Monday, 8 July 2019

சலூன்

சலூன்




சிறுவயதில் எனக்கு பிடிக்காத இரண்டே இரண்டு விசயங்கள். ஒன்று பள்ளிக்கூடம், மற்றொன்று சலூன்.

பள்ளிக்கூடம் கூட, சிலவேளைகளில் நன்றாகப் போகும். ஆனால் இந்த சலூன் இருக்கிறதே. உள்ளே போய்விட்டு வெளியே போவதற்குள் ஹிட்லரின் வதைக்கூடத்திற்கு சென்று தலையை கொடுப்பது போன்று ஒரு உணர்வு.
இதற்காகவே முக்கு கடையில் இருக்கும் அந்த சலூன் ஆசாமியை எனக்கு பிடிக்காது.

எங்கப்பாவிற்கு, என் தலையில் முடி இருப்பதே பிடிக்க்காது..”என்னடா, இது பன்னிக்குட்டி மாதிரி…முக்கு கடையில சொல்லியிருக்கேன்..போயிட்டு ஒட்ட வெட்டிட்டு வந்துரு..” ம்பார்.

கடுப்பாக இருக்கும். கூடுதலாக கடுப்பேத்துவதற்கே வரும் அண்ணன்மார்கள்,
“அண்ணாச்சி..கின்னி வெட்டு வெட்டிருங்க” ம்ப்யாங்க..அதாவது தலையில் ஒரு கின்னத்தை வைத்து, சைடுல புல்லா வெட்டிவிடுவது..காட்டில் வாழும் குரங்குக்கு ப்ரண்ட் மாதிரி இருக்கும்.
.
ஊரில் இருப்பதே ரெண்டு சலூன் கடைதான். அதுவும் முக்குகடை ஆசாமி, ரொம்ப லொல்லு புடிச்சவர்..

“தம்பி…என் கிட்ட விட்டுருங்க..காதை மட்டும் விட்டுட்டு அம்புட்டையும் வெட்டிருவேன்” ம்பார்..அழுகை, அழுகையாய் வரும்.

மனசாட்சி இல்லாமல், கத்திரிக்கோலை வைத்து என் தலையில் சிற்பி மாதிரி செதுக்குவார். ஒரு நாள் தவறுதலாகவோ, அல்லது வீட்டுல ஏதாவது பிரச்சனையோ, அல்லது பரிச்சார்தத முயற்சியோ தெரியவில்லை, என்னுடைய ரெண்டு கிர்தாவையும் தூக்கிட்டார்..

“ஏண்ணே, இங்கிட்டு ரெண்டு பக்கமும் சைடுல இருக்குமே..காணோம்” ன்னேன்.

“அது எதுக்கு தம்பி, அசிங்கமா…அதுதான் எடுத்துட்டேன்..” னு வடிவேல் மாதிரி சொன்னவுடன் குலை நடுங்கி போனென்..

“ஏன்னே..பேச்சு வாக்குல, கண் இமையையும் எடுத்துறாதிங்கண்ணே..”ன்னேன்.

“போங்க தம்பி..எப்போதும் விளையாட்டுதான்..” ன்னார்..

அந்த ஒரு வாரம் முழுவதும் சைடுல கிர்தாவை மறைத்து கொண்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி, ஸ்கூலில் அமர்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது..
சலூன் போவதென்றாலே, எட்டிக்காய் போல கசக்கும் அந்த வயதில்.

காலம் செல்ல செல்ல, இப்போதெல்லாம் சலூன் “ஸ்பா” ஆகிவிட்டது.. சென்னையில் எங்கு பார்த்தாலும் “ஸ்பா” தான்.

சலூன் முழுவதும் “ஏ.சி”. உள்ளே சென்றால், பேஷண்டை வரவேற்கும் டாக்டர் போல

“எஸ்..வாட் கேன் ஐ டூ பார் யூ..” ங்கிறாய்ங்க..ஏண்டா சலூன்ல வந்துட்டு சரவணபவன் மீல்ஸா ஆர்டர் பண்ணமுடியும்..வெட்டிங விடுங்கடா” ன்னு மனசில் சொல்லி கொள்வேன்

இப்போதெல்லாம், நம்பர் கேட்க ஆரபிக்கிறார்கள்..

“சார்..விச் நம்பர்..”

அதாவது, முடியின் அளவு 1 லிருந்து 10 நம்பராம்..நம்பர் சொன்னால் அதற்கேற்ற மாதிரி வெட்டுவாய்ங்களாம்.

இது தெரியாம நம்ப ராசி நம்பரத்தான் கேக்குறாய்ங்க போலன்னு, “4” ன்னேன்..

வெளியே வரும்போது, “எங்கே செல்லும் இந்த பாதை” சேது விக்ரம் மாதிரி ஆக்கிவிட்டார்கள்.

நைட்டு வூட்டுல தூங்குறீங்களோ இல்லையோ, முக்கியம் கிடையாது.

சலூனில் மட்டும் மறந்தும் தூங்கிர கூடாது. சற்று கண்ணசர்ந்தால் “ஞானப் பழத்தை பிழிந்து” ஏறக்குறைய மொட்டை போட்டுவிடுவார்கள்.

முக்கியமான விஷயம் பேச்சுவார்த்தை.. பல பிசினசுகள் முடி வெட்டும்போதுதான் நடக்கும்..

“என்ன சார்..முகம் முழுவதும், எண்ணை பிசுக்கா இருக்கு..ஒரு ப்ளீச்சிங்க் பண்ணினீங்கன்னா பளிச்சுன்னு இருப்பீங்கள்ள”

நம்மளும் “அப்படியா” ங்க.

“ஜஸ்ட் 400 ருபீஸ்தான் சார்..பண்ணி பாருங்க” ம்ப்யாங்க..

அதுவும் என்னிடம் மனசாட்சியே இல்லாமல் ஒருத்தர்

“லைட்டாதான் சார் கருப்பா இருக்கு..எல்லாம் ஸ்கின் பிக்மெண்ட் தான் சார்..ஒரு ஆர்கானிக் பேசியல் பண்ணினா, எல்லா கருப்பும் போயிடும், விஜயகாந்த் மாதிரி ஆகிடுவிங்க” ன்னு ஆசை காட்ட
சரி பண்ணி விடுங்கன்னு உக்கார்ந்ததுதான் குற்றம்..பத்து நாளாக விளக்காத அடிபிடிச்ச பாத்திரத்தை கழுவுற மாதிரி புகுந்து விளையாடினார்..சரி, இதுக்கு மேல இந்த மூஞ்சிய பண்ணுறதுக்கு எதுவும் இல்லைங்கிற முடிவுக்கு வந்து “இப்ப வீட்டுக்கு போய் பாருங்க சார்” ன்னார்.

வீட்டிற்கு போறேன்..பக்கத்து விட்டுக்காரர்

“தம்பி யாரு நீங்க..எதுக்கு கதவை தட்டுறீங்க..” ங்க

ஆறு வயதான மகன்

“மம்மி.சம்படி இஸ் வெயிட்டிங்க் அவுட் சைடு” ங்க..

அந்த வாரம் முழுவதும் நாசமா போச்சு..

அதனால சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றேன்னா, மசிரு தானேன்னு அலட்சியாம இருந்துறாதீங்க..

Sunday, 15 May 2016

கோழிக்குஞ்சு






சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பார்கள்..அதுவும் கலர், கலராக..பார்ப்பதற்கே வண்ணமயமாக இருக்கும்..அது பாட்டுக்கு தோட்டத்தையே சுற்றி, சுற்றி வரும்..

அம்மா, ஒவ்வொரு கோழிக்குஞ்சுகளும் பெயர் வைக்கச் சொல்லுவார்கள்..அண்ணன்மார்கள் அவர்களுக்கு என்று ஒரு கோழிக்குஞ்சுக்கு பெயர் வைத்தார்கள்..எனக்கு பிடித்த கோழிக்குஞ்சு, ரோஸ் கலரில் இருந்ததால், “ரோசி” என்றுதான் பெயர் வைத்தேன்.

பள்ளிக்கூட தருணங்களில் எப்போதும் “ரோசி” யைப் பற்றியே சிந்தனை இருக்கும்..அம்மா கொடுக்கும், பத்துபைசாவை சேர்த்துவைத்து, கம்பு, திணை என்று வாங்கிவருவேன்..பள்ளி முடிந்து வீடு வந்தவுடன், பையைத் தூர எறிந்துவிட்டு ரோசியை நோக்கித்தான் ஓடுவேன்..அதை கைகளில் தூக்கி கொண்டு கொஞ்சிக் கொணடே, நான் வாங்கி வந்த திணை, கம்பு எல்லாவற்றையும் என் கைகளில் கொத்தி, கொத்தி சாப்பிடுவதை பார்த்தபின்புதான் எனக்கு மூச்சுவரும்..

ஒருமுறை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது, “ரோசியை” காணவில்லை..அம்மாவிடம் அழுது புரண்டேன்..எங்கயோ ஓடி போய்விட்டது என்றார்கள்..அன்று இரவு முழுதும் அழுது கொண்டே இருந்தேன்..தூக்கமே இல்லை.

அடுத்த நாள் மதியம் உணவுக்கு அமரும்போது தான், சிக்கன் குழம்பு வைத்தார்கள். என் அண்ணன்மார்கள் கிண்டலாக உன் ரோசியைத்தாண்டா குழம்பு வைத்திருக்கோம் என்று சொன்னபோது, தட்டை தட்டிவிட்டு ஓடிப்போய் படுக்கையில் குப்புற படுத்து கொண்ட அழுத தருணங்களையெல்லாம் மறக்கமுடியவில்லை..அன்று சிக்கன் சாப்பிடாதவன்தான் , கல்லூரி முடிந்து வேலை தேடும்வரை சைவப்பிள்ளையாகவே இருந்தேன்..சிக்கனை கையில் தொடக்கூடாதென்று அவ்வளவு வைராக்கியம்..

நாட்கள் போனது..கடந்த பிப்ரவரி மாதம், நானும், பெனிட்டோவும்(என் பையன்) கடைத்தெருவுக்கு சென்றபோது, கலர் கோழிக்குஞ்சுகளை, ஒரு பெரிய கூடையில் விற்று வந்தார்கள்.. பெனிட்டோ, “அப்பா வாங்கலாம்பா” என்றான்..நான் இருக்கும், 3 பெட்ரூம் அபார்ட்மெண்டில் எப்படி வளர்ப்பது என்று எனக்கு பெரியதயக்கம்..”வேண்டாண்டா செல்லம்” என்று சொல்லிக்கொண்டே கவனித்தேன்..ரோஸ் கலரில் ஒரு கோழிக்குஞ்சு என்னையே பார்ப்பதுபோல் இருந்தது. எனக்கு என் ரோசி ஞாபகம் வந்தது..

ஒரு நொடி கூட யோசிக்கவில்லை..”எவ்வளவுங்க” என்றேன்..100 ரூபாய்க்கு 6 என்றார்கள்..ஒரு பையில் கொடுத்தார்கள்..வீட்டில் எப்படி வளர்ப்பது என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லை..ரோசி என்ற பெயர் கொடுத்த உந்துதல் அப்படி..
வீட்டிற்கு வந்து ஒரு சின்ன அட்டைப்பெட்டியில் 6 கோழிக்குஞ்சுகளையும் போட்டு வளர்த்தேன். பெனிட்டோ, “என்னப்பா பேர் வைக்கலாம்” என்றான்..தயங்காமல் “ரோசி” டா என்றேன்..

அப்போதுதான் ரோசியை கவனித்தேன்..ஒரு கால் உடைபட்டிருந்தது..அதனால் மற்ற கோழிக்குஞ்சுகளை போல் நடக்க முடியவில்லை..நொண்டி, நொண்டிதான் நடந்தது..
தினமும், ஆபிஸ் முடிந்து வரும்போது, அவைகளுக்கு, திணை, கம்பு, கொத்தமல்லி வாங்கி வருவேன்..இன்னும் கூடுதல் கவனம் ரோசி மீது எனக்கு..அதை மட்டும் ஒரு கையால் தூக்கி கொண்டு, மற்றொரு கையில், திணை, கம்பு வைப்பேன்..அது கொத்தி, கொத்தி சாப்பிடும்போது, ஏதோ, என் பால்ய கனவுகளை மீட்டெடுத்த வெறி..

முதல் ஒரு மாதம் தான், இரண்டு கோழிக்குஞ்சுகள் இறந்தன..கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது..ஆபிஸ் முடிந்து வந்தவுடன், நானும் அவைகளும் பேசிக்கொள்ளும் மொழியே தனி..”பக்..பக்..பக்..பக்..” என்றுதான் அழைப்பேன்..
எங்கே இருந்தாலும், நான் “பக்..பக்..பக்..பக்..” என்று அழைக்கும்போது, துள்ளி குதித்து ஓடி வரும் அழகே தனி..அதுவும் என் ரோசி, ஒரு காலை மட்டும் ஊன்றி கொண்டு, ஓடி வரும் அழகை காண, கண் கோடி வேண்டும்..

ஆனால், என்னால் அவைகளால், நீண்ட காலம் வளர்க்க முடியவில்லை..வீடு முழுவதும் அசுத்தம் செய்தன..வீடு சுத்தம் செய்வதே, பெரிய வேலையாக இருந்தது..பெனிட்டோவுக்கு வேறு அவ்வப்போது காய்ச்சல் வந்தபோது, டாக்டர் “வீட்டில் எதுவும் பெட் அனிமல் வளர்க்குறீங்களா” என்று கேட்டபோது, அந்த பயம் இரட்டிப்பானது..அதனாலேயே அவைகளிடம் கொஞ்ச நாள் நெருங்க பயமாக இருந்தது..

எப்போதும் காலை எழுந்தவுடன், முதலில் நான் செல்வதே அந்த அட்டைப்பெட்டியை நோக்கித்தான்..இன்றும் வழக்கம்போல் அட்டை பெட்டி நோக்கி சென்று பார்த்தபோது, ரோசி அசைவின்றி கிடந்தது..அதனுடய தலையை மற்ற கோழிக்குஞ்சுகள் கொத்தி எழுப்ப முயன்று கொண்டிருந்தன..எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை..ஒரு கையில் அதை தூக்கி “ரோசி, ரோசி” என்று கத்தினேன்..ஒரு சலனமும் இல்லை..இறந்திருந்தது..அதை அந்த கோலத்தில் பார்க்க கடினமாக இருந்தது..

அதை வெளியே சென்று அடக்கம் செய்துவிட்டபின் ஒரு முடிவெடுத்தேன்..இனிமேல் கோழிக்குஞ்சுகளை என்னால் வளர்க்க முடியாது..மனதைக் கல்லாக்கிகொண்டு, ஒரு பாலித்தின் பையில் மிஞ்சி இருந்த, 3 கோழிக்குஞ்சுகளை தூக்கிகொண்டு, செட்டிநாடு மருத்துவமனையின், பின்புறம் கொஞ்சம் தோப்போடு ஒட்டிய வீட்டு முன்பு, விட்டு, விட்டு, திரும்பி பார்க்காமல் காரை எடுத்து வந்துவிட்டேன்..

காலை சர்ச் முடித்து, மதிய உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்று ஆர்டர் செய்தேன்..என்னவோ மனம் முழுதும் அந்த கோழிக்குஞ்சுகளே நிறைந்திருந்தன..வளத்திருக்கலாமோ, என்ற எண்ணம் வாட்டி எடுத்தது..சாப்பாட்டை, ஒரு வாய் கூட வைக்கவில்லை..அவசரம், அவசரமாக காரை எடுக்க ஓடினேன்..
செட்டிநாடு மருத்துவமனை பின்பு, அவைகளை இறக்கி விட்ட இடம் நோக்கி விரைந்தேன்..அவைகளை இறக்கிவிட்ட இடத்தில், ஒன்று கூட காணவில்லை..கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது..

முதன்முறையாக மனதிலிருந்து அழுதேன்..பெருங்குரலடுத்து கத்தினேன் அந்த இடம் முழுக்க அதிர “பக்..பக்..பக்..பக்...”

ஒரு பயனும் இல்லை..ஏதோ இதயத்தை ஒரு நிமிடம் பறித்து தூர எறிந்தார்போல் இருந்தது..காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்தபார்த்தபோது, ஒரமாய் இருந்த அட்டைப்பெட்டி..எட்டிப்பார்த்தேன்..

வெறுமையாய் இருந்தது...


Saturday, 7 February 2015

என்னை அறிந்தால் – ஏமாற்றம்






தொடர்ச்சியாக இரண்டு வியாபார ரீதியிலான தோல்வி படங்கள் கொடுத்த இயக்குநரின் அடுத்த படைப்பு..கூடவே “தல” தல” என்று ரசிகர்களால் கொண்ட்டாடப்படும் அஜீத், இயக்குநரின் ஆஸ்தான இசையமைப்பாளர்..இப்படி ஒரு காம்பினேஷனில் கவுதம் மேனன் எப்படி எடுத்திருக்கவேண்டும்..”கவுதம் இஸ் பேக்” டா என்று சொல்லும் அளவுக்கு..ம்..ஹூம்..

படத்தின் கதையைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை..ஏனென்றால் இரண்டு நாட்கள் கழித்து உண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவார்..அதில் அஜீத் நாலாவது சீனில் என்ன கலர் சட்டை போட்டிருந்தார் ரேஞ்சு அளவுக்கு இருக்கும்..படித்து கொள்ளுங்கள்..
இனி படத்தைப் பற்றி என்னுடைய விமர்சனங்கள்..

·         கவுதம் மேனன்..அதே இங்கிலீஷ் டயலாக்குகள்..வழவழவென்று ரசிக்க முடியாதபடி வசனங்கள்..ஏறக்குறைய முதல் பாதி முழுவதும் பயங்கர வசனங்கள்..பக்கத்து சீட்டில் இருந்தவர்..”இன்னாப்பா..ஒன்னும் பிரியலையே..” என்றபோது, ஏறக்குறைய நான் ஒரு ஜென்நிலையில் இருந்தேன்..புரிந்து கொண்டு அவரே தூங்கிவிட்டார்..
·        
          கெட்டவார்த்தைகள் சராமரி...அதுவும் அஜீத் பேசும்போது சென்சாரில் ம்யூட் பண்ணினால் கூட காதுக்குள்ள் “கொய்ங்க்” ன்னு கேட்கும்போது, நம்மளும் நாலு பேரை இப்படி திட்டவேண்டும் என்று வெறி ஏற்படுகிறது..
·       
          அனுஷ்கா வந்து போகிறார்.அவர் டயலாக் பேசும்போது, அப்படியே லேடி கவுதம்மேனன் பேசுவது போல் இருக்கிறது..முடியலைப்பா..
·      
         அஜீத் பற்றி சொல்வதறகு அவ்வளவு பெரிதாக ஒன்றுமில்லை..வழக்கம்போல பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிசம் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார்..ஆனால் போலிஸ் ஆபிசருக்குண்டான அந்த மிடுக்கு மிஸ்ஸிங்க் சாரே...
·    
          இந்த கதையில் எதற்கு அனுஷ்கா, அந்த குட்டிப்பாப்பா என்று தெரியவில்லை..குட்டிப்பாப்பாவுக்கும், அஜீத்துக்கும் உள்ள பாசம் ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தவில்லை..
·       
          படத்தின் மிகப்பெரிய் ஆறுதல் அருண்விஜய்..மனிதர்..அவ்வளவு வெறியையும் தேக்கிவைத்திருப்பார் போல..பின்னி பெடலெடுக்கிறார்..அதுவும் கடைசி இருபது நிமிடங்களில் அவருக்கும், அஜீத்துக்கும் உள்ள சேசிங்க்..கிளைமாக்ஸ் காட்சி என்று அதகளம் பண்ணியிருக்கிறார்..முதல் காட்சி முடிந்து அவர் அழுததின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது..வெல்கம் பேக் அருண் விஜய்..
·        
         விவேக் என்று ஒரு காமெடி நடிகர் இருந்தார் என்று கூடிய சீக்கிரம் எழுதவைத்துவிடுவார்களோ என்று கஷ்டமாக இருக்கிறது..அப்படி வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள்
·      
         அதற்காக படம் வேஸ்ட், மொக்கை என்று சொல்லும் அளவுக்கெல்லாம் நான் கல்நெஞ்சக்காரன் இல்லீங்க..கடைசி அந்த 20 நிமிடங்கள் செம பரபர...சீட்டின் நுனியில் உக்கார வைத்துவிடுகிறார் இயக்குநர்..அதுவும் அருண்விஜய், அஜீத் இடையேயான டயலாக்குகள், மைண்ட் கேம்..அனைத்தும் கிளாஸ் அண்ட் மாஸ்.
·    
         ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் பிண்ணனி இசை, பாடல்கள் நன்றாக உள்ளது..அதுவும் அதாரு உதாரு, மழை வரப்போகுதே..என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்திருக்க, எடுத்தவிதம் அழகு...
·         
        தேவையில்லாமல் அனுஷ்கா, குட்டிப்பாப்பா, திரிஷா, டயலாக்குகள் என்று எடுக்காமல், அருண்விஜய்-அஜீத், துரோகம், போட்டி சேசிங்க் என்று முதல்பாதியிலேயே ஆரம்பித்திருந்தால், படம் எப்படி இருந்திருக்கும்..இன்னொரு காக்க காக்க போல்..அதுவும் ஸ்டைலிஷான இயக்குநரின் கைவண்ணத்தில்..ம்..மிஸ் பண்ணிட்டீங்களே கவுதம்..

இறுதியாக ஒரு மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் போகாமல், இந்தபக்கமும் போகாமல், கோட்டின் மேலேயே பயணித்திருக்கும் கவுதம் மேனன் இஸ் பேக் என்று சொல்ல முடியாதது வருத்தமே..