல்ல. அப்படி போராடும் முன்பு, நம் வீட்டு வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்று ஒருதடவை சுயஆராய்தல் நலம்.

இந்த வார கருத்து

நடிகர் அஜீத் மேடையேறி பேசி அவ்வளவாக பார்த்ததில்லை. ஒருமுறை காவிரி தண்ணீருக்காகவோ, ஈழத்தமிழர்களுக்காகவோ பேசியதாக ஞாபகம். அதுவும் “நன்றி வணக்கம்” என்று பேசி முடிக்கவே எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. பொதுவாக அவருக்கு மேடைப்பேச்சு பழக்கமில்லை என்பது என் கருத்து. மேடையிலேறி பேசுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். பச்சையாக சொல்வதென்றால் கொஞ்சம் பொய் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சக்கரை தடவ தெரிந்திரிக்க வேண்டும். யாரைப் பற்றி பேசுகிறோமோ அவரே “ கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா” என்று சொல்லும் அளவுக்கு ஐஸ் வைக்க தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே அஜீத்திற்க்கு தெரியவில்லை..நேற்று திரைப்பட உலகினர் கலைஞருக்கு எடுத்த விழாவில் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டுப்போனார்..”எந்த விழாவுக்கும் கட்டாயப்படுத்தி கூப்பிடிகின்றனர்..” காலையில் பேப்பரை திறந்து பார்த்தால் விழாவில் நடனமாடாத நடிகைகளுக்கு திரையுலகம் நோட்டிஸ் என்று இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். “நம்ம நாடு சுதந்திரம் வாங்கிருச்சுல்ல…???”

இந்த வாரக் கொடுமை

விஜய் டீ.வியில் ‘வாங்க பேசலாம்” என்று ஒரு நிகழ்ச்சி.. நடத்துபவர்கள் நம்ம டெல்லி கணேஷ் சாரும், ஐயா பெரியார்தாசனும். இந்த வாரம் கலந்து கொண்டவர் நடிகை பத்மப்பிரியா அவர்கள். இரண்டு பேரும் வழிவழியென்று வழிந்ததாக எனக்குப் பட்டது. அதற்கு பத்மப்பிரியா அவர்கள் கொடுத்த எக்ஸ்பிரசன்களால் பார்ப்பவர்களுக்கே வெட்கம் வந்துவிட்டது. பெரியார்தாசன் ஐயா, உங்கள் கருத்துகளைக் கண்டு, உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் ஆட்களில் நானும் ஒருவன்..ஆனால் அந்த நிகழ்ச்சியை நீங்களே ஒருமுறை பாருங்கள். எப்படி பேசி இருக்கிறீர்கள் என்று.. தேவைதானா இது..அதுவும் எந்தவித தயாரிப்பும் இல்லாமல் நீங்களும் டெல்லிகணேஷ் ஐயாவும் போடும் மொக்கைகள் “தாங்க முடியலீங்க..”

இந்த வார சந்தேகம்

சின்னத்திரை பாலியல் கொடுமைகளுக்கு,டைரக்டரை தண்டிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேறி இருக்கிறதாம். ஆனால், தினம் தினம் அழுது , எங்களுக்கு சோறு கிடைக்க விடாமல் செய்யும் சின்னத்திரை சீரியல் நடிகைகளையும், டைரக்டர்களையும் தண்டிக்க நாங்கள் என்ன தீர்மானம் போடுவது..

இந்த வார சாப்பாட்டுக்கடை

நீங்கள் ஊட்டி செல்கிறீர்களா..நிம்மதியாக தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஒரு ஹோட்டல் இருக்கிறது..”ஹோட்டல் பிரீத்தி க்ளாசிக் டவர்ஸ்”. அவ்வளவு தரம் மற்றும் சேவை. உண்மையிலேயே சொர்க்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. ஏதும் பிரச்சனை என்றால் ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிடுகிறார்கள். அறை முழுவதும் அவ்வளவு சுத்தம். வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானல் “அமெரிக்கா” வுல கூட இப்படி ஒரு ஹோட்டல் பார்த்ததில்லைன்னா பார்த்துக்குங்களேன்..

Wednesday, 3 February 2010

சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்

“சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்..”

“அண்ணே..அப்படியே சாப்பிடுறதுக்கு ஒரு புரோட்டா சொல்லியிருங்கண்ணே….”

“ஹாய்..விஜி குட்டி..எப்படி இருக்க…”

“என்ன தம்பி...ஒரு வாரமா சாப்பிடுறதுக்கு ஆளைக் காணோம்..”

“ஆபிஸ் வேலை விசயமா இருந்தேன்..அதுதான்..எப்படி இருக்கிங்க..”

“என்னடா செல்லம்..ஒரு பத்து தடவையாவது கால் பண்ணியிருப்பேன் எடுக்கவே மாட்டிங்குற..வாட்ஸ் கோயிங்ங் ஆன்..வாட்ஸ் ஹேப்பண்ட் யா..”

“ஏதோ இருக்கேன் தம்பி..வாழ்க்கை ஓடுது..மெட்ராஸ் வாழ்க்கை நரகம்தான்பா..”

“ஏண்ணே..இவ்வளவு விரக்தியா பேசுறீங்க..எல்லாம் சரியாகிடும்ணே..”

“விஜி..இப்ப மட்டும் நீ போனை கட் பண்ணினே..நான் செத்தே போயிடுவேன்..என் வாழ்க்கையே நீதான்பா..நீ இல்லாம நான் எப்படிடா..ஜஸ்ட் திங்க் டா..”

“தம்பி..நம்பளே நொம்பலத்துல இருக்கோம்..பக்கத்துல போன் பேசுறவன் பகுமானத்த பாருங்க..ஒரு காபியை வாங்கிக்கிட்டு ஒன்றரை மணிநேரமா பேசிக்கிட்டு இருக்கான்..ஒரு பத்து பொண்ணுங்க கூடயாவது போன் பேசியிருப்பான் தம்பி..இதுக எல்லாம் எப்ப தம்பி உருப்படும்..”

“விடுங்கண்ணே..கடையின்னா பத்து பேரு வரதான் செய்வாங்க..சரிண்ணே..உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னீங்களே..ஏதாவது வரன் வந்திச்சா..”

“நாளைக்கு காபிடே வந்துரு..நான் எல்லாத்தையும் எக்ஸ்பிளையின் பண்றே..ஓகேயாடா “

“இருங்க தம்பி..புரோட்டா ரெடி ஆகிடுச்சு..எடுத்துட்டு வர்றேன்..”

“அண்ணே..சட்னி வேண்டாம்..குருமா மட்டும் போதும்..”

“பிளிஸ்டா..என்னை நம்பு..லவ்வுன்னா நம்பிக்கை வேணும்டா..நாளைக்கு உனக்கு பிடிச்ச வெஜ் பர்கரோட வெயிட் பண்றேன்..நீ வரலைன்னா..”

“இந்தாங்க தம்பி நல்லா வைச்சி சாப்பிடுங்க..பொண்ணுக்கு எத்தனையோ வரன் பார்த்தேன் தம்பி..எதுவும் சரிப்பட்டு வரல..எல்லாரும் ஒரு லட்சத்துக்கு மேலே வரதட்சணை கேக்குறாயிங்க தம்பி..நான் மாசம் வாங்குற நாலாயிரம் சம்பளத்தை வைச்சு எப்படி தம்பி….”

“ஏண்ணே..ஓனர் கிட்ட ஏதாவது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே..”

“டியர்..உன் கோபம் நியாயமானதுதான்.ஐ அண்டர்ஸ்டாண்ட்..பட் என் லவ் ரியல்டா..யோசிச்சு பாரு..உனக்காக நான் எவ்வளவு தியாகம் பண்ணியிருப்பேன்..என்னோட மொபைல் பில் மட்டும் மாசம் எட்டாயிரம்..எல்லாம் உன்னோட, உன்னோட மட்டும் பேசுனதுக்குதான்..நீ என்னடான்னா..”

"எங்க தம்பி..அடிமை மாதிரி வேலை வாங்குறாரு..100 ரூபா அதிகம் கேட்டா..நீ இல்லைன்னா ஆயிரம் பேரு இருக்காங்கன்னு நன்றியே இல்லாம சொல்றாரு..”

“கஷ்டம்தாண்ணே..”

“நீ சொல்லுடா இப்ப..உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத வேலை எனக்கு தேவையே இல்லைடா..இப்பவே சொல்லு, நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேன்…”

“ஆமாம் தம்பி..வயசுக்கு வந்த பொண்ணை ரொம்ப நாள் வீட்டுல வைச்சிருக்குறது வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.காலம் ரொம்ப கெட்டுப் போயிடுச்சுல்ல தம்பி..”

“எல்லாரும் அப்படி இல்லைண்ணே..”

“சரிடா விஜி..நான் அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணியிருக்கு கூடாதுதான்..ஆனா அன்னைக்கு என் மனசு எங்கிட்ட இல்லைப்பா..ஒரு மாதிரி இருந்துச்சு..அதுதான் கிஸ் பண்ண டிரை பண்ணினேன்..ஆனா அதுல லவ்தாண்டா இருந்துச்சு..லஸ்ட் இல்லைடா..பிளீஸ் என்னை நம்பு..”

“வேற எதுவும் வேணுமா தம்பி….தப்பா எடுத்துக்காத தம்பி..ஒரு 100 ரூபா கடன் கிடைக்குமா..சம்பளம் வந்ததும் குடுத்துறேன்..”

“இதுல என்னண்ணே இருக்கு வாங்கிக்குங்க..”

“செல்லம்..எவ்வளவு நேரம்தான் உனக்கு சமாதானம் சொல்லுறது..நான் போன வாரம் வாங்கி குடுத்த கிப்டை இன்னொரு முறை திறந்து பாரு..அதுல என்னோட லவ் தெரியும்..அந்த கிப்ட் எவ்வளவு தெரியுமா..பத்தாயிரம்..”

“ரொம்ப நன்றி தம்பி..”

“சரிண்ணே..லேட் ஆகிடுச்சு..நான் வர்றேன்..”

“விஜி..விஜி..கட் பண்ணிட்டியா..விஜி..ஹல்லோ..ஹல்லோ..இருக்கியா..கேட்குதா..ஹலோ..ஹலோ..விஜி..ஷிட்....”

“அடிக்கடி வாங்க தம்பி..உங்க கிட்ட பேசுறப்ப கொஞ்சம் கஷ்டம் குறையுது தம்பி..”

“கண்டிப்பாண்ணே..”

“ஹலோ..ஹலோ..ஹலோ..பிரீத்தி டியர்..வருண் ஹியர்..ஹவ் ஆர் யூ..என்னடா பிசியா..உன்னை பார்த்தே நாலு நாள் ஆகிடுச்சு..ஐ மிஸ் யூ டா…”

“சரிங்க தம்பி..பில்லை கவுண்டரில குடுத்துருங்க..”

“சரி..”

“யோவ்..தம்பிக்கு எவ்வளவு பில்லு..”

“43 ரூபா அண்ணாச்சி..”

“ஓனர் அண்ணே..இந்த போஸ்டரை உங்க கடையில ஒட்டிக்கிரவா..”

“டேய்..என் கடை என்ன சத்திரமா..அதெல்லாம் ஒட்ட கூடாது..ஓடிப்போயிடு..”

“ஓனர் அண்ணே..எப்போதும் உங்க கடையில ஒரு போஸ்டர் ஒட்டுவோம்ல..இன்னைக்கு மட்டும் ஏன் திட்டுறீங்க..”

“முடியாதுன்னா முடியாதுடா..அப்படி என்ன புடுங்கி போஸ்டர்..”

“அதுதாண்ணே..போன வருசம் முத்துக்குமாருன்னு செத்துப் போனாருல்ல..அவருக்கு ஏதோ நினைவஞ்சலியாம்..”