Sunday 31 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார கொடுமை

மனநிலை தவறியவர்கள் கூட குழந்தை என்றால் அமைதியாகிவிடுவார்கள் என்று கேள்விபட்டிடுக்கிறேன். ஆனால் கோவையில் நடந்த சம்பவத்தை நினைத்து நெஞ்சு பதறுகிறது. ஒரு நாதாரி இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான். பெற்றவர்கள் மனம் என்ன கஷ்டப்பட்டிருக்கும். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற ஆட்களுக்கெல்லாம் தூக்கு தண்டனை எல்லாம் பத்தாது. அரபுநாடுகளில் பண்ணுவது போல, ரோட்டில் ஓடவிட்டு கல்லால் அடித்து சாகடிக்கவேண்டும். அய்யோ, மனிதஉரிமை என்று யாராவது பேசட்டும்..இருக்கு அவிங்களுக்கு..

இந்த வார பதிவுலகம்

வாரவாரம் பதிவுலக செய்திகள் – வழங்குவது அவியிங்க ராசா.

போனவாரம் பதிவர் ஒருவர் பற்றிய கிண்டலான பதிவால் சூடாகிப்போன பதிவுலகம், இந்த வார சற்று மந்தமாகவே தொடங்கியது. யார் என்ன சண்டை போடுவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிந்தவேளையில், ஆபத்பாந்தவனாக..சாரி..ஆபத்பாத்தவனாக..அய்யோ, ஒருதடவையாவது எலக்கியதரமா எழதணும் நினைச்சா வருதா பாரு..ஓகே..பதிவர் ஒருவர், மற்றொரு பதிவரின் திருமணத்திற்கு சென்றதை பதிவாக போட, அதில் அனானி ஒருவரின் கமெண்டால் பற்றி கொண்டது. இரு பக்கமும் சூடான விவாதங்கள் பரிமாறப்பட லேப்டாப்பும் சூடாகிப்போனது. புதன், வியாழக்கிழமைகளில் கனத்த இடியுடன் கூடிய கமெண்டுகளும், கேலிகளும் தாக்கி, வானிலை இன்னும் மோசமானது. இறுதியாக மேற்கு பக்கம் மையம் கொண்ட புயல், இப்போதைக்கு நமீதா படம் பார்க்க போயிருக்கிறது, அது திசை தடுமாறி அடுத்த வாரங்களுக்கு பதிவுலகத்தை தாக்கும் வாய்ப்பு உள்ளதால், அனைவரும் இப்போதே அனானிமஸ் ஐ.டிகளும், கெட்டவார்த்தை கமெண்டுகளும் எழுதி ரெடியாக வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். விளம்பர இடைவேளைக்கு அப்பால நிகழ்ச்சி மீண்டும் தொடரும்..

(பதிவுலகம்…இந்த வாரம்…”அடிடா அவனை..குத்துடா..” சொல்லுகிறார், பதிவர் கும்மாங்குத்து…ஆக்சன் காட்சிகள் நிறைந்த உலகம்..சேர்ந்துவிட்டீர்களா..பதிவுலகம்..”கலக்கல்ணா..உங்க பதிவு பார்த்துத்துதான் எங்க வீட்டுல சோறே பொங்குச்சு..இதுவரைக்கும் கேப்மாறியா இருந்த என்னை கொலைகாரனாக மாத்தியிருக்கு உங்க பதிவு..பதிவுலகத்தை விட்டு போயிராதிங்க..நாங்க ஊரோட தற்கொலை பண்ணிக்குவோம்..” என்று செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த உலகம்..சேர்ந்துவிட்டீர்களாஆஆஆஆ பதிவுலகம்..”யோவ் கல்யாண மண்டபத்துல ஏன்யா ஆண்கள் கக்கூஸ்ன்னு எழுதியிருக்கிற இடத்துல பெயிண்ட் போயிருக்கு.. பதில் சொல்லாம என்னயா பதிவு எழுதுற..” என்று சரமாரியான கேள்விகள் நிறைந்த உலகம்..பதிவுலகம்..சேர்ந்துவிட்டீர்களாஆஆஆஆஆ)

இப்போது நேயர் ஒருவர் அவிங்க ராசாவிடம் ஒருகேள்வி கேட்க விரும்புகிறார்.

நேயர் : மிஸ்டர் சொரிங்க(நன்றி ஒரு அனானி நண்பர்)..சாரி..அவிங்க ராசா..நீங்கள் என்ன தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..

அவிங்க ராசா : எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன்

இந்த வார படம்

வழக்கம்போல இரண்டு படங்கள். ஒன்று “தி ரெக்ரியூட்(The recruit) பாரில் வேலை செய்யும் ஹீரோ “காலின் பாரெல்”லுக்கு தேடி வந்து அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வில் வேலை சேர வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பு கொடுப்பவர், சி.ஐ.ஏ வின் பயற்சிகாலத் தலைவர் “அல் பாசினோ..” சி.ஐ.ஏவில் நடக்கும் பயிற்சி கால கெடுபிடிகளில் தாக்குபிடிக்கமுடியாமல் வெளியேற எல்லாம் ஒரு டிராமா என்று போக்கிரி, காக்கிசட்டை எபெக்ட் கொடுக்கிறார்கள். கிளைமாக்ஸ் நடக்கும் திடிர் திருப்பத்தில் அதிர்ந்து நம்மை அறியாமல் கைதட்டுகிறோம். சி.டி கிடைத்தால் பாருங்கள்.

அடுத்தது “டவுட்பயர்” படப்புகழ் எடி மர்பியின் “இமேஜின் தேட்”(imagine that) என்ற நகைச்சுவை படம். ஷேர் மார்க்கெட் கம்பெனியில் வேலை பார்க்கும் எடி.மர்பி வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளால் பின்னடைகிறார். எப்போதும் ஒரு சிறிய துண்டை போர்த்திக் கொண்டு கார்ட்டுன் கேரக்டர்கள் தன்னோடு பேசுவதாக நினைக்கும் தன் மகளை பார்க்கும்போது அவருக்கு கடுப்பாக வருகிறது. ஒருவேளை மனநிலை போயிருக்குமோ என்று. ஒருகட்டத்தில் நொடித்துப்போக, அவருடைய மகள் மற்றும் கார்ட்டுன் கேரக்டர்களின் உதவியானல் எப்படி முன்னேறுகிறார் என்பது கதை. இப்படி ஒரு கிரியேட்டிவான கதைக்கே கதாசிரியருக்கு ஒரு சல்யூட். நம்ம ஊரு டைரக்டர்களை ஏன் பாண்டி பஜாரின் பக்கம் அதிகம் பார்க்க முடிகிறது என்று தெரிய வருகிறது. எடி மர்பி நடிப்பு பற்றி சொல்லவேண்டுமானால், விவேக் சொல்வது போல் “சூரியனுக்கே டார்ச் அடிப்பது” மாதிரி..

இந்த வார பதிவு

சில நல்ல பதிவுகளைப் பார்க்கும்போது, அப்படியே செய்தித்தாள் படிப்பது போல இருக்கும். அந்த நேரேஷன் அப்படியே நம்மை இழுத்துச்செல்லும். அப்படி படித்த “தேவியர் இல்லம்” எழுதிய இந்த பதிவு

http://deviyar-illam.blogspot.com/

இந்த வார பாடல்

இந்த பாடல் எப்படி ஹிட் ஆகவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டேன். உயிரை ஏதோ பண்ணுதுங்க..நீங்களும் கேளுங்களேன்.

படம் : குளிர் 100 டிகிரி

http://www.youtube.com/watch?v=Qe-X7Awb1e8&feature=related

இந்த வார பொன்மொழி(மாதிரி)

எங்கேயோ கேட்டது. யார் எழுதியது என்று தெரியவில்லை.

காதலிகள்..

சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..

பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..

(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)

Wednesday 27 October, 2010

ங்கொய்யாலே…அப்படி என்னதான்யா பேசுறாயிங்க

சமீபத்தில் ஒரு இளம்பெண்ணுடன் காரில் செல்லும் அனுபவம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இப்போதுதான் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்திரிப்பார் போலும். காரில் அவரை ஒரு இடத்தில் டிராப் செய்யவேண்டிய சூழ்நிலை. கிளம்புவதற்கு முன்பு பெர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ணிக்க கண்ணாடியை முடிந்த வரை முறைப்போம் என்று சென்றபோது சொல்லி வைத்தாற் போல் மனைவி குறுக்கே நின்றாள்.

“எங்கிட்டு போறீங்க..”

“இல்ல..தலை சீவிக்கலாமுன்னு..”

“எப்போதும் வெளியே போறப்ப சீவ மாட்டிங்களே..இப்ப என்ன புதுசா”

“ஹே..சீ..சீ..தலை கொஞ்சம் குலைஞ்ச மாதிரி ஒரு பீலிங்க்”

“கிளம்புங்க..நல்லாதான் இருக்கும்..”

“அடியே..பார்க்குறதுக்கு பரதேசி மாதிரி இருக்கேண்டி..”

“நீங்க சீவுனாலும் அப்படித்தான் இருப்பீங்க..கிளம்புங்க..”

“சரி..கொஞ்சம் பவுடரு..”

“அடுப்பாங்கறையில சாம்பல் இருக்கும். வேணுமுன்னா பூசிக்குங்க..”

“அய்யோ..வேண்டாம்..தலை குலைஞ்சு போயிருக்கு..”

“இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வைச்சா, உங்க வாழ்க்கை குலைஞ்சு போயிரும் பரவாயில்லையா..”

இதுக்கு மேலே போனா, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் நடையை கட்டினேன். என்னைக்கும் என்னிடம் “போயிட்டு வாங்க” என்று சொல்லும் வூட்டுக்காரி அன்னைக்கு அந்த பொண்ணிடம் “பத்திரமா போயிட்டு வாப்பா” என்று சொன்னாள். அதோடு இல்லாமல் வேணுமென்றே..”ஏங்க..போன மாசம் தான உங்களுக்கு 32 வது பொறந்தநாள்” என்று சொல்லி ஹிண்ட்ஸ் கொடுத்தாள். எனக்கு வந்த கடுப்பில் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, அந்த பெண் பயந்து போனாள்..

“அய்யோ..கொஞ்சம் ஸ்லோவாவே டிரைவ் பண்ணுங்க..”

“ஹி..ஹி..இதெல்லாம் நமக்கு சர்வசாதரணம்..எப்போதும் 80, 90 மைல்தான் போறது..இன்னைக்கு நீங்க பயப்படுவீங்களேன்னுதான் ஜஸ்ட் 70”

சிரித்தாள். சைடு மிரர் வழியாக பார்த்தேன். என் வூட்டுக்காரி முறைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. சரி, இன்றைக்கு வெளியிலேயே சாப்பிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்..

சரி பயபுள்ளைகிட்டு பேச்சு கொடுப்போம் என்று ஆரம்பித்தேன்..

“உங்க பேரு என்ன..”

திடிரென்று “போடா, போடா புண்ணாக்கு” என்று குரல்கேட்க பயந்து போனேன். அவள் மொபைல் போனில் ரிங்க்டோனாம்..நல்லாதான்யா வைச்சிருக்காயிங்க.. அவள் போனில் பேச ஆரம்பித்தாள்..

“ஏ..இட்ஸ் மீயா..ஹவ் ஆர் யூ..”

“-------------“(எதிர்முனை)

“ப்ச்..ஏன்பா போனே பேசலை.. நீ கடைசியா போன் பேசி ரெண்டு மணிநேரம் ஆகுது தெரியுமா..”

“------------“

(ஏர்டெல் ஏன் லாபத்துல ஓடாது) – என் மனசாட்சி

“கமான் யா..இட்ஸ் கிரேஸி..”

“-----------“

(யாருங்க..எதிர்முனையில கிரேஸி மோகனா) - என் மனசாட்சி

“ம்..நீ சொல்லு..”

“--------------“

(எவனாவது சொல்லித் தொலைங்கடா..) – என் மனசாட்சி

“சாப்பிட்ட்யா..”

:--------------“

(ரொம்ப முக்கியம்) – என் மனசாட்சி

“கம் ஆன் விஷால்..”

“------------------“

(டே விஷாலு..இன்னைக்கு நீதான் ஊறுகாயா..) – என் மனசாட்சி

“ம்..அப்புறம்... என்ன பேசுறது.”

“------------------“

(அடிப்பாவி..அது தெரியாம இம்புட்டு நேரமா பேசிக்கிட்டு இருக்கீங்களா..) – என் மனசாட்சி

“சொல்லுடா..”

“-----------------“

(ஜொள்ளுடா ன்னு இருக்கணும்..) – என் மனசாட்சி

“நீதான பேசுன..நீதான் சொல்லணும்..”

“-----------------------“

எனக்கு வந்த கொலைவெறியில் ஆக்சிலேட்டரை மிதித்தேன்..செருப்பை கழட்டி என்னையே அடித்து கொள்ளலாம் என்றால், அந்த காலில்தான் பிரேக்கை மிதித்து கொண்டிருந்தேன்.. அவள் தொடர்ந்தாள்..

“ம்..ஒரு இட்லி, கொஞ்சம் ப்ரூட்ஸ்,,”

“-------“

(பிரேக்பாஸ்டாமாம்..) எனக்கு கொலைவெறி உச்சிக்கு சென்றது.

“நோடா,.கம் ஆன்..யூ நோ வேர் ஐ ஆம் பிரம்..”

“--------------“

(இறங்கியவுடனே அவள் அடுத்த முனையில் பேசும் விஷாலை போட்டுதள்ள முடிவெடுத்தேன்..”

“கம் ஆன் டா..விஷால்.. மை நேடிவ் இஸ் நாட் சென்னை..”

“---------------“

“ஐ. ஆம் நியர் டூ மடுரை..”

“-----------------“

(மதுரையாமாம்..இங்கிலீபீசு..) கூர்ந்து கவனித்தேன்

“ஆக்சுவலி..இட் இஸ் 30. கிலோமீட்டர் அவே பிரம் மடுரை. தேட்ஸ் கால்டு குட்லாடம்பட்டி..”


(அடிப்பாவி..குட்லாடம்பட்டிக்காரியா நீயி..எனக்கு வந்த கடுப்பில் பின்னாடி திரும்பி கேட்டே விட்டேன்..)

“எக்ஸ்கீயூஸ்மி..நீங்கதான் வாடிப்பட்டில ரயில்வே கேட்டு போடுறப்ப வெள்ளரிக்காய் விக்குறதா..”

“நோ..நோ..யூ ஆர் ஜோக்கிங்க்”

(அடிப்பாவி..எம்புட்டு கடுப்புல சீரியாஸா கேக்குறேன். அதுக்கும் கோல் போடுறாளே..)

அதுக்கப்புறம் ஒரு வார்த்தை பேசலையே..சீயின்னு ஆயிடுத்து. பேசாம வண்டிய ஓட்டுனேன். அவள் விடாமல் போனில் பேசிக் கொண்டே இருக்க, நான் மதியானம் வீட்டில் நடக்கப் போகும் கலவரம் பற்றி யோசிக்க, பயமாக இருந்தது. அவள் வரவேண்டிய ஸ்டாப் வர இன்னும் அவள் போன் பேச்சை நிறுத்தவில்லை. இறங்கியவுடனே நடந்து சென்றவள், போன வேகத்தில் ஏதோ மறந்து போன மாதிரி திரும்பி வந்தாள். டிரைவர் சீட்டு அருகில் பாதகத்தி வந்து சொல்லுறா..

“தேங்க்யூ அங்கிள்..”


Sunday 24 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார சண்டை

பதிவுலகம் எப்போதுமே ஹாட். எப்போதும், ஏதாவது ஒரு சண்டை இருந்து கொண்டே இருந்து, தன் தனித்தன்மையை இழக்காமல் இருக்கும். அப்படியே சென்ற வாரமும் இருந்தது.

பதிவர் ஜாக்கிசேகரை கிண்டல் பண்ணி, இன்னொரு பதிவர் எழுதியதால், சண்டைத் தீ பற்றிக் கொள்ள சுடசுட செய்தியாகிப் போனது. நீ யார் பக்கம் என்று கேட்டால், நான் கொல்லைப் பக்கம் என்று சொல்லுவேன். ஏனென்றால் அங்குதானே கொய்யாப்பழம் கிடைக்கும்.

இந்த வார விவாதம்

என்.டி.டிவியில் சுதாங்கன், ஞானி, ஸ்ரீதர், சின்மயி கலந்து கொண்ட எந்திரன் விவாதம் காணநேர்ந்தது. தோற்கடிக்கபடவே முடியாத நபர் ஞானி என்று தோன்றியது. எந்த ஒரு டாபிக் கொடுத்தாலும், ஆணித்தரமாகவும், சிறப்பாகவும் விவாதம் செய்யக்கூடியவர் ஞானி என்று திரும்பவும் நீரூபணமானது. அவர் சொன்ன எல்லா பாயிண்டுகளுக்கும் பதிலளிக்க முடியாமல் சின்மயி முகம்போன போக்கை பார்க்கவேண்டுமே. கடுகு தாளித்தாற்போல. சின்மயின் கருத்துகள் எல்லாம் அமெச்சூர்த்தனமாகவும், வடிவேலு பாணியில் சொல்லப்போனால் சின்னப்புள்ளைத்தனமாகவும் இருந்தது. அரங்கு முழுக்க ஒரு பக்கம் சேர்ந்த பார்வையாளர்களாவே நிரப்பப்பட்டிருந்தனர். சின்மயி ஹச்சென்று தும்மினாலும் “ஆஹா..தலைவர் மாதிரி தும்முறாயா..” என்று கைதட்டுவார்கள் போலும். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தொகுப்பாளரும், ரசிகர் மன்ற தலைவரைப் போல நடந்து கொண்டதும், எரிச்சலை தந்தது. கடைசியாக விவாதத்தில் ஜெயித்தது சின்மயி தரப்பினர் என்று சொன்னபோது சிரிப்பாக இருந்தது

இந்த வார காமெடி

நடிகை ராதிகா உண்மையிலேயே அப்பாவியா, அல்லது அப்பாவி மாதிரியா என்று தெரியவில்லை. மேடையில் பேசத்தெரியாத நபர்களில், இதுவரை, மனோரமா, ரஜினிகாந்த் என்று நினைத்திருந்தேன், இப்போது ராதிகாவையும் சேர்த்து கொள்ளலாம். நார்மலாக தமிழில் சிலவார்த்தைகளை பேசும்போது பார்த்து பேசவேண்டியதுள்ளது. டபுள் மீனிங்க்கெல்லாம் தாண்டி, டிரிபிள் மீனிங்காகி சங்கடத்துக்குள் உள்ளாக்கும் நிலை உள்ளது. விஜய் டி.வி கொண்டாடிய கமல் விழாவில் இப்படித்தான் பேசி, கமல் நெளியவேண்டிய சூழ்நிலை. இப்போது இயக்குநர் சங்கர் விழாவில் அவருடைய பேச்சில், பாரதிராஜா, சரத்குமார் நெளிந்த காமெடியைப் படிக்க அண்ணன் உண்மைத்தமிழனின் இந்த பதிவை கிளிக்கவும்

இந்த வார படம்

திரைப்படத்திற்கு கதை சொல்லும் பாங்கு மிகவும் முக்கியம். ஆனால் ஒரு படம் முழுவதையே ஹேண்டி கேமிரா கோணத்தில் சொல்ல முடியுமா..சொல்லியிருக்கிறார்கள் “கிளாவர் பீல்ட்” என்ற திரைப்படத்தில். நண்பன் பதவிஉயர்வு விழாவை படம்பிடிக்க ஒருவர் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது. கேமிரா வழியாகவே நாமும் பார்ப்பது போன்ற உணர்வு. நன்றாக செல்லும் விழாவில், திடிரென்று கட்டடம் நடுங்க, எல்லோடும் வெளியே பார்க்கிறார்கள். ஒரு பெரிய ஏலியன் மற்றும் சிஷ்யபிள்ளைகளான சின்ன ஏலியன்கள், நியூயார்க் நகரத்தையே அழிக்க தொடங்க, உயிர்பிழைக்க ஓடுகிறார்கள். ஓடும்போது, சுதந்திர தேவியின் சிலையும், ப்ரூக்ளின் பாலமும் ஒருநிமிடத்தில் நொறுங்குவது திக். நம்ம பாணியில் சொல்லவேண்டுமானால், “ங்கொய்யாலே இது படம்டா..”

இந்த வார பாடல்

மைனா படத்தில் சில பாடல்களை கேட்க நேர்ந்தது. அதில் ஒரு சூப்பரான துள்ளலிசை பாடல் ஒன்று “ஜிங் சிக்கா” என்ற பாடலை கேட்டவுடன் எழுந்து ஒரு குத்தாட்டம் போடத் தோன்றுகிறது. என் காரில் வந்த அமெரிக்கர் ஒருவர் “ஓ வாவ்..வாட் இஸ் “சிங்க் சிக்கா” என்று கேட்ட போது என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் “இட்ஸ் எ கைண்ட் ஆப் புட் அயிட்டம்” என்று சொல்ல ஒரு மாதிரியாக பார்த்தார்

இந்த வார ஜோக்(18+)

பொதுவாக எனக்கு நிறைய ஏஜோக் தெரிந்திருந்தாலும் எழுதுவதில்லை. ஆனால் நண்பர் ஒருவர், ஒரு டீசண்டான ஏஜோக் எழுதுமாறு அன்பு கட்டளை இட்டதால் இந்த ஜோக். பிடிக்கவில்லையென்றால் மன்னிக்கவும்

கொடைக்கானலுக்கு ஒரு தம்பதியினர், தங்கள் 3 வயது குழந்தையுடன் டூர் சென்றனர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் ஹனிமூன் வந்த இடமும் அதுவே. அதனால் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போதும் அவர்களுக்கு ஹனிமூன் வந்த ஞாபகம் வரவே கண்வன் மனைவியைப் பார்த்து “ஏ..இந்த இடம் ஞாபகம் இருக்கா..நாம முதல்நாள் வந்தோமே” என குழந்தை “அப்பா..அப்ப நான் எங்கப்பா இருந்தேன்” என்றான், கண்வனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அடுத்த இடத்தைப் பற்றியும் கண்வன் சொல்ல “அப்பா..அப்ப நான் எங்கப்பா இருந்தேன்” என்று குழந்தை கேட்க கணவன் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தை தொணதொணப்பு ஒரு கட்டத்தில் அதிகமாக, கணவன் சொன்னான்.

“கொடைக்கானல் வர்றப்ப எங்கிட்ட இருந்தே. கொடைக்கானல் விட்டு கிளம்புறப்ப அம்மாகிட்ட இருந்த..”

(ஏண்ணே..ஏஜோக்கெல்லாம் எழுதுறேன்..நான் பிரபலபதிவராயிட்டன்ல..)))

Thursday 21 October, 2010

எந்தலைவனைப் பத்தி தப்பாவா பேசுற…

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த எனக்கு , எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணியே பழகிப்போய்இருந்தது. கூட்டத்தில் கல்லெடுத்து அடிக்கிறானா, எடு ஓட்டம், டிராபிக் கான்ஸ்டபிள் பிடித்துவிட்டாரா, கொடு 50 ரூபாய், வருகிற மாதத்தில் ஒருதடவை ரெஸ்டாரெண்டில் சாப்பாடு கட்பண்ணினால் டாலி ஆகிவிடும். பஸ்ஸில் யாராவது தகராறு பண்ணுகிறானா, கீப் கொயட். எதற்கு அவனிடத்தில் சண்டை போட்டு பிரச்சனையாகி சட்டையை கிழித்து கொள்ள.

எல்லாமே இப்படியே பழகிப்போய்விட்டது. ஆனாலும் சிலநேரங்களில் என்னை அறியாமல் வந்த சமூககோபம் கூட வயிற்று பசியை நினைக்கும்போது பஞ்சாய் பறந்து போய்விட்டது. தெருவில் யாராவது குடித்துவிட்டு தகராறு பண்ணினால் எனக்கென்ன, என்னை அடிக்காதவரை. அப்படியே அடித்தாலும் என்ன, வாங்கிட்டுதான் போவோமே, குடியா முழுகிவிடும். சிலநேரங்களில் என்மேலே எனக்கு வெறுப்பு வந்தது. ஆனால் என்னதான் செய்வது, இப்படிதான் வாழவேண்டியிருந்தது.., இந்த உலகத்தில் இன்னும் உயிரோடு இருப்பதற்கு.

அப்படி இருந்த காலங்களில்தான், சினிமா படங்கள் எனக்கு சின்ன ஆறுதலை தந்தது. படத்தில் ஹீரோ, சமுகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக்கேட்டபோது எனக்கும் பொங்கிகொண்டு வந்தது. தெருவில் அடாவடியாய் வசூல் செய்யும் வில்லனை ஹூரோ புரட்டி எடுத்தபொது என்னை அந்த ஹீரோவாக கற்பனை பண்ணிகொண்டு மகிழ்ந்தேன். அபலை பெண்ணை கற்பழிக்க வரும் வில்லனில் மூக்கில் ஹூரோ குத்து விடும்போது என்னை அறியாமலே என் விரல்கள் மடங்கியது. அந்த காலங்களில் தான் நானும் என் நண்பனும் ஒரு நடிகரின் படங்களைப் பார்ப்பதில் கவனம் செலுத்தினோம். என்ன ஒரு வசீகரம், என்ன ஒரு நடை, என்ன ஒரு ஆதிக்கம். மயங்கிபோனோம். அவருடைய படங்கள் ரீலீஸா, என்ன கிளாஸ் இருந்தாலும் பள்ளிக்கூடம் கட். தலைவரை விட படிப்பு முக்கியமில்லை என்ற கருத்து மெல்ல என் மனத்தில் ஆழப்பதிந்தது.

மாரிமுத்து கடையில் டீ குடிக்கிறோமோ இல்லையோ, நடிகருடைய படங்களை சேகரிக்க சென்றோம். தினமும் அவர் வாங்கும் தினசரிகளில் அவருடைய படங்கள் கவனமாக கட் செய்யப்பட்டு எங்கள் வீடுகளை அலங்கரித்தது. நான் மிடில்கிளாஸ் மனப்பான்மையை மறந்த தருணங்கள் , தலைவனைப் பற்றி யாரவது தவறாக பேசியதால் வருபவை . படு லோக்கலாகி(ஜாக்கிசேகர் மன்னிக்க..) போனேன். யாராவது தலைவனைப் பற்றி தவறாக பேசினால் முதலில் அடித்துவிட்டுதான் பேச்சு. அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த 10 நாள் காசு முதல்நாள் முதல் ஷோவில் காலியானது. காசுபோனால் என்ன..தலைவன் படம் பார்த்தாச்சுல்ல..

அப்போதுதான் எனக்கு அவன் அறிமுகமானான். கல்லூரியில் புதிதாக சேர்ந்திருந்தான். பெயர் மார்க்ஸ். பெயரைக் கேட்டவுடனே எனக்கு பிடிக்கவில்லை. அது என்ன மார்க்ஸ். அவனைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. பெயருக்கேத்தாற்போலே கம்யூனிசம் பேசினான், குறிப்பாக தலைவனைப் பற்றி. எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நல்லவன் ஒருவன் தலைவனைப் பற்றி பேசினாலே அடிப்பேன். இவன் பேசினால் விடுவேனா..நேராக அவனிடத்தில் சென்று எச்சரித்தேன்…

“மார்க்ஸ்..”

“சொல்லுப்பா..”

“நீ எவனா வேணா இருந்துட்டு போ..ஆனா தலைவனைப் பற்றி எதுவும் தப்பா பேசின..பிச்சுடுவேன்..”

“ஏன்..உண்மையைத்தானே பேசுனேன்..”

“என்னத்த கிழிச்ச…****** மவனே..”

கோபத்தில் முதல்முதலாக எனக்கு கெட்டவார்த்தை வந்தது. அப்பவே எழுந்து அவன் முகத்தில் குத்துவிடலாம் என்று தோன்றியது. அடக்கிகொண்டேன் சூழ்நிலை அறிந்து..

“உனக்கென்னடா தெரியும், தலைவனைப் பத்தி..”

“அவர்மேலே எனக்கென்னடா கோபம். என் கோபமெல்லாம் உன்மேலதாண்டா..”

“***** சாவடிச்சுருவேன்..நாங்க படம் பார்த்தா உனக்கென்னடா..எறியுதா..***** மூடிட்டு போவியா..”

“நல்லா பாரு..யார் வேணாமுன்னு சொன்னா..ஆனால் அப்பன் வெயிலுல்ல தினமும் உழைச்சு சம்பாதிச்ச காசை ஒருநிமிசத்துல காலி பண்ணுறியே, அதனால்தான் கோபம் வருது…”

“மவனே..என் அப்பன் சம்பாதிச்ச காசை நான் என்னவேணாலும் பண்ணுவேன். உனக்கென்ன..”

“ம்..பண்ணு..ஆனா, உன்னைப் பார்த்து உன் நண்பன் பண்ணுறான். அவனைப் பார்த்து அவன் நண்பன் பண்ணுறான். அவனைப் பார்த்து இன்னும் நாலுபேர் பண்ணுறான், இப்படியே பார்த்து பார்த்து நம்ம தலைமுறையே நாசமாப் போயிடும்டா..நாமதான் இப்படி இருக்கோம், அட்லீஸ்ட் அடுத்த தலைமுறையாவது நல்லா வளர்ப்போம்டா..கொஞ்சம் யோசிச்சு பாருடா..”

ம்…ஹூம்..இனிமேல் இவனிடத்தில் பேசி பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்தேன். அடியைப் போட்டால்தான் இனிமேல் தலைவனைப் பத்தி தப்பா பேசமாட்டான் என்று முடிவெடுத்தேன். நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினோம். கல்லூரி முடிந்து அவன் ஒரு சந்து வழியாகத்தான் தினமும் போவான். அங்கு வைத்து அடிபின்னினால் யாருக்கும் கேக்காது என்று முடிவெடுத்தோம். நினைத்தால் போல சரியாக மாட்டினான்..இருக்கிற கோபத்தையெல்லாம் அவனிடம்தான் காட்டினேன். அசுர கோபம் வந்தது. ஒரு சிறிய கட்டை ஒன்று வைத்திருந்தேன். அதை எடுத்து அவன் தலையில் ஒரு அடி..வெறித்தனமாக கத்தினேன்..

“ங்கோத்தா…யாரைப் பத்தி தப்பா பேசுற..”

மனம் முழுவதும் திருப்தியாக இருந்தது. அடித்த அடியில் கீழே விழுந்து விட்டான். பெருமிதமாக இருந்து. காலரை தூக்கி விட்டுக்கொண்டேன். இவனைப் பார்த்தாவது அடுத்தவன் பேசமாட்டானில்ல….நண்பன் தடுத்தான்..

"டே…அவன் தலையில் இருந்து ரத்தம் வருதுடா..”

“விடுடா..நாய் சாகட்டும்..”

“டே..வேணான்டா..வா, வீட்டுல கொண்டாவது விட்டு விட்டு வந்துவோம்..”

திடிரென்று எனக்கு மிடில்கிளாஸ் மனப்பான்மை விழித்துக் கொண்டது. ஆஹா..பிரச்சனையாயிருமோ..பிரின்ஸ்பாலிடம் கம்ப்ளெயின் கொடுத்தா..பதறிப்போனேன். அவசரமாக விழுந்து கிடக்கும் அவனிடம் சென்றேன். கண்முன் தெரியாமல் அடித்திருந்தோம். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.. கூலிவேலை பார்க்கும் அவன் அப்பா தீபாவளிக்கு எடுத்து கொடுத்த ஒரே சட்டை பத்து இடங்களில் கிழிந்திருந்தது. அவன் மற்ற சட்டைகள் போட்டு இதுவரை நான் பார்த்ததில்லை. அவனுடைய உதடு கிழிந்து ரத்தம் வந்தது. தலையிலும் நல்ல அடி..முதன்முதலாக அவன்மேல் எனக்கு பரிதாபம் வந்தது..

“டே..எந்திரு..எந்திரு..ஏன் இப்படி பேசணும்..இப்படியெல்லாம் அடி வாங்கணும்..தேவையா..”

அவனை தூக்கினோம். அவனால் நிற்க முடியவில்லை. என்மேல் சாய்ந்து கொண்டான். என் தோள்மேல் கைபோட்டு கொண்டான். அவனை அப்படியே மெதுவாக நடத்திக் கொண்டு போனேன். முதலாக என்மேல் எனக்கு கோபம் வந்தது. சே..என்ன ஒரு கோபம். என்ன ஒரு அடக்கமாட்டாத கோபம். தப்பு செய்துவிட்டேன். அவன் என்னிடத்தில் எதுவும் பேசவில்லை.

அவன் வீடு வந்தது. வீட்டில் யாரும் இல்லை. அவனை விட்டுவிட்டு திரும்பும்போது, அடக்க மாட்டாமல் அவனிடம் கேட்டேன்..

“இனிமேல் என் தலைவனைப் பத்தி ஏதாவது பேசுவியா..”

அந்த பொழுதும் அவன் சிரித்தான். இன்னும் வாயில் ரத்தம் ஒழுகிக் கொண்டு இருந்தது..அவன் கண்களைப் பார்த்தேன். அடி வாங்கின வலி அவன் கண்களிடம் தெரிந்தது.வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே அந்த வலியிலும் அவன் சொன்னான்..

“பேசுவேன்..உனக்காக, எனக்காக..உன் குழந்தைகளுக்காக..என் குழந்தைகளுக்காக…இன்னும் சத்தமா…”

காலை விந்தி, விந்தி உள்ளே சென்றான். முதல்முதலாக யாரோ என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது..

Wednesday 20 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார ஆச்சர்யம்

கலைஞர் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார், மதுரையில் அதிமுக கூட்டிய போராட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கும் என்று. அவ்வளவுதான், இனிமேல் அதிமுக என்று இருந்த நிலையை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்திருக்கிறது. என்னதான் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை என்று சப்பைக் கட்டு கட்டினாலும், இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 10 ஓட்டு கொண்டுவந்தால், தி.மு.கவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். கலைஞர் சுதாரிக்கவேண்டிய நேரமிது.

ஆச்சர்யம் என்னவென்றால், அழகிரி கோட்டையான மதுரையில் சொல்லிவைத்து அடித்ததுதான். ஏண்ணே..இப்படியும், இங்கிட்டு அமெரிக்காவிலயும், ஒரு மாநாடு போட்டாதான் என்னவாம். நாங்களும், தினமும் ஆபிஸ்ஸுக்கு போய் போரடிக்குதுல்ல

இந்த வார கொடுமை

நான் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் மேல் கன்னியாஸ்திரி எழுப்பிய பாலியல் புகார் கண்டு அதிர்ந்து போனேன். ஒழுக்கம், எளிமை, தூய்மை, இது போன்ற பண்புகள் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில்தான் இன்றைய பாதிரியார்கள் உள்ளனர் என்று சொன்னால் சரியாக இருக்கும். படத்தில் காண்பிப்பது போல், நீளமான அங்கி ஒன்றை போட்டு கொண்டு எப்போதும் சிரித்த முகத்துடன், “பிரைஸ் த லார்ட் சன்” என்று சொல்லும் பாதிரியார்களை இனிமேல் கனவில்தான் பார்க்கமுடியும் போலிருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை, சாதி அரசியல், பாலியல் புகார்கள், இன்னும் பல என்று சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதும் பாதிரியார்களை மரியாதையுடன் பார்க்கும் கிறிஸ்தவ சமூகம், இனிமேல் அப்படி பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை

இந்த வார மாற்றம்

எனக்கு கிடைக்கும் நாலு ஓட்டுகளை பற்றி நான் கிண்டலாக எழுதிய கடந்த பதிவில் “நீ முதல்ல ஓட்டு போட்டியா” என்று நண்பர் ஒருவர் எழுதியது என் சிந்தனையை கிளறியது(கேசரி இல்லைண்ணே..). இதுவரை முடிந்தவரை தமிழிஸில் ஓட்டு போட்டுவந்த நான், தமிழ்மணத்தில் ஓட்டு போட ஆரம்பித்திருக்கிறேன், நல்ல பதிவுகளை படிக்கும்போது. என்னமோ தெரியவில்லை, இப்போதெல்லாம் தமிழ்மணம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம், சட்னி இல்லாத இட்லி போல் இருக்கிறது..

இந்த வார பாடல்

இந்த பாடலை கண்டிப்பாக யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள். லௌடு ஸ்பீக்கரை கண்டுபிடிப்பதற்கு காரணமான நடிகர் டாகடர் ராஜசேகரின் தம்பி நடித்த “கோல்மால்” என்ற ஒரு படத்தின் “நீ பேசும்” என்று ஒரு பாடல், தற்போது கேட்க நேர்ந்தது. பாடலின் நடுவில் ஹீரோ, ஹீரோயினுக்கும் தரும் பிரெஞ்ச் டைப் முத்தத்தை பார்க்க மாட்டாமல் பொறாமை காரணமாக கண்ணை மூடிக்கொண்டாலும், ஏதோ பாடல் சுகமாகத்தான் இருந்தது

இந்த வார பதிவு

படிக்கும்போதே திக்கென்று இருக்கிறது ஆட்டோ சங்கர் வாக்குமூலத்தை படிக்கும்போது. கீழ்கண்ட இந்த பதிவு கடஅண்ட் பேஸ்டாக இருந்தாலும், திக்கென்று இருக்கிறது

http://ragariz.blogspot.com/2010/10/blog-post_19.html

இந்த வார படம்

கடந்த வாரம் இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது. “செக்ஸ் அண்ட் சிட்டி” என்ற ஒரு படம் நான்கு நியூயார்க் பெண்களின் வாழ்க்கை பற்றியது. சிலநேரம் அமெச்சூர்தனமாக இருந்தாலும், தனது திருமணத்திற்காக அலங்காரம் பண்ணிக் கொண்டு அலப்பறையாக மேரேஜ் ஹாலுக்கு வந்து மாப்பிள்ளை ஓடிவிட்டால், ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு சீன்(அது இல்லைண்ணே..) சூப்பர். இன்னும் மனதில் நிற்கிறது. நடிகை ஜெசிகா பார்கர் என்று நினைக்கிறேன்..ம்ம்ம்..மூச்சுவிடத்தான் முடிகிறது..ஹி..ஹி..

அடுத்த படம், ஜிம் கேரியின் அலட்டலான “லையர், லையர்..” எப்போதும் பொய் சொல்லியே வக்கில் வாழ்க்கை நடத்தும் லையாரான லாயே ஜிம்கேரி, ஒருநாள் முழுதும் உண்மைதான் பேசவேண்டும் என்ற நிலைவந்தால் என்ன ஆகும் என்பதை வயிறு வலிக்க வலிக்க சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, அரைகுறையாக டிரெஸ் பண்ணி கொண்டு லிப்டில் வரும் இளம்பெண்ணிடம், பொய்பேசமுடியாமல், உண்மைபேசும் ஜிம்கெரியின் அந்த டயலாக்…ச்சீ..ச்சீ….))))

Friday 15 October, 2010

பதிவுலக சண்டை

கோவாலு எப்ப பார்த்தாலும் சுடுதண்ணிய காலுல ஊத்துன மாதிரியே இருப்பாண்ணே. அன்னைக்கு ரொம்ப ஆவேசமா வந்தான். அவன் நார்மலா வந்தாவே நான் கொல்லப்புறம் போயிருவேன். இதுல கோவமா வந்தா, ஓடியே போயிருவேன். அன்னைக்கு ஓடுறதுக்கு முயற்சி பண்ண, தடுமாறி கீழே விழுந்ததால மாட்டிகிட்டேன்.

“ராசா..உனக்கு சமூக பொறுப்புணர்ச்சியே இல்லையா..”

“ஏண்டா கோவாலு..ராஜபக்சே காமன்வெல்த்துக்கு வர்றத எதிர்த்து எதுவும் இங்க ஸ்ட்ரைக் பண்ணனுமா..”

“போடாங்க..பதிவுலகத்துல என்னமா சண்டை நடந்துக்கிட்டுருக்கு..நீ ஒரு வார்த்தை..”

“நிறுத்து..நீ என்ன சொல்லவர்றேன்னு தெரியுது..”

“என்ன..”

“நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க..சண்டை போடாதிங்க..சமாதானமா போங்கன்னு பம்பாய் பட டயாலாக்கு தானே..”

“ஆமா..எப்படிடா கரெக்டா சொன்ன..”

“பின்ன..நம்மளால அது மட்டும்தானே பண்ணமுடியும்..எப்படியும் என்ன சொன்னாலும் ஒரு பயபுள்ளையும் கேக்க போறதில்லை….அதனால பேசாம இருந்துக்குறது உசிருக்கு பாதுகாப்பு..ஏற்கனவே எந்திரன் பத்தி எழுதின பதிவால, ரெண்டு பேரு மீனம்பாக்கத்துல, கையில கத்தியோட, என் போட்டாவை வைச்சு சுத்திக்கிட்டு இருக்காய்ங்களாம். கேட்ட மாத்திரத்துலயே “அமெரிக்கா என் தாய்நாடு..அமெரிக்க மக்கள் எல்லாரும் என் உடன்பிறந்தவர்கள்” ன்னு வாய் ஆட்டோமேட்டிக்கா உளறுது.. இதுல அறிவுரை வேறயா..”

“சரிடா ராசா..அதுதான் பதிவர் இமெயில் குழுமத்துல இருக்கியே..ஒரு இமெயில் எழுதலாமே..”

“கோவாலு., கடந்த ஒரு மாசமா 2000 மெயில் இந்த சண்டை விசயமா மட்டும் வந்து இருக்கு..அதெல்லாம் இன்னும் படிக்காம இருக்கு. அதை படிச்சு முடிச்சிட்டு கருத்து சொல்றதுக்குள்ள, சண்டை போட்டவயிங்க சமாதனம் ஆகி பதிவர் சந்திப்புல வந்து காபி சாப்பிட்டிருக்குவாயிங்க..எதுக்கு இந்த வேண்டாத வேலை..”

“சரிடா..எதுக்கு அதெல்லாம் படிக்கிற..சும்மா ஒரு புதுமெயில் கிரியேட் பண்ணி..”சண்டை போடாதிங்கப்பா” ன்னு பொதுவா சொன்னா, சூப்பரா இருக்குமுல்ல..”

“எங்கிட்டு..ஒரு மெயில் டைப்பண்றதுக்குள்ள நாலு மெயில் “டே..அடங்குடா..நீதாண்டா..போடாங்கொய்யால..” இப்படின்னு கண்டினியூஸா வந்து இன்டெர்நெட்டையே கன்பியூஸ் பண்ணுது. நான் என்ன மெயில் டைப் பண்றேன்னு எனக்கே மறந்துடுது..”

“அடப்பாவி ராசா..உனக்கு பிரபல பதிவர் ஆகணுமுன்னு ஆசை இருக்கா இல்லையா..”

“ம்..அது வந்து..”

“அப்ப..இடையில புகுந்து யாரையாவது திட்டி குழுமத்துக்கு ஒரு மெயில் அனுப்பு..யாரை திட்டுறதுன்னு கூட சொல்ல வேண்டாம்..உதாரணாம..”யோவ்..டப்பா…ங்கொக்காமக்கா..ஜந்து..” அப்படின்னு கலந்து கட்டி எழுது..நடுநடுவுல “சாவுங்கடா..நாயே..பேயே” ன்னுலாம் சேர்த்துக்கலாம்..”

“கோவாலு.,.உண்மையிலயேயா சொல்லுறா..இப்படியெல்லாம் எழுதுனா நான் பிரபலபதிவர் ஆகிடுவேனா..”

“சான்ஸ் நிறைய இருக்கு,.முதல்ல உன் மெயில பார்க்குறவயிங்க, யாருடா இவன், யாரைத் திட்டுறான்னு, இவன் எங்கிட்டு நடுவுல புகுந்தான்னு மண்டைய பிச்சிக்குருவாயிங்க..அப்புறம் தானா நீயும் ஜோதியில ஐக்கியமாயிரலாம்..”

“பரங்கிமலை ஜோதியா..”

“போடா டுபுக்கு..சரி.மெயில் குழுமத்தால ஏதாவது நல்லது பண்ணிருக்கீங்களா..”

“ஆமா..எம்புட்டு பஞ்சாயத்து பண்ணிருக்கோம்..”ப்ளீஸ்..சண்டை போடாதிங்க..இதோட முடிச்சுக்கலாம்..பதிவுலகம் ஏன் இப்படி ஆகிவிட்டது..நான் வெளியே போறேன்….நீதாண்டா…டே..இந்தா ஸ்கிரீன் சாட்டு..இந்தா பார்..நீதாண்டா அயோக்கியன்..”

கோவாலு தலையை புடிச்சு உக்கார்ந்துட்டாண்ணே..

“ராசா..தலை கிறுகிறுதுன்னு..கொஞ்சம் தண்ணி கொடு..”

பயபுள்ள கலங்கி போயிட்டான்..

“ராசா,,நீ வேணா எந்திரன் பத்தி ஏதாவது தாக்கி..”

“ஏண்டா கோவாலு..அவனவன் கொலைவெறியில இருக்காயிங்க..ஏற்கனவே மொத்தம் நாலு ஓட்டுதான் விழுகுது. அதுலயும் இரண்டு பேரு..”சாரிங்க..கை தெரியாம ஓட்டு பட்டையில பட்டுருச்சுன்னு சொல்லி மெயில் அனுப்புறப்ப அழுகை, அழுகையா, வருது தெரியுமா..”

“ராசா..கடைசியா ஒன்னு கேக்குறேன்..இந்த பதிவுலக சண்டையெல்லாம் எப்ப தீரும்..”

“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”

Sunday 10 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார அறிவிப்பு

பொதுமக்களுக்கு துக்ககரமான ஒரு செய்தி. இனிவரும் காலங்களில் மிக்சர் ஜூஸ் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் தவறாமல் வரும். அதனால் பொதுமக்கள், காலையில் பல்விளக்கிவிட்டு, சுத்தம் பத்தமாக, பக்தியோடு அருந்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் செய்யாமல் அவசரமாக குடிப்பவர்களுக்கு வரும், வயிற்று உபாதைகளுக்கு, கண்டிப்பாக கம்பெனி பொறுப்பேற்று கொள்ளாது என்று ஆணித்தரமாக சொல்லி கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இந்த வார துக்கம்

எஸ்.எஸ் சந்திரன். இவருடைய டைமிங்க் சென்ஸ் யாருக்கும் வராத ஒன்று. டைமிங்காக இவர் அடிக்கும் கமெண்டுகள், சிலநேரம் இரட்டை அர்த்தமாக இருந்தாலும் பலநேரம் சிரிக்க வைத்தது. போரடித்துக் கொண்டிருந்த விஜய் டிவியின் “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியை, தன்னுடைய நகைச்சுவையால் இன்னும் கலகலப்பாக்கியவர். அவருடைய கடைசி நிகழ்ச்சியை பார்க்க சங்கடமாக இருந்தது. திரையுலகத்திற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாக தொடர் இறப்புகள். மாரடைப்புக்கு பகல், இரவு, ஆண், பெண், நல்லவர், கெட்டவர் பார்ப்பதில்லை. ஒருநிமிடத்தில் கனவுகளை மறக்கடித்துவிடுகிறது. நீங்கள் இதுவரை ஜிம்முக்கு செல்லாதவராக இருந்தால், கண்டிப்பாக இனிமேல் செல்ல ஆரம்பியுங்கள். உடம்பு கொஞ்சம் வெயிட் போடுவதாக எண்ண ஆரம்பித்தால், கண்டிப்பாக வாயைக் கட்டுங்கள். அல்லது ஜிம்மிற்க்கு சென்று, நடைபயிற்சி செய்யுங்கள். அப்படியும் முடியவில்லையென்றால், காலையில் பிகர்களை பார்ப்பதற்காகவது பார்க் சென்று நடங்கள். மனது குதூகலமாவதுடன் உடம்பும் சரியாகும். குடிப்பழக்கம் இருந்தால், முடிந்தவரை நிறுத்த முயற்சி செய்யுங்கள். என்னடா பெரிய இவன் மாதிரி அறிவுரை செய்கிறான் என்று எண்ணினாலும் சரி, பரவாயில்லை, படிக்கும் ஒருவர் முயற்சி செய்தால் எனக்கு சந்தோசம். ஏனென்றால் திட்டுக்கள் வாங்கி எனக்கு மறத்து போய் விட்டது..

இந்த வார பாடல்

சாயங்கால வேளைகளில் இரண்டு பாடல்களை கேட்க முடிந்தது. யார் இசையமைப்பாளர் என்று தெரியவில்லை. யாருக்கும் அவ்வளவு பரிட்சயமும் இல்லை. ஆனால் என்னவோ தெரியவில்லை, கேட்டவுடன் ஈர்க்கிறது. இந்த நாளில் மட்டும் நாலு தடவை கேட்டுவிட்டேன். முடிந்தாலும் நீங்களும் கேட்கலாமே..

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்த முதல் படமான தொட்டிஜெயா படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=DLsZ3RPCYV8&feature=related

நடிகர் விக்னேஷ் ஓவர் ஆக்டிங்க் செய்த சூரி படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=rNZcQmfzoYU&p=FC2A427716D4D4D0&playnext=1&index=39

கற்க கசடற படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=TC3QjPkI76c

பாடலில் நடித்த விஜய் தம்பி விக்ராந்தை பார்த்தபோது, என் நண்பன் அடித்த கமெண்ட் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

“என்னடா காலரா வந்த விஜய் மாதிரி இருக்கான்…”

இந்த வார திரைப்படம்

படம் பார்த்தால் ரிலாக்ஸாக இருக்க வேண்டும், அல்லது சிரிக்கவேண்டும், அழவைக்கவேண்டும், அல்லது கடுப்பேற்றாவது வேண்டும், தலையை பிய்த்துக் கொள்ளவைக்கவைத்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் ஒரு படம் பார்த்தேன். படம் பெயர் “தி பாக்ஸ்”. தினமும் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு குடும்பத்திற்கு நள்ளிரவில் ஒரு பார்சல் கிப்டாக வருகிறது. குழம்பி போகிறார்கள். பார்சலை திறந்து பார்த்தால் ஒரு பாக்ஸ் ஒரு சின்ன பட்டனோடு. அடுத்த நாளில் ஒரு பெரியவர் வருகிறார். அவர் இரண்டு ஆப்சன் கொடுக்கிறார், ஒன்று அந்த பாக்ஸை திருப்பி கொடுத்துவிடலாம். அல்லது பட்டனை தட்டினால் இரண்டு நடக்கும், அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் கொடுப்பார், ஆனால் அவருக்கு தெரியாத ஒருவர் அன்று இறப்பார். நீங்கள் என்ன செய்வீர்கள், எவனோ ஒருத்தன் தானே சாகிறான், இருக்கட்டுமே என்று பட்டனை அழுத்துவீர்களா. அழுத்தினால் யாரோ இருத்தர் இறக்கிறார். ஆனால் நாட் என்ன தெரியுமா, இறந்தவரிடம் அதே பாக்ஸ் ஒன்று இருந்திருகிறது. எப்போது உங்கள் சாவு. இப்பொழுது கெஸ் பண்ணுங்கள் பார்ப்போம், முடிந்தால் உங்கள் கெஸ்ஸை கமெண்டுங்களேன்.

இந்த வார பதிவு

இந்த பதிவு இளைஞர்களுக்கு செய்த சமூக சேவையை பாராட்டமல் இருக்கமுடியவில்லை. படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை. சி.பி செந்தில் குமாரின் இந்த பதிவு கலக்கல்.

http://adrasaka.blogspot.com/2010/10/18.html

விசாபக்கங்களின் எந்திரனைப் பற்றிய இந்த பதிவு

http://writervisa.blogspot.com/2010/10/blog-post_1380.html

Thursday 7 October, 2010

ஒரு அமெரிக்கனின் கனவு

“மார்க்..மார்க்..”

சத்தமாக என் காதில் விழுந்தது. இந்த குரலை இவ்வளவு அருகாமையில் கேட்பதற்கு என்ன தவம் செய்திருப்பேன்..

குரல் கொடுத்தவள், ஏஞ்சலா..என் ஆசைக்காதலி. அவளை காதல் செய்ய வைப்பதற்கு என்ன தவம் செய்திருப்பேன். எவ்வளவு முயற்சிகள், கிப்டுகள்..எதற்கும் அவள் அசரவில்லை. அவளிடமிருந்து ஒரே பதில்தான்.

“முதலில் ஒரு வேலை வாங்கி வா..பிறகு பார்க்கலாம்..”

இதோ, என் கையில் அபார்ட்மெண்ட் ஆர்டர். அவளிடம்தான் முதலில் காட்டவேண்டும். எவ்வளவு முயற்சிகள், இந்த வேலை கிடைப்பதற்கு. க்யூவில் நின்று, இன்டெர்வியூக்கள் அட்டெண்ட் செய்து..ப்ச்..வாழ்க்கை இவ்வளவு கஷ்டமானதா..ஆனால், என் எண்ணம் முழுவதும் ஏஞ்சலாதான் ஆக்கிரமித்திந்தாள். குறைந்தது 20 இன்டெர்வியூக்கள். இதோ, இப்போதுதான் வேலை கிடைத்தது. அதுவும் முக்கியமான பேங்கில், கணிப்பொறி வல்லுனராக, காண்டிராக்டர் ஒப்பந்தம்..

அப்படியே என்னை வாரி அணைத்துக் கொண்டாள்..

“ரொம்ப சந்தோசமா இருக்கு மார்க்..எனக்காகவா..”

“ம்..”

அன்று முழுதும், எனக்கு ஸ்ட்ராபெரி சுவைதான். எனக்கு ஸ்ட்ராபெரி பிடிக்காது. ஆனால் ஏனோ அன்று பிடித்திருந்தது. முதலில் அவள் லிப்ஸ்டிக்கை மாற்ற சொல்லவேண்டும். அந்த பேங்க் டவுண்டௌனின் மையப்பகுதியில் இருந்தது. அக்சஸ் கார்டு வாங்கி உள்ளே நுழைந்தவன் அதிர்ந்து போனேன். நான் இருப்பது அமெரிக்காதானா, அல்லது சீனாவா. அல்லது இந்தியாவா...இருக்கை முழுவதும் சீனர்கள் மற்றும் இந்தியர்களே ஆக்கிரமித்திருந்தார்கள். அமெரிக்காவை இந்தியாவிற்கும், சீனாவிற்கும் விற்றுவிட்டார்களா..

எனக்கு தலைசுற்றியது..எங்கு பார்த்தாலும், இந்தி, மற்றும் சீன மொழிகளில் உரையாடால்கள். நான் 20 இன்டெர்வியூக்கள் அட்டெண்ட் பண்ணியது இன்றுதான் உறைத்தது. என் நாட்டில் எனக்கு வேலை இல்லையா..

“ஹே..ஐ.ஆம் சோப்ரா..யுவர் மேனேஜர்..”

சத்தம் கேட்டு திரும்பி பார்க்கிறேன். என்னுடைய மேனேஜர். அவரும் இந்தியர்தான். இந்த தேசம் அடகுவைக்கப்பட்டுவிட்டதா..கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் அமெரிக்கன் யாரும் காணவில்லை. அதோ, அங்கு ஒரு அமெரிக்கன், கோழிக்குஞ்சு போல நடுங்கி கொண்டு அமர்ந்துருக்கிறானே..அவன் அருகில் சென்றேன். அளவாக சிரித்தான். முகத்தில் சந்தோசம் இல்லை..

“ஹாய்,,ஐ. ஆம் மார்க்..”

“நான் டாம்..”

“ம்..எப்போ சேர்ந்தீர்கள்..”

“போன மாதம்..இன்றுதான் எனக்கு கடைசி நாள்..”

அதிர்ந்து போனேன்.

“ஏன்..என்ன ஆனது..”

“ம்ம்ம்..பெர்மான்ஸ் சரியில்லையாம். இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் சமமாக எனக்கு வேலை செய்ய தெரியவில்லையாம்..ஓ மேன்..தி இஸ் கில்லிங்க்..அவர்கள், ஒருநாளில் 15 மணிநேரம் வேலை செய்கிறார்கள். என்னால் அப்படி முடியவில்லை. என் குடும்பம் உள்ளது. அதை நான் பார்க்கவேண்டுமே….முடியவில்லை..அனுப்பிவிட்டார்கள்..”

அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. எனக்கு சங்கடமாக இருந்தது. ஒன்றுமே சொல்லாமல் என் இடத்திற்கு சென்றேன். அவன் வெளியே போனது, ஒரு வாரத்தில் எனக்கு உறைத்தது. என்னால் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமுடியவில்லை. நான் ஏன் பார்க்கவேண்டும். 6 மணி ஆனால் கூட யாரும் இடத்தை விட்டு போகவில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் என் ஆஞ்சலாவைப் பார்க்கவேண்டும், என்னால் இருக்கமுடியாது. 6 மணி ஆனதும் என் காரை கிளப்பினேன். என் அலுவகத்தில் ஒரு மாதிரி பார்த்தார்கள். சோ வாட்..

வாரம் ஒரு திட்டு என்பது, தினமும் ஒரு திட்டானது. முடிவாக, என் மேனேஜரிடம் இருந்து அந்த வார்த்தை வந்தது..

“சாரி..மார்க்..யூ ஆர் டெர்மினேட்டட்..”

அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. எனக்கு யார் பேசியதும் கேட்கவுமில்லை. செட்டில்மெண்ட் வாங்க கூட பிடிக்கவில்லை. பேசாமல் எழுந்து காரைக் கிளப்பி ஆஞ்சலா வீட்டுக்கு சென்றேன். ஆஞ்சலா வீட்டில் இருந்தாள். கூடவே பக்கத்து வீட்டு சிறுவன். கையில் நோட்டு புத்தகத்தோடு..

“மார்க்..இது பக்கத்து வீட்டு சிறுவன்..ஏதோ வரலாறு படிக்கிறானாம்..டவுட் கேட்டு வந்தான்..அதுசரி..நீ ஏன் டல்லாக இருக்கிறாய்..எனி பிராப்ளம்..”

தலைகுனிந்தேன்..

“ப்ச்..என்ன ஆச்சு..சொல்லு..”

“வேலை போயிடுச்சு..”

“வாட்…”

உறைந்து போனாள். இருக்காதா..இதை நம்பிதான் அவள் கர்ப்பமாகி இருந்தாள். அவளால் வேலைக்கு கூட செல்ல முடியாது. அறை முழுக்க நிசப்தம், 10 நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை. அதை கலைத்தாற் போல பக்கத்து வீட்டு சிறுவன் கேட்டான்..

“ஏஞ்சலா..ஒரு கேள்வி. இதுவரை அமெரிக்கா யாரிடம் அடிமையானதில்லையாமே..”

அவள் சொல்லும்முன்பே நான் முந்திக் கொண்டேன்..சத்தமாக..

“யார் சொன்னது..இந்தியாவிடமும், சீனாவிடமும் அடிமைப்பட்டு எவ்வளவோ வருடங்கள் ஆயிற்று.,..”

Tuesday 5 October, 2010

மிக்சர் ஜுஸ்

இந்த வார விளக்கம்

நான் பிளாக் எழுத ஆரம்பித்தது, சமுதாயத்தை திருத்த வேண்டும் என்ற நோக்கினால் அல்ல. ஏதோ, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி, நம் எண்ணங்களை பகிரலாமே என்ற நப்பாசைதான். இதில் யாரும் எனக்கு எதிரியில்லை. யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்றெல்லாம் எழுதுவதில்லை. அப்படி புண்படுத்தியிருந்தால் கூட, உடனடியாக மன்னிப்பு கேட்பதில் எந்த வித தயக்கமும் இல்லை. சில நண்பர்களின் இமெயிலை பார்க்கும்போது, இது தோன்றியது. அவ்வளவும் கெட்ட வார்த்தைகள், நாயே, பேயே என்ற வார்த்தைகள். ரஜினியை பற்றி விமர்சனம் பண்ணும்போது கூட நாகரிகமாகேவே விமர்சித்திருக்கிறேன். எந்திரனைப் பார்த்து வியந்து பாராட்டி விமர்சனம் எழுதியிருக்கிறேன். இரண்டு வருடங்களாக எழுதும் எனக்கு, கமெண்ட் மாடரேஷன் வைக்கும் துர்பாக்கியம் கடந்த வாரமாகத்தான் கிடைத்தது. எல்லா கமெண்டுகளையும் அனுமதிக்க ஆசைதான், ஆனால் அவை நாகரிகமாக இருக்கும் பட்சத்தில். அப்படி ஆபாச கமெண்ட் எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கண்டிப்பாக என் கருத்தோடு, உங்கள் கருத்து மாறுபட்டிருக்கும். அல்லது ஏற்று கொள்ள முடியாததாக இருக்கும் அவற்றை நாகரிகமாக வெளிப்படுத்தலாமே. என்னை திட்டி என்ன ஆகப்போகிறது. ஒருநிமிடம் சந்தோசமாக இருக்கும். அப்புறம் வேலையை பார்க்க போய்விடுவோம். ஆனால், உங்களுக்கு பிடித்த கருத்தைதான் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்காதிர்கள். என் எண்ணங்களை எழுத எனக்கும் சுதந்திரம் உண்டல்லவா. நாம் எழுதுவதைப் பார்த்துதான் நம் குழந்தைகளும் கற்று கொள்ளும். நம்மால் முடியாவிட்டாலும், நம் சந்ததியினர்க்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுப்போம், (ஆட்டோ மிரட்டலுக்காக எழுதியது என்றெல்லாம் நினைக்ககூடாது..சொல்லிப்புட்டேன்..)

இந்த வார படம்

வேறு என்ன. இந்த வார ஹாட்கேக் எந்திரன் தான். வசூலில் அடிபின்னுகிறது என்று கேள்விபட்டேன். களவானி படத்தில் ஹூரோ சொல்லுவார் “நான் சும்மாவே ஆடுவேன். காலுல சலங்கையை கட்டிவேற விட்டுட்ட..” ரஜினிபடம் என்றாலே கலெக்சன் தான்(பாபா. குசலேனை நினைச்சுக கூடாது). இதுல சன் பிக்சர்ஸ் மார்க்கெட்டிங்க் வேற. 190 கோடி, 380 கோடியாகும் என் கேள்விப்படுகிறேன். தட்டுதடுமாறி சட்டைப்பையில் இருந்து எடுத்த இரண்டு ரூபாய் சில்லறை காசில் தினகரன் வாங்கி படித்த இளைஞர்கள் “எந்தலைவன் அரசியலுக்கு வந்துருவான்..நம்பிக்கை வந்துருச்சு..” என்ற சந்தோசத்தில் இருப்பதாக, ஆட்டோ வீட்டுக்கு வராத இடத்தில் இருந்து வரும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த வார கணிப்பு

எனக்கு என்னமோ இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக எந்திரன் படுகிறது. கொத்து கொத்தாக அவார்டுகளை வெல்லும் என்று முக்குகடையில் இரண்டு ரூபாய் கடலை பர்பி வாங்கி சாப்பிடும்போது கணிக்க தோன்றியது. அவார்டு வாங்கும் என்று நான் கணிப்பவை கீழே..

சிறந்த நடிகர் – ரஜினி(தமிழக அரசு விருது மட்டும்). அரசியலுக்கு வருவேன் என்று இடையில் சொல்லிவிட்டால் அதுவும் பறிபோக வாய்ப்பு உண்டு, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது

சிறந்த டைரக்டர் – சங்கர்

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர் ரகுமான்

சிறந்த கிராபிக்ஸ் – எந்திரன்

சிறந்த ஜனரஞ்சகபடம் – எந்திரன்

சிறந்த தயாரிப்பு – எந்திரன்

சிறந்த சண்டை பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின்

சிறந்த் கலை – சாபுசிரில் – எந்திரன்

இந்த வார நிகழ்ச்சி

கலைஞர் டி.வியில் வரும் நாளைய இயக்குநர் இந்த வாரத்திலிருந்துதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எனக்கு என்னமோ நடுவராக வரும் மதனை விட பிரதாப் போத்தன் தான் பிடித்திருக்கிறது. பிடிக்கவில்லையென்றால், நோ வழவழா கொழகொழா..பட்டென்று சொல்லிவிடிகிறார். ஆனால் சிலநேரம் அது கொஞ்சம் ஓவராக போய்விடுகிறது. இந்த வார நிகழ்ச்சியில் “காதலுக்கு பொய் அழகு” என்ற குறும்படத்திற்கு அவர் அளித்த கமெண்ட் “ஒரு பிட்டு கூட பிடிக்கலை..”. சட்டென்று மாறிய அந்த நாளைய இயக்குநரின் முகத்தை பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இதுபோன்ற அவமானங்கள்தான் “நீரூபிக்கிறேன் பாருடா..” என்ற தூண்டுகோலைதரும். “கருவா நாயே., இயற்பியலில் நீ பாஸாக மாட்ட” என்ற திட்டிய இயற்பியல் ஆசிரியரிடம் 183 மார்க் எடுத்து நீட்டிய என் அனுபவத்தை போல….

இந்த வார பதிவுகள்

சில பதிவுகளை படிக்கும்போது சட்டென்று ஈர்த்து கொள்ளும். சிலநேரம், கவலைகளை மறந்து சிரிக்க சொல்லும். அப்படி படித்த பதிவுகள்.

  1. சுரேஷ் கண்ணின் இந்த பதிவு http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post.html

வித்தியாசமான எழுத்து நடை. புரிய கொஞ்சம் கஷ்டமாக

இருக்கலாம். ஆனால் கருத்து ஒவ்வொன்றும் நெஞ்சில்

பதிகிறது. .


2. லக்கிலுக்கின் இந்த பதிவு – என்ன ஒரு கிண்டல்

மனுசனுக்கு. கூடவே பொறந்ததுன்னு நினைக்கிறேன்.

http://www.luckylookonline.com/2010/10/blog-post.html

3. பன்னிக்குட்டி ராமசாமியின் இந்த பதிவு – கொஞ்சம் ஓவர் நக்கலாக தோன்றினாலும்,

படித்தவுடன் சிரித்து விட்டேன்.

http://shilppakumar.blogspot.com/2010/10/blog-post.html

Sunday 3 October, 2010

எந்திரனும் கருப்பாயி கிழவியும்

கருப்பாயி கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் ஏன் இப்படி இருக்கிறான். இவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது. கன்னத்தில் கைவைத்து உக்கார்ந்து விட்டாள்.

“ஏ..என்ன கிழவி..இப்ப என்ன கப்பலா கவுந்து போச்சு..இப்படி கைவைத்து உக்கார்ந்து கிடக்க..” பக்கத்து வீட்டு ஜெயராசு

“வாங்கண்ணே..நீங்களாவது இந்த அநியாயத்தைக் கேட்ககூடாதா..”

“என்ன நடந்து போச்சுங்குறேன்..”

“இந்த பயபுள்ள வினோத்து..இப்படி இருக்கானே..நான் என்னத்த சொல்ல..ஏதோ ரசினி படம் ரீலீஸாமாம்..காலங்காத்தால 1 மணிக்கெல்லாம் கிளம்பி போயிட்டாங்குறேன்…”

“ஏ..எப்பே கிழவி..இப்ப எங்கிட்டு போனான்..படத்துக்குதானே போனான்..இம்புட்டு சலிச்சுக்குறேயே…”

“ஜெயராசண்ணே..எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லிப்பிட்டீக..உங்களுக்கே தெரியும்., அவனை நம்பிதான் வீட்டுல கஞ்சி குடிக்கிறோம். அவன் டெய்லி சம்பாதிச்சு வர்லைன்னா, வீட்டுல சோறு பொங்குமா..”

“ஏ..கிழவி..இதுக்குபோயி ஏன் மூக்கை சீந்துற..இப்ப என்ன நடந்துச்சு..இளவட்ட பசங்க..அப்படிதான் இருப்பாய்ங்க..அது என்ன நம்ம காலமா..இந்த காலபுள்ளைங்களாம், அப்படிதாங்குறேன்..இந்தா..என் வீட்டுல இருக்கான் பாரு. முந்தாநேத்தே கிளம்பிட்டான்..அட கடவுட் வைக்கிறதென்ன..சீரியல் செட்டு போடுறதென்ன..பம்பரமா சுத்துறாங்குறேன்..நம்ம சொல்லி எங்க கேக்க போறாயிங்க..அந்த காலமெல்லாம் வேறங்குறேன்..”

“அட நீங்க வேறண்ணே..நான் என்ன படம் பார்க்கவேணாமுன்னு சொல்லுறேன்..நல்லா வேளைவெட்டியை முடிச்சுபுட்டு, ஒரு கஞ்சியை கிஞ்சியை குடிச்சுப்புட்டு மெதுவா தியேட்டருக்கு போயி பார்க்கட்டும்..நான் என்ன கட்டியா வைக்கிறேன்..அதென்ன முத நாளிலே பார்க்கணும்..போன தடவை இப்படித்தான், கூட்ட நெரிசிலலே நின்னு, டிக்கெட் வாங்குறோமுன்னு போலிசு அடிச்சதுல்ல, முட்டி பேந்து வந்தப்ப, என் உசிரே போயிடுச்சு தெர்யுமாண்ணே..பயபுள்ள தூக்கத்துல வலிதாங்கம “யம்மா, யம்மா” கத்துனதுல..ஆத்தி என் நெஞ்சு கொலயே வெடிச்சுறும் போல இருந்துச்சு..பெத்த வயிறுண்ணே…”

“ஏ..யப்பே கிழவி..ஆ, ஊ ண்ணா அழுதுருவியே..இப்ப உனக்கென்ன குறைச்சலுங்குறேன்..நல்லாதானே உன் புள்ள பார்த்துக்குறான்..”

“கஷ்டமா இருக்குண்ணே..ஒரு டிக்கெட்டு ஆயிரம் ரூபாய்ம்ணே..புள்ள பாவம், மில்லுல ராத்திரி, பகலும் செத்த பாடா பட்டு, ஒரு வாரமா சம்பாதிச்ச காசுண்ணே..அந்த ஆயிரம் ரூபாயை சம்பாதிக்குறதுக்குள்ள, அவன் படுற பாடு இருக்கே..தெய்வம் சொல்லி மாளாதுண்ணே..ஆத்தி..ஒரு நிமிசத்துல செலவழிச்சிப்புட்டாண்ணே..ஏண்ணே, ஒரு டிக்கெட்டு ஒரு அம்பது ரூபா வந்ததும் போகக்கூடாது..”

“ஓய் கிழவி..நீ இன்னும் அந்த காலத்துல இருக்கியே..புள்ளைங்கள அதுக பாதையில விட்டுப்புடணும்..சும்மா கயிற போட்டு இழுக்க கூடாது..சரி..சரி..அவளுக்கு உடம்பு முடியலையாம்..காபி தண்ணி கேட்டா..முக்கு கடைக்கு வரைக்கும் போயிட்டு வர்றேன்..”

“தப்பா எடுத்துக்காதீங்கப்பூ..அவன் வேற வீட்டுல இல்லியா..சோறு பொங்கணும்..அரிசி தீர்ந்து போச்சு..ஒரு எட்டு வாங்கிவரலாமுன்னா, இந்த வெயிலுல நடக்க முடியலை..கிறுகிறுன்னு வருது..ஒரு குவளை அரிசி கொடுக்கீகளா..பய வந்தவுடனே, கொண்டாற சொல்லுறேன்..”

“ஏ ஆத்தா..இதுக்கு போயி இம்புட்டு தயங்குற.நீ போயி குவளைய எடுத்துட்டு வா..”

கருப்பாயி கிழவி, எழுந்து வீட்டுக்குள் போனாள். டி.வியில் சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது..

“கமான்…கெட் ரெடி போக்ஸ்…”

Saturday 2 October, 2010

எந்திரன் – கெட் ரெடி போக்ஸ் – விமர்சனம்

நான் ஏற்கனவே “எந்திரன் பார்ப்பேன்” என்று சொல்லியபடி, இன்று எந்திரன் பார்த்தேன். அமெரிக்காவில் எங்கள் ஊரில் ஒரே நாளில் மூன்று ஷோக்கள் என்று தியேட்டரே களை கட்டியிருந்தது. டிக்கெட் வாங்குமிடத்தில் வைத்திருந்த எந்திரன் பேனரில் “ரஜினி பேன் கிளப்” என்று கட்டப்பட்டிருந்த பேனரைப் அமெரிக்கர்கள் வித்தியாசமாக பார்த்து சென்றார்கள். சில ரசிகர்கள், ரஜினி படம் பொறித்த எந்திரன் பனியனை, இதற்காகவே ஆர்டர் செய்திருந்தார்கள். அமெரிக்கர்களுக்கு இந்த அனுபவமே வித்தியாசமாக இருந்திருக்கும்.

படம் தொடங்கியதும், ஒருவர் எழுந்து “சூப்பர்ஸ்டார் வாழ்க” என்று கத்தவே எல்லோரும் ஒரே ஆராவாரம். எல்லார் முகத்திலும் சந்தோசத்தைப் பார்க்க இன்னும் சந்தோசமாக இருந்தது. முதல் நாளிலே டிக்கெட் வாங்கிட்டோம்ல என்ற பெருமிதம் நிறைய பேரிடம் காண முடிந்தது.

இனி விமர்சனம். ஏறக்குறைய 60 எந்திரன் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அனைத்து பேரும் படத்தின் கதையை அலசி காயப்போட்டுவிட்டதால், நானும் அதை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. படத்தைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை எழுதவே விரும்புகிறேன்.

இந்தியாவிலும் ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கமுடியும் என்று நிரூபிப்பதற்காகவே வந்த படம் என்று சொல்லலாம். எந்த பஞ்ச் டயலாக், பில்டப்புகள், ஓபனிங்க் சாங்க் இல்லாமல் ரஜினியைக் காண்பிக்கும்போதே கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று உணரத் தொடங்குகிறோம். சங்கரின் ஆளுமையும் அதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வசீகரன் ரஜினி 10 வருட ஆராய்ச்சி முடிவாக, “சிட்டி” என்ற ரோபோவைக் கண்டுபிடிக்க படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.

படத்தின் உயிர்நாடி ரஜினி. ரஜினியைத்தவிர இந்தப் படத்திற்கு யாரையும் யோசித்து பார்க்கமுடியவில்லை. சிட்டி ரோபாவாக வந்து கலக்குவதாகட்டும், வில்லன் ரோபாவாக வந்து “மே..மே..” என்று பழிப்பு காட்டுவதாக ஆகட்டும், பழைய மூன்று முகம் ரஜினியை திரையில் பார்க்கமுடிகிறது. சங்கர் சொல்லுவதைக் கேட்டு, அப்படியே நடித்து எல்லோர் மனதையும் அள்ளிவிட்டு போகிறார். அதுவும் வில்லன் ரஜினி பண்ணும் அட்டகாசத்தில் தியேட்டரே அதிர்கிறது. இந்தப் படத்தில் முழுவதும் வேறுமாதிரியான ரஜினியைப் பார்க்க முடிவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

ஒவ்வொரு பிரேமிலும் டைரக்டர் சங்கரின் கைவண்ணம் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டம். ஒவ்வொருவர் உழைப்பும் காட்சிக்கு காட்சி வெட்டவெளிச்சம். இது ரஜினி படமா, சங்கர் படமா என்று கேட்டால், சங்கர் படம் என்று சொல்லலாம். அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு தெரிகிறது. ரோபா என்ற சயன்டிபிக்கான கதையை எல்லோருக்கும் புரியும்படி எடுத்த சங்கர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் என்றே சொல்லலாம்.

நான் ஏற்கனவே எந்திரன் பாடல் விமர்சனத்தில் சொல்லியபடி அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் அடித்திருக்க, படக் காட்சிகளோடு பார்க்க கலக்கல். எனக்கு பிடித்த காதல் அணுக்கள், பூம் பூம் ரோபோடா, இரும்பிலே ஓர் இருதயம், அனைத்தும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான், இதற்குமேல் என்ன சிறப்பான இசையைக் கொடுக்கமுடியும். ஹேட்ஸ் ஆப்..

பொதுவாக ரஜினி படங்களில் கதாநாயகிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை எனலாம். உலக அழகி, ஐஸ்வர்யாராயை திரையில் பார்க்கும் அனைவரும் சொக்கிபோகிறார்கள். நண்பர் ஒருவர் , ஐஸ்வர்யாராய் கோபப்படும்போதெல்லாம் கோபப்படுகிறார். அழும் போது, கலங்கி போகிறார். சிரிக்கும்போது சிரிக்கிறார். ஐஸ்வர்யா பச்ச்ன் என்று பேர் போடும்போது பெருமூச்சு விடுகிறார். எனக்கு என்னமோ, அவரைப் பார்த்துதான் “கபர்தார்” என்று சொல்லத் தோன்றியது.

அடுத்த பாராட்டுகள் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. பிரைம் நம்பர், பிபோனாசி , ஜிகா பைட், டெரா பைட் என்று சொல்லும்போது அவரே மனதில் தெரிகிறார். சீக்கிரம் இழந்துவிட்டோமோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. வசனங்கள் முழுவதும் சுஜாதா வாசனை.

அடுத்த பாராட்டுகள் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும். எல்லோரிடமும் சங்கர் பாராபட்சம் பார்க்காமல் வேலை வாங்கியுள்ளார். கலை சாபு, சண்டைப் பயிற்சி பீட்டர்,கிராபிக்ஸ் துணைநடிகர்கள் என்று அனைவரும் தத்தம் வேலையை செவ்வனே செய்துள்ளனர். கடைசி அரைமணிநேரம் வரும் கிராபிக்ஸ் காட்சிகள், இந்திய திரைப்படத்திற்கு புதுசு. சற்று நீளமாக இருந்தாலும், இதுபோன்ற சயண்டிபிக் படங்களுக்கு இது அவசியமாகிறது.

அடுத்து குறைகள்

1) சங்கர் படத்தில் வரும் லாஜிக் மீறல்கள்(கிளைமாக்ஸிஸ் அவ்வளவுபேர் சுட்டும், ஐஸ்வர்யாராய்க்கு ஒன்றும் ஆகாதது, அவ்வளவு கஷடப்பட்டு செய்த ரோபோவை குப்பையில் போடுவது…இது போன்ற காட்சிகளில், ரசிகர்கள் காதில் பூ..)

2) மொக்கையான வில்லன்(யாரோ சிக்கிம் நடிகராம்..இன்னும் நல்ல நடிகராக தேர்வு செய்திருக்கலாம்)

3) விஞ்ஞானி ரஜினிக்கு மேக்கப். முதல் காட்சியில் ஒட்டுதாடி அப்படியே தெரிகிறது. 190 கோடி செலவழிக்கும்போது, இதற்கும் ஏதாவது செய்திருக்கலாம். எனக்கு என்னமோ மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரஜினியை இன்னும் இளமையாக காட்டியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது)

4) சுஜாதாவுக்கும், அனிபாவுக்கும் ஒரு மரியாதைக்காகவாது, ஒரு அஞ்சலி செலுத்தியிருக்கலாம்.

எனக்கு தெரிந்த மேலே உள்ள நான்கு குறைகள்தான். அனைத்தும், ரஜினி, மற்றும் சங்கரின் ஆளுமைகளில் மறைந்து போகிறது.

இறுதியாக, எந்திரன்..தமிழ் ரசிகர்களுக்காக ஒரு ஹாலிவுட் படம்..ரஜினி ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து. கெட் ரெடி போக்ஸ்…